20 November 2014

தொ(ல்)லைக்காட்சியும் அதன் விபரீதங்களும்


றைவன் இவ்வுலகில் மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஏற்ப்பாடுகளையும் அழகான முறையில் அமைத்துள்ளான்.
இன்றைய உலகம் முன்னேற்றப்பாதையில் வீறுநடை போட்டுகொண்டிருக்கிறது அந்த அடிப்படையில் மின்னணு சாதனங்கள் அவசிய தேவையாகிவிட்டது.
முந்தய காலத்தில் யோசித்து பார்த்திராத எத்தனையோ படைப்புகள் இன்றைக்கு சர்வசாதரணமாக பயன்படுத்தப்படுகிறது.
முன்னரெல்லாம் வெளியூருக்கு சென்றவர்களிடத்திலிருந்து தகவல் பெறுவதற்கே வெகு நாட்களாகும்.ஆனால் இன்று நமது கைகளில் தொலைபேசிகளும் அலைபேசிகளும் நம்முடைய வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டன.
அத்தகைய அறிவியல் கண்டுப்பிடிப்பில் ஒன்றுதான் நம் வீடுகளில் அன்றாட அவசிய தேவையாக கருதப்படுகின்ற (சின்னத்திரை)தொ(ல்)லைகாட்சியாகும். புது வீடு கட்டி வீட்டுசாதனங்கள் வாங்கும்போழுது தொலைக்காட்சிப்பெட்டியும் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.இதன் இன்றைய அதிவேக வளர்ச்சியின் முக்கிய காரணம் மனிதனின் தகவலறியும் தாகமும், பொழுதுபோக்கும் சிந்தனயுமாகும்

தொலைகாட்சி அறிமுகம்
உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும்போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் சாதனம் தொலைக்காட்சி. தத்ரூபமாகவும் மிகைப்படுத்தாமலும் காட்டக்கூடிய மகிமையும் சிறப்பும் தொலைக்காட்சிக்கு உண்டு.  1922ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலைக் கேட்க முடியுமா?! என்று அதிசயித்த உலகம் அடுத்த நான்கே ஆண்டுகளில் ஒரு பெட்டியில் குரலைக் கேட்பதோடு உருவங்களையும் பார்க்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்த்திருக்காது. ஆனால் கற்பனை செய்பவர்கள்தானே கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்கள். ஒரு பெட்டிக்குள் ஒலியையும், ஒளியையும் காட்ட வேண்டும் என்று கற்பனை செய்து கனவு கண்டு தொலைக்காட்சி என்ற உன்னத சாதனத்தை உலகுக்குத் தந்தவர்  John Logie Baird.                                    வானொலியின் தந்தை  Marconi  என்றால்                  தொலைக்காட்சியின் தந்தை Baird. 
1888 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 13ந்தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு அருகில் ஹெலன்ஸ்பர்க் என்ற இடத்தில் பிறந்தார் ஜான் லோகி பேர்ட். நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. . இவருடைய  2௦ வருட உழைப்பிற்கு பிறகு அதாவது 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ந்தேதிதான் உலகுக்கு தொலைக்காட்சி கிடைத்த நாள் .இவை அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளம் எனலாம.

தொலைக்காட்சியின் பயன்கள்
கல்வி, தொழில் நுட்பம், ஆன்மிகம், தகவல் தொடர்பு போன்ற நன்மைகளை இவற்றின் மூலம் நாம் பெற முடிகிறது. அவற்றுடன் நமது அணுகுமுறை எவ்வாறு அமையுமோ அதைப் பொறுத்தே அவை நன்மையா தீமையா என்று முடிவு செய்ய முடியும்.
தொலைக்காட்சியின் இன்றைய நிலைமை
 நன்மைகளைவிட ஆபாசம், வன்முறை, கொலை, கொள்ளை, விபசாரம் போன்ற தீய செயல்களுக்கு வித்திடும் நிகழ்ச்சிகளில்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் கவனம் செலுத்துகின்றன. மதுவுக்கும் சூதாட்டத்திற்கும் இறைவன் சொல்கின்ற அதே அளவுகோல்தான் إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ - அதாவது கால் பங்கு நன்மை முக்கால் பங்கு தீமை என்பது தொலைக்காட்சிக்குக் கனக்கச்சிதமாகப் பொருந்துகிறது. நமது நேரத்தை தொலைக்காட்சி விழுங்கிவிடுகிறது. அறிவை மழுங்கடித்துவிடுகிறது. பண்பாடுகளையும் ஒழுக்க மாண்புகளையும் சிதைத்துவிடுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மிகச் சில நிகழ்ச்சிகள் நீங்கலாக மற்ற நிகழ்ச்சிகள் யாவும் பெரும் சீரழிவை ஏற்படுத்துகின்றன.


தொலைக்காட்சியின் பயன்கள் தொலைக்காட்சியினால் ஒரு பயனும் கிடையாது என்று அடியோடு மறுப்பதற்கில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல நிகழ்ச்சிகளும் காண முடிகிறது.             செய்திகளை தெரிந்துகொள்கிறோம். (ஆனால், அதிலும் இயக்கம், கட்சி சார்பு பிரச்சினைகள் உண்டு.)

டிஸ்கவரி, அனிமல் பிளாண்ட் போன்ற சேனல்களில் இறைவனின் படைப்பாற்றலைக் கண்டு வியக்க நேர்கின்ற நிகழ்ச்சிகள் சில அவ்வப்போது வருகின்றன.                                             பெரும்பான்மை சேனல்களில் காலை வேளையில் மிகச் சில பயனுள்ள நிகழ்வுகள் வழங்கப்படுகின்றன.                             முழுக்க முழுக்க பயனுள்ள நிகழ்வுகளை மட்டுமே தயாரித்து வழங்கும் சேனல்களுக்கு நம்மிடம் வறவேற்பே கிடையாது. அப்படியான சேனல் அரிதிலும் அரிது.                                                      T V லேயே தொலைந்து போகும் சமூகம்                    وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3)



இன்றைய குடும்பங்கள் தொலைக்காட்சிப் புதைகுழியில் சிக்கிச் சிதைந்துவருகின்றன. சிறியவர் பெரியவர் வேறுபாடின்றி அனைவரும் அதன் முன்னால் தமது பொன்னான நேரத்தைக் காவு கொடுத்துவருகின்றனர். நிகழ்ச்சியின் நடுவில் யார் வந்தாலும் அவர்களைத் தொந்தரவாகவே பார்க்கின்ற மனோபாவம் ஆழமாக வேரூன்றியுள்ளது. முக்கியமான நிகழ்ச்சி(?) ஓடிக்கொண்டிருக்கும்போது உறவினர்களோ நண்பர்களோ வந்துவிட்டால் அவர்கள் வேண்டா விருந்தாளியாகவே வரவேற்கப்படுவர். தொலைக்காட்சியை அணைத்துவிடாமல் வந்தவர்களை உட்காரச் சொல்லி அவர்களிடம் கடனுக்காக ஓரிரு வார்த்தைகளைப் பேசிவிட்டு மறுபடியும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவர். அடுத்தக்கட்ட விசாரிப்பு, விருந்தோம்பல் எல்லாம் அடுத்தடுத்த சிறிய விளம்பர இடைவேளைகளின்போதுதான். காலையில் அவசர அவசரமாக எழுந்து குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு, சில நேரங்களில், “சாரி, லேட்டாயிடுச்சு, இன்னைக்கு பகல் சாப்பாடு வெளியில் பாத்துக்கோங்கஎன்று சொல்லி புருஷனை அலுவலுக்கு அனுப்பிவிட்டு வேகவேகமாக குக்கரை அடுப்பில் ஏற்றிவிட்டு, டி.வி. சீரியலில் மூழ்கத் தொடங்கும் பெண்கள் இரவுச் சாப்பாட்டிற்கு கணவர் வந்தாலும், “இதோ, இருங்க, இந்த நாடகத்தை முடிச்சிட்டு வந்திடுறேன்என்று சொல்லும் அளவுக்குத்தான் இருக்கிறது எதார்த்தம். அடுப்பில் வேகவைத்த உணவு சமயத்தில் அடிப்பிடித்து கரிந்த வாடை வந்த பிறகுதான் பலருக்கு நினைவே வருகிறது. தொலைக்காட்சி என்பது நமது நேரத்தை விழுங்கும் இரத்தக் காட்டேறி. நமது நேரத்திற்கு நாமே வைத்துக்கொள்ளும் வெடிகுண்டு என்பதைப் பின்வரும் புள்ளிவிபரத்தின் மூலம் எளிதில் விளங்கலாம்: ஓர் அமெரிக்கக் குடிமகன் சராசரியாக தினந்தோறும் மூன்றேமுக்கால் மணி நேரம் டி.வி. பார்க்கிறான். ஒருவரின் அறுபத்தைந்து ஆண்டு கால ஆயுளில் சுமார் ஒன்பது ஆண்டுகள் தொலைக்காட்சிக்கு முன்னால் கழிகிறது. இப்படி அவன் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக இருபது லட்சம் விளம்பரங்களைக் காண நேர்கிறது. இதுவே மிதமிஞ்சிய ஷாப்பிங் அடிமைத்தனத்திற்குத் தங்களை ஆட்படுத்தியதாக அவர்களில் 82 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்றால் அது இதுதான். ஒரு குழந்தை வாரத்திற்கு 1680 நிமிடங்களை (28 மணி நேரம் - சராசரியாக நாளொன்றுக்கு 4 மணி நேரம்) தொலைக்காட்சியில் கழிக்கிறது. இதனால் பெற்றோருடன் பேச மிகக் குறைந்த நேரத்தைத்தான் (38 நிமிடங்கள் - சராசரியாக நாளொன்றுக்கு 6 நிமிடத்திற்கும் குறைவு) அக்குழந்தை பெறுகிறது. சிறுவர்கள் பள்ளிக்கூடத்தில் ஓராண்டுக்கு 900 மணிநேரத்தை (150 பாடநாட்கள் X 6 பாடவேளைகள் = 900 மணிநேரம்) கழிக்கிறார்கள். ஆனால், அவர்கள் தொலைக்காட்சிக்கு முன்னால் கழிக்கின்ற நேரமோ ஆண்டுக்கு 1023 மணிநேரம் (சராசரியாக நாளொன்றுக்கு 2 மணிநேரத்திற்கும் கூடுதல் - 365.25X2.8=1022). உயர்நிலை வகுப்பை முடிக்கும் மாணவன் ஒருவன் 16 ஆயிரம் மணிநேரம் முதல் 19 ஆயிரம் மணிநேரம் வரை (சுமார் 2 ஆண்டுகள்) தொலைக்காட்சி பார்த்த அனுபவம் பெற்றவனாக அப்பருவத்தை அடைகிறான். (ஒற்றுமை மாத இதழ், ஜூன் - 2001) இது அமெரிக்காவின் நிலவரம்தானே என்று நினைக்காதீர்கள். நாமும் அப்படித்தான் இருக்கிறோம்.                                                        சீரியல் அது வெரி சீரியஸ்                                     
 மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் சீரியல் இரவு 11 மணிவரையிலும் தொடச்சியாக தன ஆதிக்கத்தை செலுத்துகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்களே அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். (அதனால்தானோ என்னவோ சன் நெட்வொர்க் நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே வளைத்து வளைத்து சேனல்களைத் தொடங்குகிறது. மற்ற மாநிலங்களைக் கண்டுகொள்வதில்லை.) தென்னிந்தியர்களிலும் தமிழர்களே முன்னணியில் உள்ளனர். தமிழக மக்கள் சராசரியாக நாளொன்றுக்கு ஆறரை எபிசோடுகளைப் பார்க்கின்றனர். இதுவே கேரளத்தில் நான்கு எபிசோடுகளாக உள்ளது. பிற்பகல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும் கேரளம் கர்நாடகத்தைவிட தமிழகமே முன்னிலை வகிக்கிறது. அதிலும் பெண்களே முதலிடம் வகிக்கின்றனர். (தனியார் நிறுவன புள்ளி விபரம்) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் சாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் குடும்பம், உறவுகள், மானமரியாதை, வெட்க உணர்வு, இறைபக்தி, நல்லொழுக்கம், மனிதாபிமானம் ஆகிய அடிப்படைகளை அவசியம் அற்றவையாகவும் பிற்போக்குத்தனங்களாகவுமே சித்தரிக்கின்றன. கண்டவனோடு காதல் வயப்படுவதையும் பெற்றோரை எதிர்த்து குடும்ப கௌரவத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு அந்நியனோடு ஓடிப்போவதையும் படிக்கும் பருவத்தில் பாய் ஃபிரண்ட் கேர்ள் ஃபிரண்ட் அவலங்களையும் நியாயப்படுத்துகின்றன. கட்டுப்பாடுகளற்ற முற்றிலும் அவிழ்த்துவிடப்பட்ட சுதந்திரத்தைப் பிறவிப் பயனாகவும் வாழ்க்கையின் இலட்சியமாகவும் காட்டுகின்றன.                      இசை, சங்கீதம், ஆண்-பெண் பாலினக் கவர்ச்சி, இரட்டை அர்த்தம் தொனிக்கும் கீழ்த்தரமான பாடல்கள், பாலியல் உணர்ச்சியைக் கிளறும் அருவருப்பான ஆடல்கள், மூடநம்பிக்கைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகள் போன்றவையே தொலைக்காட்சியின் முழுநேரப் பணிகள் ஆகும்.  


அன்றாட அமல்கள் வீணாகின்றன       


 பாழாய்போன TV யினால் அன்றாட அமல்கள் என்னவென்றே தெரியாமல் மடமையில் இருந்து கொண்டிருக்கிறோம்.       மாலைநேர திக்ருகள்,அவ்ராதுகள்,மக்ரிப் தொழுகை அதன் பிறகு குர்ஆன் ஓதுதல் குழந்தைகள் வீட்டுப்பாடங்கள் செய்வது.           சிறு குழந்தைகளுக்கு முன்னோர் பெரியோர்களின் கதைகள் சொல்வது. இதெல்லாம் தொலைந்து போய்விட்டன .அதற்கு பதிலாக ஆபாசக்காட்சிகள்,நாட்டிய நடனங்கள் கொச்சையான வார்த்தைகளைக்கொண்ட பாடல்கள் வீடே அதிரும் அளவுக்கு இசை தாளங்கள் சிலநேரம் பக்கத்துக்கு வீட்டில் நொந்துகொள்ளும் அளவுக்கு கூட அமைந்து விடுகிறது.                                                        
 பெண்களை கொச்சைப்படுத்துகிறது.                        நெடுந்தொடர்கள் (மெகா சீரியல்) நெடுந்தொடர்களின் மையக்கரு பெரும்பாலும் பெண்களைச் சுற்றியே அமையும். பெண்மையின் பெருமையை விளக்க அல்ல. அவர்களின் இயல்பான பலவீனங்களைக் கொச்சைப்படுத்தத்தான்.     

  •   பொறாமையின் வடிவமாய் சில பெண்கள்                                    கொடுமைக்காரிகளாய் சில பெண்கள்                                        பழிக்குப் பழி வாங்கும் அரக்கிகளாய் சில பெண்கள்                          அரிவாளை ஏந்தி கொல்லத் துடிக்கும் தீவிரவாத உருவில் சில பெண்கள்                                                                                     கல்யாணமான சம்சாரியை வளைத்துப்போடும் இழிவான முயற்சியில் சில     பெண்கள்                                                                    வஞ்சனை, சூது, துரோகம் போன்ற வக்கிர எண்ணங்களின் கோர வடிவமாய் சில பெண்கள்                                                                  எப்போதுமே அழுது வடியும் அசமந்தங்களாய் சில பெண்கள் இப்படியாக நீளும் நெடுந்தொடர்களே அதிகம். அதிலும் மாமியார்-மருமகள், நாத்தனார் உறவுகள் என்றால் கீரியும் பாம்புமாகத்தான் இருக்க வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தியதில் இந்த நெடுந்தொடர்களுக்குப் பெரும் பங்குண்டு. மாமியாரும் மருமகளும் ஒருவரையொருவர் கொல்லத் திட்டமிடுவார்கள். இதில் நாத்தனார் மாமியாருக்கு உடந்தையாக இருப்பாள். ஏன், மாமியாரைப் பெற்ற தாயாக மதிக்கின்ற மருமகள்களும் மருமகளைப் பெற்றெடுத்த பிள்ளையாகக் கருதும் மாமியார்களும் உலகத்தில் இல்லவே இல்லையா? பிறகேன் குடும்பச் சண்டையை மட்டுமே வளைத்து வளைத்துக் காட்ட வேண்டும்? இதைப் பெண்களே மெய்மறந்து பார்ப்பது மகா மட்டமான ரசனை. இவை நெடுந்தொடர்கள்அல்ல. கொடுந்தொடர்கள்’. இவற்றை ஒளிபரப்பும் கருவி தொலைக்காட்சிப் பெட்டிஅல்ல. கொலைக்காட்சிப் பெட்டி’.    விளம்பரங்களில் கூட ஆபாசம்                               சோப்பு, பிளேடு போன்றவற்றின் விளம்பரங்களில் பெரும்பாலும் அருவருக்கத் தக்க அரைநிர்வாண கோலமே அடிக்கடி காட்டப்படுகிறது.  ஜீரணிக்க இயலாத விளம்பரங்களும் வருவதுண்டு. ஒரு சிறுவன் கார் பொம்மையைத் தொலைத்துவிடுவான். அம்மாவிடம் வேறு கார் கேட்பான். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் விருந்தாளி ஒருவர், “நான் வாங்கித் தருகிறேன்என்பார். சிறுவன், “நீங்கள் ஏன் எனக்கு வாங்கித் தர வேண்டும்? நீங்கள் என்ன எனக்கு அப்பாவா?” என்று கேட்பான். விருந்தாளி, “அப்பா தொலைஞ்சி போயிட்டா?” என்று கேட்பார். சிறுவன் முழிப்பான். விருந்தாளி, “அப்பா தொலைஞ்சி போயிட்டாலும் உனக்குக் கார் நான் வாங்கித் தருவேன்என்பார். அந்த நேரம் பார்த்து ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனி பெயர் வரும். இது எவ்வளவு அபத்தமான விளம்பரம் பாருங்கள். அப்பா தொலைஞ்சிபோயிட்டாஎன்றால் அப்பா செத்துப்போயிட்டா என்று பொருள். ஒரு குழந்தையிடம் இதைச் சொல்வது எவ்வளவு பெரிய குரூரம். அப்பாவே கைவிட்டாலும் நான் கைவிடமாட்டேன் என்ற எண்ணத்தை, இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒரு குழந்தையின் மனதில்விதைப்பது உலக மகா மோசடி இல்லையா?  பெருமானார்(ஸல்)அவர்கள் இந்த மாதிரியான விஷயங்களை எந்தளவு தெள்ளத்தெளிவாக எச்சரித்துள்ளார்கள் என்பதைப்பாருங்கள்,                                                           عن أبي هريرة، رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: "كُتِبَ على ابن آدم حَظّه من الزنى، أدرَكَ ذلك لا محالة. فَزنى العينين: النظر. وزنى اللسان: النطقُ. وزنى الأذنين: الاستماع. وزنى اليدين: البطش. وزنى الرجلين: الخطى. والنفس تمَنّى وتشتهي، والفرج يُصَدِّق ذلك أو يُكذبه".رواه البخاري  6343



ஆதமுடைய மகனின் பங்கில் விபச்சாரம் புரிந்த குற்றம் எழுதப்படும்,கண்களுடைய விபச்சாரம் (தீய ) பார்வை, நாவின் விபச்சாரம்(ஆபாச)பேச்சு,காதுகளின் விபச்சாரம் (தீயதை)கேட்பது, கைகளின் விபச்சாரம் (தடுக்கப்பட்டதை) பிடிப்பது,கால்களின் விபச்சாரம் (தீயப்பாதையில்)நடப்பது உள்ளத்தின் விபச்சாரம்(தீயதை) விரும்புவது ஆசைப்படுவது, மர்ம உறுப்பு அதை உண்மை படுத்தும் பொய்மை படுத்தும்.     

 -    (விளம்ரங்களால் நுகர்வு வெறி) திட்டமிட்டு மக்களிடம் திணிக்கப்படுகிறது. தேவையே இல்லாமல் பொருட்களை வாங்கிக் குவிக்கும் நோய் இன்றைக்கு மக்களைப் படாதபாடு படுத்திவருகிறது. பல பேரிடம் உங்கள் பொழுதுபோக்கு என்ன என்று கேட்டால்,    ஷாப்பிங் என்றே சொல்கிறார்கள். அதாவது தேவைக்கு வாங்கியதெல்லாம் அந்தக் காலம். பொழுதைப் போக்குவதற்காகவே கடைகளுக்குப் பொருள் வாங்கப்போவது என்றால் அது நுகர்வு வெறியின்றி வேறென்ன? மிதமிஞ்சிய ஷாப்பிங் அடிமைத்தனத்திற்குத் தங்களை ஆளாக்கியது தொலைக்காட்சி வர்த்தக விளம்பரங்களே என்று அமெரிக்கர்கள் 82 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மற்ற நிகழ்ச்சிகள் - கேம் ஷோக்கள் (தங்க வேட்டை, ஒரு கோடி வெல்லலாம், ஒரு வார்த்தை ஓஹோன்னு வாழ்க்கை, குரோர்பதி, ஜாக்பாட் போன்றவை). இவை செல்வத்தின் மீதான மோகத்தையும் வெறியையும் உருவாக்கவே வழி வகுக்கின்றன. நிகழ்ச்சியின் முடிவில் நேயர்களை எஸ்.எம்.எஸ். அனுப்பச் சொல்லி அவர்களிடமிருந்து காசு கறக்கும் கயவாளித்தனமும் இதில் உண்டு. இதை நாம் கண்டுகொள்வதில்லை. –                                                இன்று தொலைக்காட்சியென்றால் ஆபாசமே   
إن النظر سهم من سهام إبليس مسموم        
பார்வையகிறது இப்லீசுடைய விசம் தேய்க்கப்பட்ட அம்புகளிளிருந்து ஒரு அம்பாகும் .             
 சினிமா படங்கள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள். இவை எல்லாமே கதையைவிட சதைக்கே முக்கியத்துவம் தருபவை. கேவலம், படிக்கும் குழந்தைகளையும் இளைஞர்களையும் அசைவப் பாட்டுகளுக்கு அருவருப்பான முறையில் ஆடவும் பாடவும் வைத்து மதிப்பெண் வழங்குகிறார்கள். - நகைச்சுவை நிகழ்ச்சிகள். பெரும்பாலும் உதைப்பது, நையப்புடைப்பது, அடிவாங்குவது, உளறுவது, போதையில் தள்ளாடுவது, நையாண்டி செய்வது, ஏமாறுவது, ஏமாற்றுவது, விரசமாகப் பேசுவது உள்ளிட்டவையே நகைச்சுவை காட்சிகளாகக் காட்டப்படுகின்றன. - விவாத நிகழ்வுகள், டாக் ஷோ. இவற்றில் பெரும்பாலும் காதல், பாய் ஃபிரண்ட், கேர்ள் ஃபிரண்ட், ஷாப்பிங், அழகு, சினிமா, நகைகள் போன்றவையே விவாதப் பொருள்களாக எடுக்கப்படுகின்றன. மிகச் சில நேரங்கள் தவிர பெரும்பாலும் அந்த விவாதங்கள் பயனற்றவையாகவே முடிந்துவிடுகின்றன. சில நேரங்களில் தவறான வழிகாட்டல்களுடன் அந்த விவாதங்கள் முடிக்கப்படுவதும் உண்டு.  புகை பிடிப்பது எப்படி மது அருந்துவது எப்படி திட்டமிட்டு கொலை செய்வது எப்படி யாருக்கும் தெரியாமல் திருடுவது எப்படி கற்பழிப்பது எப்படி என்னென்ன தீமைகள் இருக்கின்றனவோ அத்துனை தீமைகளின் கூடாரமாக இன்றைய தொலைகாட்சி பெட்டி இருக்கிறது.                                                                               வீட்டை விட்டு ஓடும் பழக்கம் TV யின் மூலமே                                          தொலைக்காட்சியின் பாதிப்புகள் சிறுவர்களிடம் வீட்டை விட்டு ஓடிப்போகும் மனநிலை சமீப காலமாகப் பெருகிவருகிறது. படித்துப் பட்டம் பெற்று பெரும் பெரும் பொறியாளர்களாகவும் கைதேர்ந்த மருத்துவர்களாகவும் நாடாளும் அதிகாரிகளாகவும் சமூகப் பணியாற்ற வேண்டிய வருங்கால தலைமுறை சினிமா போதையால் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திக்குத் தெரியாமல் திண்டாடிவருகிறது. வளரிளம் பருவத்தினரிடம் ஓடிப்போகும் கலாச்சாரம் பரவலாகக் காணப்படுவதற்கு சின்னத்திரை தொடர்களும் வண்ணத்திரையும்தான் காரணம். வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில்தான் இந்த ஓடிப்போதல் பெரும்பாலும் நடக்கிறது சினிமாவில் காட்டப்படும் அதிஉயர் ரகக் கனவு வாழ்க்கை நமக்கு நனவாகிவிடாதா என்ற விளிம்பு நிலை மக்களின் தேட்டமே அவர்களின் வாழ்க்கை சூனியமாவதற்குக் காரணமாகிவிடுகிறது..                                                                        கலாச்சார பாதிப்பு,உறவுகளை மறந்து போகுதல்                                     சின்னத்திரை மற்றும் வண்ணத்திரையால் கலாசாரப் பாதிப்பு, பண்பாட்டுச் சிதைவு ஆகியவை ஏற்படுகின்றன. காசு பணம், நேரம், மின்சாரம் ஆகியவை பாழாகின்றன. மனித உழைப்பு தேக்கமடைந்து நாட்டின் உற்பத்தி பாதிக்கிறது. (கிரிக்கெட் ஒளிபரப்பு என்றால் கேட்கவே வேண்டியதில்லை.) அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் உடல்நலம் பாதிக்கிறது. கண்பார்வைக் கோளாறு, உடல் பருமன் ஆகியவை ஏற்படுகின்றன. (இரவில் உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்திற்குமுன் தொலைக்காட்சியை அணைத்துவிட வேண்டும் என்ற அறிவிப்பு மிகவும் கவனிக்கத் தக்கது.) மேலும், உறவு, நட்பு என்ற பல்வேறு மதிப்பு மிக்க தொடர்புகளை இழக்க வேண்டிய அவலமும் நேர்கிறது. பெற்றோருடன் பிள்ளைகளும், பிள்ளைகளுடன் பெற்றோரும் பேசுகின்ற நேரம்கூட தொலைக்காட்சியால் குறைந்துவிடுகிறது. மற்ற உறவுகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். எல்லா விதமான தீமைகளையும் கற்றுத் தரும் செய்முறை பயிற்சிக்கூடமாகவும் இந்தச் சின்னத்திரையும் வண்ணத்திரையும் அமைந்துள்ளன. அல்லாஹ்வின் மகத்தானதொரு அருட்கொடை அவனுக்கு வெறுப்பூட்டும் வழியில் பயன்படுத்தப்படும் மாபாதகமும் நடக்கிறது. கருவுற்ற தாய்மார்கள் காணும் காட்சியும் செவியுறும் சப்தங்களும் கருவில் உள்ள சிசுவைப் பாதிக்கிறது என்பது மருத்துவ உலகின் அறிவுறுத்தல். எனவே, அபத்தங்களும் ஆபாசமும் அடிதடியும் மலிந்த இந்த நாலாந்தர சினிமா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர்கள் பார்த்தாலோ செவியுற்றாலோ அது அவர்களை மட்டுமல்ல அடுத்த தலைமுறையையும் சேர்த்து பாதிக்கும் என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகள் பலவற்றை நாம் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடியுமா? ‘குடும்பப் படம்என்ற டைட்டிலுடன் சில படங்கள் வருகின்றன என்றால் பல படங்கள் அந்தத் தரத்தில் இல்லை என்றுதானே பொருள்.                                        இஸ்லாத்தின் பார்வையில் சினிமாவும் தொலைக்காட்சியும்                                     இஸ்லாமியப் பார்வையில் சினிமாவும் தொலைக்காட்சியும் தடை செய்யப்பட்டவை என்பதைப் பின்வருமாறு பல கோணங்களில் புரிந்துகொள்ள முடியும்: 1. இஸ்லாமியச் சட்ட ஆய்வாளர்கள் (முஜ்தஹிதூன்) மற்றும் மார்க்கச் சட்ட மேதைகள் (ஃபுகஹா) ஆகியோரின் ஒருமித்த கருத்துப்படி இஸ்லாத்தின் பிரதான நோக்கங்கள் ஐந்து ஆகும். அவை, மார்க்கத்தைப் பாதுகாத்தல், அறிவைப் பாதுகாத்தல், உயிரைப் பாதுகாத்தல், அடுத்த தலைமுறையைப் பாதுகாத்தல், பொருளைப் பாதுகாத்தல் ஆகியன ஆகும். திருக்குர்ஆன் வசனமாகட்டும், நபிமொழிகள் ஆகட்டும் அவற்றிலிருந்து பெறப்பட்ட மார்க்கத்தின் மூலாதாரச் சட்டமாகட்டும் அவையனைத்துமே இந்த ஐந்து விஷயங்களைப் பாதுகாப்பதையே இலட்சியமாகக் கொண்டிருக்கும். இஸ்லாம் ஒன்றைக் கட்டளையிட்டாலோ தடுத்தாலோ அதற்கு இந்த ஐந்தில் ஒன்றே நோக்கமாக இருக்க முடியும். திருமணம் செய்துகொள், நியாயமாக வணிகம் செய், திருடாதே, பாலியல் ஒழுக்கம் மீறாதே போன்ற கட்டளைகளுக்கும் தடையுத்தரவுகளுக்கும் மேற்கண்ட ஐந்து நோக்கங்களில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோதான் காரணமாக இருக்கும். அந்த வகையில் இன்றைய சின்னத்திரை வண்ணத்திரை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பாடல்கள், காட்சிகள், வசனங்கள் பெரும்பாலும் பண்பாட்டுச் சிதைவையும் மரியாதைக் குலைவையும் பாலியல் ஒழுக்க மீறல் பரவலையுமே மையமாகக் கொண்டுள்ளன. எனவே, அவற்றைப் பார்ப்பதும் கேட்பதும் தடைசெய்யப்பட்ட செயல் - ஹராம் ஆகும். ஒருவரின் மானமரியதையும் குடும்ப கௌரவமும் காக்கப்பட வேண்டும் என்பதே இதற்குப் பிரதான காரணம். 2. “பிறர் தொல்லை அடையக் காரணமாக இருக்கக் கூடாது (லா ளரர). பிறருக்குத் தொல்லை தரவும் கூடாது (வலா ளிரார)என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்) அதாவது சுய இலாபம் கருதிச் செய்யப்படும் ஒரு வேலையில் திட்டமிடாமலேயே பிறருக்குத் தொல்லை நேர்ந்தால் அது ளரர் எனப்படும். அதுவும் கூடாது. தனக்கு இலாபமே இல்லாவிட்டாலும் பிறருக்குத் தொல்லை தருவதையே நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் செயல் ளிரார் எனப்படும். அதுவும் கூடாது. புகை பிடித்தல், கழிவுநீரை ஆறு, குளம் போன்ற பொது நீர்நிலையில் கலக்கவிடல், ரயில்வே வரிசைகள், ரேஷன் வரிசைகளை மீறுதல் போன்றவற்றை முந்தையதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தச் செயல்களில் சுய இலாபமே பெரும்பாலும் நோக்கமாக இருக்கும். இருப்பினும் அவற்றால் பிறருக்குத் தீங்கு நேர்கிறது. எனவே, அது ளரர் ஆகும். ரயிலைக் கவிழ்க்கச் சதி செய்தல், வெடிகுண்டு வைத்தல் போன்றவற்றை இரண்டாவதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவற்றால் சம்பந்தப்பட்டவருக்கு நோக்கம் பிறரை வதைப்பது மட்டுமே, அவை தமக்குப் பாதகமாக முடிந்தாலும் சரி. இதுவே ளிரார் ஆகும். இந்த இரு வகையிலும் பிறருக்குத் தொல்லை தரலாகாது என்பதே மேற்கண்ட நபிமொழியின் கருத்தாகும். அந்த வகையில், இன்றைய சின்னத்திரை வண்ணத்திரை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் கட்டுப்பாடற்ற நிலையையும் ஒழுக்கக் கேட்டையுமே முன்னிலைப்படுத்துகின்றன. சமூகத்தில் பாலியல் உணர்ச்சிகளைக் கிளப்பிவிடுகின்றன. அதனால் குடும்பத்திலும் சமூகத்திலும் விளையும் தீங்குகள் சொல்லி மாளாது.                                                 முஸ்லிம் பொறுப்புள்ளவன்  
عن عبد الله
 : قال النبي صلى الله عليه و سلم ( كلكم راع وكلكم مسؤول فالإمام راع وهو مسؤول والرجل راع على أهله وهو مسؤول والمرأة راعية على بيت زوجها وهي مسؤولة والعبد راع على مال سيده وهو مسؤول ألا فكلكم راع وكلكم مسؤول )                                    நீங்கள் ஒவ்வொருவரும் பொருப்புதரிகள் ,விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் விசாரிக்கப்படுவார் , குடும்பத்தலைவன் அவர் குடும்பத்தைப்பற்றி விசாரிக்கப்படுவார் , பெண் கணவனின் குடும்பத்தை விசாரிக்கப்படுவாள் , வேலைக்காரன் தன்னுடைய முதாலாளியின் உடமைக்கு பொறுப்புதாரி அதைப்பற்றி விசாரிக்கப்படுவான் .(புஹாரி )  ஒரு முஸ்லிமைப் பொறுத்தமட்டில் அவன் தனது குடும்பத்தின் சமய நம்பிக்கையையும் ஒழுக்க விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ளவன். எல்லா விதமான தீங்குகளில் இருந்தும் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளவன். எனவே, தீங்குகளுக்கு அச்சாரமிடுகின்ற தொலைக்காட்சியை வாங்குவதும் அதை வீட்டில் கொண்டுவந்து வைப்பதும் இந்த நபிமொழியின்படி தடுக்கப்பட்ட செயல் (ஹராம்) ஆகும் என்பதை இதன் வாயிலாகவும் எளிதில் விளங்கலாம். 3. இஸ்லாமிய மார்க்கச் சட்ட மூலாதாரவியலில் (உஸூலுல் ஃபிக்ஹ்) சத்துத் தராயிஉஎன்றொரு அடிப்படைச் சட்டம் உண்டு. சந்து பொந்துகளைஅடைத்தல் என்று அதற்குத் தமிழாக்கம் தரலாம். அனுமதிக்கப்பட்ட ஒன்று (ஹலால்), அனுமதி மறுக்கப்பட்ட ஒன்றுக்கு (ஹராம்) வழிகோலுமானால் அதுவும் அனுமதி மறுக்கப்பட்டதாகும்என்பதே அதற்கான விளக்கம் ஆகும். அதாவது ஹராமுக்குப் போய்ச் சேரும் வழியை அடைத்தல் என்பது கருத்தாகும். அல்லாஹ்வையன்றி அவர்கள் (வேறு) யாரை(த் தெய்வங்களாக) அழைக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு (ஏசினீர்கள்) ஆயின், அவர்கள் அறியாமையால் அத்துமீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்என்று திருக்குர்ஆன் (6:108) கூறுகிறது. பிற தெய்வங்களை ஏசுவது அடிப்படையில் தவறன்று. ஆயினும், அல்லாஹ் ஏசப்படுவதற்கு அது காரணமாகிறது என்பதால் அதுவும் தடை செய்யப்பட்டது என்பது இந்த வசனத்தின் கருத்தாகும். இந்த வசனமே சத்துத் தராயிஉஎனும் அடிப்படைச் சட்டத்திற்கு ஒரு சான்றாகும். அந்த வகையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல அனுமதிக்கப்பட்டவை என்றே வைத்துக்கொண்டாலும் அவை மோசமான சீர்குலைவுக்கும் பண்பாட்டுச் சிதைவுக்கும் தரம் தாழ்ந்த நடத்தைகளுக்கும் வழிகோலுவதால் தொலைக்காட்சியை வாங்குவதும் அதைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டதாகும். 4. தொலைக்காட்சியில் வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆடல், பாடல், இசை ஆகியவற்றுடனேயே ஒளிபரப்பாகிறது. இசை என்பது மார்க்கத்தின் பார்வையில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவர். அவர்கள் விபசாரம் புரிவது, (ஆண்கள்) பட்டுத்துணி அணிவது, மது அருந்துவது, இசைக் கருவிகள் இசைப்பது ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவர். (ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம்-5590) அவ்வாறே பாடகிகளின் குரலைக் கேட்பதும் நடனம் ஆடும் பெண்களைப் பார்ப்பதும் தடுக்கப்பட்ட செயல் ஆகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் மதுவருந்துவர். அவர்கள் மதுவுக்கு மாற்றுப் பெயர் சூட்டிக்கொள்வர். அவர்களின் தலைகளுக்கு மேல் வாத்தியக் கருவிகளின் இசையும் பாடகிகளின் பாடலோசையும் ஒலிக்கும். அத்தகையோரை அல்லாஹ் பூமியில் புதையுறச் செய்வான். அவர்களில் சிலரை அல்லாஹ் குரங்குகளாகவும் பன்றிகளாவும் உருமாற்றுவான். (இப்னுமாஜா-4010) ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “இறுதிக் காலத்தில் என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றப்படுவார்கள்என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதிமொழிவார்கள் அல்லவா?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம், அவர்கள் நோன்பும் நோற்பர்; தொழுவர்; ஹஜ்ஜெல்லாம்கூட செய்வர்என்றார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! பின் ஏன் அவர்களுக்கு இந்த நிலை?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் வாத்தியக் கருவிகளையும் மேளதாளங்களையும் பாடகிகளையும் பயன்படுத்துவார்கள். மதுவருந்தவார்கள். அந்தக் குடி கூத்து கும்மாளத்திலேயே தூங்கச் செல்வார்கள். மறுநாள் காலை வேளையில் உருமாற்றம் செய்யப்பட்டவர்களாக ஆகிவிடுவர்என்றார்கள். (இப்னு அபித்துன்யா) மக்கள் பொதுவாக பார்வைகளைத் தாழ்த்த வேண்டும், பெண்கள் தம் அழகை அந்நியர்களுக்கு வெளிக்காட்டாமல் உடலை முழுமையாக மூடி மறைக்கும்படி பர்தா அணிய வேண்டும் என்கின்ற இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சினிமாப் படங்களும் அறவே ஒத்துப்போகாது. இந்த வகையிலும் சின்னத்திரையும் வண்ணத்திரையும் ஒதுக்கப்பட வேண்டியவை என்பது மேலும் உறுதியாகிறது. இப்லீசின் அலங்கார ஆயுதம் நான் கட்டாயம் பூமியில் மனிதர்களுக்கு (தவறான வழியினை) அழகு வாய்ந்ததாகக் காட்டி, அவர்கள் அனைவரையும் வழிதவறச் செய்வேன்” (15:39) என்று திருக்குர்ஆனில் ஒரு வசனம் இடம்பெறுகிறது. இது சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஷைத்தான் அல்லாஹ்விடம் போட்ட சபதம் ஆகும். ஆதமின் புதல்வர்களுக்கு அசிங்கமானவற்றை அழகாக்கிக் காட்ட இப்லீஸ் கையிலெடுத்துள்ள சாதனங்களில் மிக  முக்கியமானது தொலைக்காட்சியும் சினிமாவும் என்று சொல்லலாம். சினிமாத் துறையின் சர்வதேச உயர் விருதாகிய ஆஸ்கார் விருது பெற்ற ஆன்டனி குயின் (Antony Queen) சினிமா பற்றிச் சொல்லும்போது, “சினிமா என்பது கொச்சைத்தனம் கோலோச்சும் களம்” (cinema is the area of the vulgarity) என்றார். அதுதான் தொலைக்காட்சி வாயிலாக இடைவிடாமல் பரிமாறப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசடைவது பற்றி நாம் அதிகம் கவலைப்படுகிறோம். நம் வீட்டுக்குமுன் யாராவது குப்பையைக் கொட்டினாலோ டயரைக் கொளுத்தினாலோ கழிவுநீரை ஊற்றினாலோ மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளிக்கிறோம். ஆனால், மனதை மாசுபடுத்தும் சூழலைப் பற்றிக் கவலைப்படுவதற்கு நாம் தயாரில்லை. மனதை மாசுபடுத்துவதில் பெரும் பங்கு தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் உண்டு. புறச்சூழல் மாசுபட்டால் அதை அகற்ற மாற்று வழியுண்டு. ஆனால், ஒரு சமுதாயத்தின் மனம் மாசுபட்டால் அந்தச் சமுதாயம் மெல்லக் கொல்லும் நஞ்சை உட்கொண்டதாகப் பொருள். படிப்படியாக அதன் அழிவு நெருங்கிவரும். அதன் நாகரீகம், பண்பாடு, மனிதாபிமானம், நாணம் எல்லாமே காலப்போக்கில் காணாமல் போய்விடும். எனவே, கால் பங்கு நன்மை முக்கால் பங்கு தீமை எனும் நிலையில் உள்ள தொலைக்காட்சியை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் அதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும். இதையே இஸ்லாம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. நாம் குடியிருக்கும் வீடு அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடை. அது அமைதியும் அருளும் தவழும் இடமாக இருக்க வேண்டும். அதில் அல்லாஹ்வுக்குப் பிடிக்காத சூழலை உருவாக்குவது நமது ஈமானைப் பலவீனப்படுத்திவிடும்.
இச்சூழலை விட்டும் மீள வேண்டும் முற்றிலும் முடியாவிட்டாலும் உள்ளத்திலே வெறுத்தே ஆக வேண்டும்.இதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் இப்படி துஆ தந்துள்ளார்கள்.

قُلِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِى وَمِنْ شَرِّ بَصَرِى وَمِنْ شَرِّ لِسَانِى وَمِنْ شَرِّ قَلْبِى وَمِنْ شَرِّ مَنِيِّى ». رواه أَبُو داود
யா அல்லாஹ் உன்னிடம் எனது கேட்பதின்  தீமையை விட்டும்    எனது பார்வையின் தீமையை விட்டும்  எனது நாவின் தீமையை விட்டும் எனது கல்பின் தீமையை விட்டும்  எனது விந்தணுவின் தீமையை விட்டும்    பாதுகாவல் தேடுகிறேன் .
                             والله  اعلم بالصواب 

5 comments:

குறிப்புகள் தந்த அனைத்து உலமாப் பெருமக்களுக்கும் தொகுத்து வழங்கிய மவ்லானா அபூரஷாதி அவர்களுக்கும் இந்த தளம் ஆழமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது

உண்மை யான விஷயங்கள்

Post a Comment