31 December 2015

நற்குணங்களின் தாயகம் நபிகள் நாயகம்!


அஸ்ஸலாமு அழைக்கும் சங்கை மிகுந்த ஆலிம்களே மேலான்மைகுழு சார்பாக இந்த வார ஜும்ஆ தலைப்பு அண்ணலார் ஒரு அழகிய முன்மாதிரி என்று தரப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். சென்ற வாரம் தவூதிகள் சார்பாக இதே தலைபில் மிக அற்புதமாக பல செய்திகளை தந்து குறிப்பு வழங்கி பல ஆலிம்கள் சென்ற ஜும்ஆவில் பேசியும் இருப்பதால் இந்த வார தலைப்பு (நற்குணங்களின் தாயகம் நபிகள் நாயகம்) தங்களுக்கு தோதுவாக மாற்றப்படுகிறது.             

                                       
                                 وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏ 
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(68:4)

னிதர்களில் சிறந்தவர்கள் பணம் படைத்தவர்கள் அல்லர். மாறாக நற்குணம் படைத்தவர்களே மனிதர்களில் சிறந்தவர்கள் ஆவர். நற்குணம் படைத்தவர்கள் புகழ் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அவர்களைத் தேடி புகழ் ஓடி வருகிறது. 


1400 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்திருந்த காலகட்டத்தில் இறுதி இறைத்தூதராக நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அவர்களின் அழகிய போதனைகளும் அவர்களின் நடவடிக்கைகளும் அறியாமை இருளை நீக்கி அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்குத் தந்தது. இன்றும் அந்த அழகிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி நடக்கும் அரிய வாய்ப்பை நபிகளார் மூலம் அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான்.

நாகரீகமில்லாத, படிப்பறிவில் மிகவும் குறைந்த, சரியான கொள்கை கோட்பாடுகளற்ற, மௌட்டீக மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கித் திளைத்த ஒரு சமுதாயம். வரலாற்று அறிவோ, விஞ்ஞான அறிவோ சொல்லிக் கொள்ளும்படியான அளவுக்கு வளராத அந்த காலத்தில், தாங்கள் கொண்டிருந்த கொள்கைக்கே அல்லது நம்பிக்கைக்கே எதிராக இருந்த இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது என்றால், நிச்சயமாக! அந்த மக்கள் பிற மதங்களை ஆராய்ந்தோ அல்லது இறைவன், நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டோ ஏற்றுக் கொள்ளவில்லை.

மாறாக நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆகுவதற்கு முன்பு அந்த மக்களோடு வாழ்ந்த நாற்பது வருட காலத்தில் அவர்கள் தங்களது உயரிய நற்குணத்தின் வாயிலாக பெற்றிருந்த நம்பிக்கையும், நற்பேரும்தான் அந்த மக்களை இஸ்லாத்தின் பால் நாட்டங்கொள்ளச் செய்தது என்றால் மிகையாகாது.

உங்களுடன் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேனே (ஆகவே நான் கூறுவது உண்மைதான் என்பதை) விளங்க மாட்டீர்களா? என்று (நபியே) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 10: 16)
என்று அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களைக் கொண்டு அந்த மக்களுக்கு அறிவுரை கூறுகிறான். நன்னடத்தையும், நற்குணமும் இல்லாமல் எவ்வளவு உயர்ந்த கருத்துக்களைச் சொன்னாலும் அது மக்களிடையே எடுபடாது அல்லது ஒரு நிரந்தர நல்விளைவினை ஏற்படுத்தாது.

இன்னும், அல்லாஹ் தனது திருமறையிலே தனது தூதரை நோக்கி

                فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்(3:159)

என்று கூறுகிறான்'. ஆக நபி(ஸல்) அவர்களை கடுமையானவராகவோ அல்லது முன்னுக்குப்பின் முரணாகவோ அந்த மக்கள் கண்டிருந்தால், அவர்களை விட்டும் வெருண்டோடி இருப்பார்கள். கொள்கையைப் பற்றியெல்லாம் அந்த தருணத்தில் சிந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களின் நற்குணம் அந்த மக்களை இஸ்லாத்தில் நுழையச் செய்தது மட்டுமில்லாமல் அவர்கள் ஒவ்வொருவரையும் நற்குணவாதியாகவும், சத்திய சீலர்களாகவும் மாற்றியது.

ஏன் இவ்வளவு காலம் கடந்த பின்பும் கூட அவர்களது நற்குணமானது அதனை அறியும் மக்களிடையே பெரும் தாக்கத்தையும், வாழ்வியல் புரட்சியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களது அப்பழுக்கற்ற வாழ்க்கையை அறியும் ஒருவன் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்வதோடு சத்தியத்தையும், தர்மத்தையும், மனித நேயத்தையும் நிலைநாட்ட எந்த தியாகத்தையும் செய்ய தயாராகி விடுகிறான் என்பது கண்கூடு.

இவ்வாறு நற்குணத்தை வலியுறுத்திய நபி(ஸல்) அவர்கள் அதற்கு இலக்கணமாகவும் அழகிய முன்மாதிரியாகவும் வாழ்ந்து நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். எல்லா காலத்திலும், எல்லா மக்களிடமும், எல்லா நிலையிலும் அவர்கள் நற்குணத்தின் நாயகராகத் திகழ்ந்தார்கள். எந்தளவுக்கு என்றால் அவர்களது நற்குணத்தை வறுமையோ, வளமோ, ஆட்சி அதிகாரமோ, இன்பமோ, துன்பமோ, விருப்போ, வெறுப்போ எதுவுமே பாதித்தது இல்லை. அதுமட்டுமில்லை பணக்காரன், ஏழை, அரசன், ஆண்டி, அறிஞன், பாமரன், நம்மவன், அந்நியன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரிடமும் நீதியோடும், நேர்மையோடும், அன்போடும், கருணையோடும் நடந்து கொண்டார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை இருக்கிறது. அதுபோல ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் நற்குணவாதியாகத் திகழ்வதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையைக் கடந்து விட்டால் நற்குணமெல்லாம் போயே போச்சு. ஆனால் நபி(ஸல்) அவர்கள் 'நற்குணத்தைப் பரிபூரணப்படுத்தவே நான் இறைவன் புறத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்' என்று பறைசாற்றினார்கள். அவ்வாறே அவர்கள் வாழ்ந்தும் காட்டினார்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு நற்குணத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதை உள்ளங்களிலே பதித்துவிட்டும் சென்றார்கள். 

உண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும்மென்மையாக உரையாடுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு உண்டு.


நபிமொழிகள்:
அதிகமதிகம் மனிதர்களை சுவனத்தில் நுழையச்செய்வது எது? என வினவப்பட்டபோது தக்வாவும், நற்குணங்களும்தான் என்றார்கள் நபியவர்கள்.
ஆதாரம்: திர்மிதீ

நற்குணம்தான் மறுமையில் நன்மையின் தராசை கனமாக்கக்கூடியது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) 
நூல் : அபூதாவூத் 4799, திர்மிதீ 2002

எனக்கு அதிகம் நேசத்திற்குரியவரையும், மறுமைநாளில் என்னுடைய சபையில் அதிக நெருக்கத்திற்குரியவரையும் நான் அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் மௌனமாக இருந்தார்கள். இரண்டு தடவை மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் திரும்பத் திரும்ப கேட்டார்கள். இறுதியாக நபித்தோழர்கள் அல்லாஹ்வின்  தூதரே கூறுங்கள் என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உங்களிள்   அழகிய குணம் கொண்டவரே என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐய் (ரலி) 
நூல் : அஹ்மத் 6735, புகாரியின் அதபுல் முஃப்ரத் 275

அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நற்பண்பு மிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது கண்களால் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக் கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்கு பத்து வருடங்கள் பணிவிடை செய்த அனஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்கள் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.
நான் நபி(ஸல்) அவர்களின் கரத்தைவிட மென்மையானதாக பட்டாடையையோ, பட்டையோ தொட்டதில்லை. அவர்களின் வாடையை விட உயர்ந்த நறுமணமத்தை ஒருபொழுதும் நுகர்ந்ததில்லை. அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.  அனஸ்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
மனிதர்களில் மிகச் சிறந்தவர்கள் நபி(ஸல்) அவர்கள்: நபி(ஸல்) அவர்கள், மக்களில் மிக அழகிய குணமுடையவர்களாக விளங்கினார்கள். அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) அவர்கள், ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
பிறரின் மனதில்  கவலையை ஏற்படுத்தும்  ஒன்றை கூட  நபி(ஸல்) அவர்கள் செய்ய விரும்பவில்லை. நபி(ஸல்) அவர்களுக்கு நான் ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக அளித்தேன், அதை என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள் அப்பொழுது என் முகத்திலுள்ள (வருத்தத்தை பார்த்து ஹஜ்ஜிற்காக) நாம் இஹ்ராம் கட்டி இருப்பதால், இதை (வேட்டையாடப்பட்ட காட்டு கழுதையை) ஏற்றுக் கொள்ளாமல் நாம் உம்மிடம் திருப்பிக் கொடுக்கிறோம் என அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி(ஸல்) அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள்.
ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார்.
அவர் "என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார்.
நபி(ஸல்) அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)நபி(ஸல்) அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக் கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில்அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக இருந்தார்கள்.
ஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தையும் உறுதிப்படுத்தினார்கள்.


முஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு முறைகளும்உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம் காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான். மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது. முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன்மறுமையின் தராசில் நன்மையின் தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை.

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸாமா இப்னு ஷுரைக் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும்.

"
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல் அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி(ஸல்) அவர்களின் சபையில் எங்களில் எவரும் பேசமாட்டார்.
அப்போது சிலர் வந்து நபி(ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?' என்று வினவினர்.
நபி(ஸல்) அவர்கள், "அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக் கூறினார்கள்.
நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம் எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும்.
நாம் முன்பு கண்டதுபோல்இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும் மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகைநோன்புக்கு இணையானதாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகைநோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதிமுஸ்னதுல் பஸ்ஸார்)
மற்றோர் அறிவிப்பில்: "ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்றுஇரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தங்களது சொல்செயலால் நபி(ஸல்) அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை தோழர்களிடம் உணர்த்திஅதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தூண்டினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமாஅவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள்.
அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார்.
நபி(ஸல்) அவர்கள், ""நற்குணத்தையும் நீண்ட மௌனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)


ஆகவே, நாமும் நமது வாழ்க்கையில் நல்ல பழக்கவழக்கங்களை நற்குணங்களை பேணிக் கொள்ள வேண்டும். நமது சொல், செயல், நடைமுறைகள் அனைத்திலும் நற்குணம் பேணப்படவேண்டும். பிறரின் உள்ளம் சிதையாத முறையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். பிறரை சந்திக்கும் போதும் பேசும் போதும் கொடுக்கல், வாங்கல் செய்யும் போதும் அனைத்து நிலைகளிலும் நற்குணம் பேணப்பட வேண்டும்.
வீட்டிலிருந்து ஆரம்பமான நற்குணம் வீதியிலும் வேலை செய்யும் இடங்களிலும் நண்பர்கள் சக ஊழியர்கள் நமக்கு மேலானவர்கள் குறைந்த சம்பளம் பெறுபவர்கள் மேல் நாட்டவர்கள்? கீழ் நாட்டவர்கள்? வெள்ளையார்கள், கறுப்பர்கள், அரபிகள், அஜமிகள் என்ற வித்தியாசமின்றி அனைவருடனும் நற்பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இரத்த உறவுகளான தாய், தந்தை, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் மற்றும் மனைவி இன்னும் நம் குடும்பத்தார் அனைவருடனும் நற்குணம் பேணப்பட வேண்டும்.
நபி(ஸல்) அவர்களின் சபையில் அனைத்து வர்க்கத்தினரும் ஒன்றுபோல் நடத்தப்பட்டார்கள், அதைக்கண்ட குறைஷிகள் ஏழைகளை குறைஷியல்லாதவர்களை அந்தச் சபையிலிருந்து நீக்கும்படி கேட்டுக் கொண்டபோது அதை நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். இவ்வாறு பேணப்பட வேண்டிய ஒன்றுதான் நற்குணம்.

"பணியாளர்களின் வியர்வை உலரும் முன் அவர்களின் கூலியைக் கொடுங்கள்" என்று பணியாளர்களின் உரிமைகளை பிரகடனப்படுத்தினார்கள். பணியாளர் வேலை செய்ய மறுக்கும்போது கூட கடிந்து கொள்ளவில்லை, வார்த்தைகளால் காயப்படுத்தவில்லை மென்மையைக் கொண்டே அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். 

'இன்னும் 'பணியாளரின் குற்றங்களை எத்தனை தடவை மன்னிப்பது?' என்று ஒருவர் மூன்று முறை கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஒவ்வொரு நாளும் எழுபது தடவை மன்னித்து வாரும்' என்றார்கள்.
ஆதாரம்: அபூதாவூத், திர்மிதீ

இவ்வாறு கருணையே உருவான காருண்ய நபி(ஸல்) அவர்கள் வீட்டில் மட்டுமல்ல வெளியிலும் நற்குண வடிவாய் திகழ்ந்தார்கள்.

'தன் பக்கத்து அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை'
ஆதாரம்: மிஷ்காத்

'அபூதர்ரே! நீர் குழம்பு சமைத்தால் தண்ணீரை அதில் அதிகப்படுத்தும், உம் அண்டை வீட்டாரையும் சற்று கவனியும்' 
ஆதாரம்: முஸ்லிம்

இவ்வாறு ஜாதி மத பேதங்கள் கடந்து அண்டை வீட்டாராக இருக்கக்கூடிய எல்லோரிடத்திலும் மிகவும் இணக்கமாக இருக்கவேண்டும் என்பதை நபி(ஸல்) அவர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள். அதனுடைய தாக்கம் எந்தளவுக்கு இருந்ததென்றால் அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்கு கொடுத்தீர்களா? என இரு முறை கேட்டுவிட்டு, "அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் என்னும் அளவுக்கு ஜிப்ரீல்(அலை) எனக்கு வலியுறுத்திக்கொண்டே இருந்தார்" என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகவும் கூறினார்கள்.
ஆதாரம்: திர்மிதீ

அதே போல கடன் கொடுத்த ஒருவர் அதை வசூலிக்கும்போது நபி(ஸல்) அவர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டார். இதனைப்பார்த்து நபித்தோழர்கள் கோபமுற்று, அவரை தாக்க முற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் "அவரை விட்டுவிடுங்கள் ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாக) பேசும் உரிமை உள்ளது" என்று கூறினார்கள். மேலும் அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்கு கொடுங்கள் எனக்கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அதைவிடக்கூடுதல் வயதுடைய ஒட்டகம்தான் உள்ளது என்று நபித்தோழர்கள் கூறினார்கள், உடனே அவருக்கு அதையே கொடுங்கள் ஏனெனில் அழகிய முறையில் கடனைத்திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் எனக்கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி

நம்மை விட கொஞ்சம் அதிக பலமுள்ளவர்களிடம் கடன் கொடுத்து விட்டாலே நயந்து, பணிந்து தான் கேட்க வேண்டியுள்ளது. அதிகார வர்க்கமென்றால் கேட்கவே வேண்டாம். அவர்களாக பார்த்து கொடுத்தால்தான் உண்டு. ஆனால் இங்கு ஒரு வல்லரசின் அதிபரிடம் மிகச்சாதாரண ஒருவர் அதுவும் முதல் தடவை கடன் கேட்கும் போதே கடுமையாக நடந்துக் கொள்கிறார். பக்கத்தில் உள்ளவர்களுக்குகூட அதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் அந்த மனிதரிடம் மிகவும் தன்மையாக நபி(ஸல்) அவர்கள் நடந்து கொள்கிறார்கள். இன்னும் வாங்கியதை விட அதிகமாக கொடுக்கிறார்கள். அதுதான் சிறந்தது எனவும் கூறுகின்றார்கள். ஏதோ ஓரிரு நபர்களிடம் மட்டும் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை, மொத்த மக்களிடமும் அவர்கள் நற்குண நாயகரே.

'அது போல ஒரு மனிதர் உடல் நடுங்கிட நபி(ஸல்) அவர்களிடம் வந்தார், 'சாதரணமாக இருப்பீராக' உலர்ந்த இறைச்சியை சாப்பிட்டு வந்த குறைஷி குலத்து பெண்ணுடைய மகன்தான் நான்' என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்கள். ஆதாரம்: இப்னுமாஜா 3303.

அன்றைய மன்னர்களிடம் மக்கள் அப்படிதான் நடுங்கிட வருவார்கள், அப்படிதான் வரவேண்டும் என்ற நிலையிருந்த காலகட்டத்தில் ஆண்டிக்கும், அரசனுக்கும் முன்மாதிரியான நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு அழகாக நடந்து கொண்டார்கள் என்பதை பார்த்தீர்களா? 

ஒருநாள் அன்பளிப்பு வந்த ஆட்டை சமைத்து, தானும் மக்களும் சாப்பிட அமர்ந்தார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். இதனைக் கண்ட ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதைபிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.' என்று விடையளித்தார்கள்.

சாதாரண மனிதன்கூட சகித்துக் கொள்ளாத எத்தனையோ விஷயங்களை மாபெரும் வல்லரசின் அதிபராக இருந்தும் அவர்கள் சகித்துக்கொண்டு நடந்து கொண்ட முறை நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. உத்தரவுகளை பிறப்பித்து விட்டு ஒய்யாரத்தில் அமர்ந்து கொள்ளவில்லை. மாறாக மக்களோடு மக்களாக சேர்ந்து பணிகளையும், சிரமங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

அகழ் யுத்தத்தின் போது நபி(ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள், மண் சுமந்தார்கள். ஆதாரம்: புகாரி 2837, 3034.

நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன், பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். ஆதாரம்: புகாரி 3906

நபி(ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருப்பதால் உள்ள சிரமத்தைக் கண்ட அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்களிடம் கலந்து பேசி 'ஒரு கூடாரத்தை தனியாக உங்களுக்கு அமைத்து தருகிறோம்' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'மக்கள் என் மேலாடையை பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் நான் கலந்து வாழவே விரும்புகிறேன். அவர்களிடம் இருந்து அல்லாஹ் என்னை பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித்தான் இருப்பேன். என்று கூறினார்கள். ஆதாரம்: பஸ்ஸார் 1293.

இப்படி ஏராளமான சம்பவங்களின் மூலம் நபி(ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. ஏன் சாதாரண மக்களைவிடவும் அதிகம் சிரமம் எடுத்துக் கொண்டார்கள். உச்ச பச்ச இரு அதிகாரங்களை பெற்றிருந்தும், உலக இன்பங்களையும், செல்வங்களையும் தனது காலடியில் கொட்டச் செய்வதற்கான சக்தி பெற்றிருந்தும், உணவு, உடை, உறையுள் இன்னபிற வாழ்க்கை வசதிகள் மக்களிடமுள்ள பழக்கவழக்கங்கள் என்று வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் எளிமை, மென்மை, நேர்மை, சரிமை என்ற உன்னதத் தன்மைகளோடு விளங்கினார்கள். இவைகளையெல்லாம் சிந்தித்தால் மறுமையில் வெற்றி பெறுவதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் இலட்சியமாக இருக்க முடியும் என்ற சூட்சுமம் விளங்காமல் போகாது.

நமது நற்குணத்தை மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள். அதனால்தான் கெட்டவர்களுடன் கெட்ட குணத்தோடு நாம் நடந்து கொள்கிறோம். ஆனால் நன்மையைக் கொண்டு தீமையை அழிக்க வந்த நபி(ஸல்) அவர்களை பாருங்கள்,

ஒரு முறை நபி(ஸல்) அவர்களை எதிர்கொண்ட ஒரு கிராமவாசி அவர்களது மேலங்கியை தோள்பட்டையில் பதியும் அளவுக்கு இழுத்துக்கொண்டு 'உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து ஏதேனும் எனக்கு தந்து உதவிடுவீராக என்று கேட்டார். அவரை நோக்கி திரும்பி புன்முருவல் பூத்துவிட்டு அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
ஆதாரம்: புகாரி

அதே போல வேறொரு சமயம் இன்னொருவரும் நபி(ஸல்) அவர்களது பிடரி சிவக்க மேலாடையை பிடித்து இழுத்து 'முஹம்மதே! எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களை தருவீராக. உமது செல்வத்திருந்தோ உமது தகப்பனார் செல்வத்திருந்தோ நீர் தரப்போவதில்லை' என்று கூறினார். அப்போது இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களை தரமாட்டேன்' என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறியும் மூன்று முறையும் விடமாட்டேன் என்று சொன்னவருக்கு அந்நிலையிலேயே அவர் கேட்டபடி பொருட்களை தர ஆணையிடுகிறார்கள். மக்கள் ஆவேசப்பட்டு அந்த மனிதரை நோக்கி விரைந்த போது அனைவரையும் அமைதிப்படுத்தி அனுப்பிவைத்தார்கள்.
ஆதாரம்: நஸயீ, அபூதாவூத்

இந்த மாமனிதரை வழிகாட்டியாகவும், தலைவராகவும் பெற்றதற்கு இறைவனுக்கு அனுதினமும் அதிகமதிகம் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். மன்னிப்பதையே பண்பாகக்கொண்ட மாநபி(ஸல்) அவர்கள்  ஒரு கிராமவாசி வந்து பள்ளியில் சிறுநீர் கழிப்பதைக் கண்டு மக்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் 'சிறுநீர் கழிக்கும் வரை அவரை விட்டுவிடுங்கள்' என்றார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அவரை அழைத்து இது அல்லாஹ்வின் ஆலயம், இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது, தொழுகை நடத்துவதற்கும் இறைவனை நினைவுகூறுவதற்கும் உரியது' என்று அறிவுரை கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

இவ்வாறு மனிதனது கோபத்தையும், குரோதத்தையும், விரோதத்தையும் கிளரக்கூடிய எல்லா இடத்திலும் நமது மாநபி  நடந்து கொண்ட முறையைப்பார்க்கும் போது நிச்சயமாக! மனிதர்கள் என்றும் மனிதர்களாக வாழவும், அவர்கள் நேர்வழிபெறவும் அனுப்பப்பட்ட இறைதூதராக அல்லாமல் இவர்கள் இருக்கமுடியாது என்பதை நமது உள்ளங்கள் உண்மையிலேயே உணருகின்றன.

சரி! நற்குணம், நற்குணம் என்று எழுதுகிறோம். பேசுகிறோம். நற்குணம் என்றால் என்ன? அதன் அளவு கோல் என்ன? நற்குணங்களைப் பெறுவது எப்படி? பிறரிடம் நற்குணத்துடன் பழகுவது எப்படி? 

ஆம். நற்குணத்தின் ரத்தினச் சுருக்கமும், அதன் சாராம்சமும் பின் வரும் முத்தான மூன்று அம்சங்கள்; அம்மூன்றிலும் எண்ணிலடங்காத பல அம்சங்கள் புதைந்து கிடைக்கின்றன.

''நற்குணம் என்பது 1. மலர்ந்த முகத்துடன் புன்முறுவல் பூப்பது 2. நலவுகளைச் செலவு செய்வது 3. நோவினையைத் தடுப்பது'' (அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) நூல்: திர்மிதி) 

மேற்கூறிய மூன்று அம்சங்களையும் பேணக்கூடிய ஒவ்வொருவருமே நற்குணங்கள் உடையவர்களே!

முத்தான மூன்று அம்சங்களையும் கடைப்பிடித்த காரணத்தால்தான் நமது நாயகத்தை  ''நற்குணங்களின் தாயகம் நபிகள் நாயகம்''  என்று உலகம் போற்றுகிறது.

''சங்கையான நற்குணங்களை பரிபூரணப்படுத்தவே நான் இறைத்தூதராக அனுப்பப்பட்டிருக்கிறேன்'' என்று நபிகளார் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்பொழுதுமே யாரைக் கண்டாலும் முகமலர்ச்சியுடன் புன்னகை புரிவார்கள்; இறுக்கமான முகத்துடன் அவர்களைக் காணமுடியாது. இன்முகத்துடன் எந்நேரமும் இருப்பார்கள்.

''நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பத்தாண்டு காலம் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னைப் பார்த்து 'ச்சீ' என்று ஒருபோதும் கூறியது கிடையாது. நான் செய்ததை 'ஏன் செய்தாய்?' என்றோ, நான் செய்யாததை 'நீர் இவ்வாறு செய்ய வேண்டாமா?' என்றும் கேட்டது கிடையாது'' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)

''அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருவருப்பாக பேசுபவராகவும், அருவருக்கத்தக்கவைகளைக் கேட்பவராகவும் இருந்ததில்லை'' (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஆஸ் (ரலி) நூல்: புகாரி)

மேலும் அதிகமான நன்மைகளை நபிகளார் மக்களுக்குச் செய்திருக்கிறார்கள்.

''நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எதைக் கேட்டாலும் அவர்களிடம் இருந்து 'இல்லை' என்று பதில் வந்தது கிடையாது'' (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி)

நற்குணம் என்பது பொருளை செலவு செய்வது மட்டு மல்ல; நன்மையான ஒவ்வொன்றுமே நற்குணம்தான்.
மேலும் நபிகளார் யாருக்கும் எந்த விதத்திலும் நோவினை கொடுத்தது கிடையாது. பகைவனுக்குக் கூட நன்மை செய்தவர், பெருமானார் (ஸல்) அவர்கள்.

''நபிகளார் தீங்குக்குப் பதிலாகத் தீங்கு செய்பவராக இருந்ததில்லை; எனினும் மன்னிக்கும் மனப்பான்மை உடையவராக இருந்திருக்கிறார்கள்.'' (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) அவர்கள்)

நற்குணங்களின் அடிப்படையான  முத்தான மூன்று குணங்களிலும் நபி (ஸல்) அவர்கள் முத்திரை பதித்துள்ளார்கள். நற்குணங்களைப் பேணுகின்றவர்கள் இந்த மூன்று அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

''ஒரு இறைவிசுவாசி, நற்குணத்தின் மூலம் பகல் முழுவதும் நோன்பிருந்து, இரவு முழுவதும் நின்று வணங்கியவரின் மேன்மையை அடைந்து விடுகிறார்.” (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூ தாவூத்)

நபி(ஸல்) அவர்களின் அனைத்து நற்பண்புகளையும் நமதுவாழ்க்கையில் கொண்டுமுன்மாதிரி மனிதனாக நாம் வாழ வேண்டும் .அதிலும் குறிப்பாக மாற்று சமய மக்களிடம் பழகும்போது நம்மிடம் தீயகுணங்கள்,தீயசெயல்கள் வெளிப்பட்டு விடாமல் பார்த்து கொள்ளவேண்டும். ஏனெனில் அவர்கள் குரானையோ ஹதீஸையோ வரலாறுகளையோ பார்த்து இஸ்லாத்தை விளங்குவதில்லை மாறாக நமது வாழ்க்கையை பார்த்து தான் இஸ்லாத்தை எடை போட்டு பார்க்கின்றார்கள்.

அடுத்தவர் சிந்திய சளியை அகற்றிய அதிபரை கண்டதுண்டா?  புகாரி – 405  

நாசத்தைக் கூறிய நயவஞ்சகனிடமும் நளினத்தை காட்டிய அதிபரைக் கண்டதுண்டா?   புகாரி – 6024

அதிபரோ தரையில் நடக்க தான் நியமித்த அதிகாரியோ குதிரையில் இருக்க வாழச்சொல்லி வழியனுப்பிய அதிபரைக் கண்டதுண்டா? அஹ்மத் - 21040.

சிறுவர்களிடம் முந்திக்கொண்டு முகமன் கூறும் அதிபரைக் கண்டதுண்டா?  புகாரி – 6247

போரிலும் கூட கெட்ட போர் முறைகளை மாற்றி திருத்தம் செய்து போர்களை கண்ட அதிபரைக் கண்டதுண்டா? புகாரி – 3014


நம் நாயகத்தை போன்று எல்லோரிடத்திலும் நற்குனத்தோடு வாழும் நல்ல மக்களாக வல்லோன் அல்லாஹ் நம்மை ஆக்குவானாகஆமீன்.

குறிப்பு வழங்கியவர்கள்:ஷாகுல் ஹமீத் ஹழ்ரத், இல்யாஸ் மிஸ்பாஹி ஹழ்ரத், நஸீர் மிஸ்பாஹி ஹழ்ரத், குத்தூஸ் மஸ்லஹி ஹழ்ரத்,
தொகுப்பு அப்பாஸ் ரியாஜி

1 comments:

மிக அருமை
அல்ஹம்துலில்லாஹ்

Post a Comment