(நபியே!) உம்மை அகிலத்தார்க்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை.(22;107)
முத்திரை நபியான முத்து முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலங்களின் அருட்பிளம்பாக உள்ளார்கள் என்பதையும், இது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுக்குரிய தனித்துவமான பண்பு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் நன்கு அறிவர்.
“ஆலமீன்” என்பது மனிதன், ஜின், மலக்குகள் உள்ளிட்ட அல்லாஹ் தவிர உள்ள “பிரபஞ்சம்“ அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு சொல்லாகும். “றிஸாலத்“ என்ற தூதுத்துவத்தின் மூலமே நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலத்தின் அருளாக அருளப்பட்டுள்ளார்கள். அன்னாரின் “தூதுத்துவம்“ - றிஸாலத் - அகிலங்களுக்கு பொதுமையாகவே உள்ளது. அதனை நபியவர்களே “படைப்புக்கள் அனைத்திற்கும் பொதுவாக அனுப்பப்பட்டுள்ளேன் (முஸ்லிம்) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
வரலாற்று நாயகர்களாக அடையாளப்படுத்தப்படும் தலைவர்களில் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பின்னரும் மக்களால் இன்று வரை போற்றப்படுகிற ஒரே தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் என்பது சரித்திரம் கூறும் உண்மை. . நபியவர்களின் செல்வாக்கு தத்துவார்த்தமானது மட்டுமல்ல. நடைமுறையில் செல்லுபடியாகக்கூடியது. அந்த மறையாத செல்வாக்கிற்கு அவர்களின் எழில் சிறந்த நடைமுறைகளே முழுமுதற்காரணம். . வாள்முனையின் ஆதிக்க அசைவுகள் இல்லாமல் சிறந்த மனிதநேயப்பண்புகளாலேயே மானுட சரித்திரத்திரத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் மாநபியவர்கள். . அண்ணலார் எழுதப்படிக்கத்தெரியாதவர்கள்தான். . ஆனால் படிக்கத்தெரிந்தவனும் பார்த்துப் படிக்க வேண்டியப் பாடமாக மாறினார்கள். . வன்முறையை நன்முறையால் அழிக்க வேண்டும் என்கிற அவர்களின் அழகிய வழிமுறைதான் தீமையைத் தடுக்கும் திறன் கொண்டது என்பது பலரும் ஒப்புக் கொள்கிற ஓர் உண்மை. . இன்று மனித சமூகம் எதிர்நோக்கியிருக்கிற ஏராளமான வாழ்வியல் பிரச்சனைகளுக்கு பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே தீர்வு கண்ட விடிவெள்ளியாகத் திகழ்ந்தார்கள். . அப்படிப்பட்ட அண்ணலாரின் அருமையான வரலாற்றுப் பக்கங்களை மானுட சமூகம் மீண்டும்
புரட்டிப்பார்ப்பது காலத்தின் கட்டாயம்.
நபியின் வருகையே அருட்கொடை
அல்லாஹ் தன் திருமறையில்
وَإِذْ أَخَذَ اللّهُ مِيثَاقَ النَّبِيِّيْنَ لَمَا آتَيْتُكُم مِّن
كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ
لَتُؤْمِنُنَّ
بِهِ
وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ
إِصْرِي قَالُواْ أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُواْ وَأَنَاْ مَعَكُم مِّنَ
الشَّاهِدِينَ
மேலும,அல்லாஹ் நபிமார்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில்,
(அவர்களிடம்)வேதத்தையும்,ஞானத்தையும் நான் உங்களுக்கு கொடுத்து (இதற்குப்)பின்னர்,உங்களிடமுள்ளதை உண்மைப் படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால்,அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து,நிச்சியமாக அவருக்கு உதவி செய்வீர்கள்(என்று கூறி ''இதனை)நீங்களும் உறுதிப்படுதின்னீர்களா?இதன் மீது என்னுடைய வாக்குறுதியை எடுத்துக்கொண்டீர்களா?''என்று கேட்டதற்கும்,அவர்கள் ''நாங்கள் (அதனை)உறுதிப்படுத்துகிறோம்''என்றே கூறினார்கள்.(''இதற்கு)நீங்கள் சாட்சியாக இருங்கள்:நானும் உங்களுடன் சட்சியாளர்களில் உள்ளவனாக இருக்கின்றேன்''என்று கூறினான்.
(அல் குர்ஆன் 3;81)
மேலும்....
وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ
اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ
وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ ۖ فَلَمَّا
جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَٰذَا سِحْرٌ مُبِينٌ
பிறந்த விதம் அருட்கொடை
எந்த மனிதருடைய வரலாற்றிலாவது பிறப்பு,இறப்பு வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை ஆகிய மூன்றும் ஒரே தேதியாக,ஒரே கிழமையாக ஒத்திருப்பதைக்காண இயலுமா?
ரபீஉல்அவ்வல் மாதம் பிறை 12திங்கட்கிழமை அண்ணலாரின் பிறந்த நாளாகவும்,பிரிவு நாளாகவும்,ஹிஜ்ரத் செய்த நாளாகவும் இடம் பெற்றதை உலகம் நன்கறியும்.
ஸஜ்தாவில் பிறந்து,பிறந்ததும் வான் நோக்கி ஆட்காட்டி விரலினால் எதையோ சுட்டிக்காட்டி,பின்னர் சராசரி நிலையை அடைந்தது அண்ணலாரின் பிறப்பில் நடந்த மற்றமொரு அதிசய அருட்கொடையாகும்.''அல்லாஹ் ஒருவனுக்குமட்டுமே தலைசாய்ப்பேன்!வேறு எந்த சக்திக்கும்,நிர்பந்தத்துக்கும் நான் பணிய மாட்டேன்''என்ற சூளுரை போன்று அந்தக் காட்சி அமைந்தது.அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் அந்தச் சூளுரைக்கு சோதனைகள் பல நிகழ்ந்தன .அச்சோதனைகளை அவர்கள் முறியடித்த விதமும்,''வலக்கையில் சூரியனையும்,இடக்கையில் சந்திரனையும் தந்தாலும் என் கொள்கையை விடமாட்டேன்!''என அவர்கள் அறிவித்தபாங்கும்,அந்த சூளுரையை எதார்த்தமானது என்று ஒதுக்கிவிட முடியாதவாறு செய்கின்றன.
கற்பனக் கதைகள் புனையப்படும்போது முதல் பக்கத்தில் போடப்படும் முடிச்சு,கடைசி பக்கத்தில் அவிழ்க்கப்படுவது இயல்பாகும்.
ஆம்! ஸஜ்தாவில் பிறந்து வான் நோக்கி ஆட்காட்டி விரலினால் எதையோ சுட்டிக்காட்டிய அண்ணலார் சரித்திரஆரம்பத்துக்கும்,
அவர்கள் தனது குறிக்கோளில் முழு வெற்றிப் பெற்றுவிட்டதாக அறிவித்த(ஹஜ்ஜத்துல் வதாவின்)போது நடைபெற்ற நிகழ்வுக்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது.அப்போது அவர்கள் வான் நோக்கி ஆட்காட்டி விரலினால் எதையோ சுட்டிக்காட்டி அல்லாஹ்வே நீயே சாட்சி!என்று மும்முறை கூறினார்கள்.63ஆண்டுகளுக்கு முன்னர் பிறப்பின் போது நிகழ்வுற்ற சமிக்கை விளக்கமாக அமைந்தது.இவ்வாறு நிஜ வாழ்க்கையில் நடைப்பெற்றது மற்றமொறு அருட்கொடையின் அதிசயமல்லவா?
தன் பெயரிலும் அருட்கொடை
1,முஹம்மத்;புகழப்பட்டவர்.
2,அஹ்மத்;இறைவனை மிகவும் புகழ்பவர்.
3,அல் மாஹி:என் மூலம் குஃப்ர் அழிக்கப்படும்.
4,அல் ஹாஷிர்:மறுமையில் எல்லோரும் எனக்குப் பின் எழுப்பபடுவார்கள்.
5,ரவூப-ரஹீம் என்றும் அல்லாஹ் எனக்குப் பெயர் வைத்தான்.
(நூல்:புகாரி)
சிறப்புக்களில் அருட்கொடை
1,பொருள் நிறைந்த பொன்மொழிகள் வழங்கப்பட்டிருக்கிறேன்.
2,என்னைக்கண்டால் எதிரிகள் பயப்படுவார்கள்.
3,யுத்ததில் கிடைத்த பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டன.
4,நிலமெல்லாம் தொழுகை இடமாகவும்,தூய்மைப்படுத்தும் பொருளாகவும் எனக்கு ஆக்கப்பட்டிருக்கின்றது.
5,நபிமார்களின் வருகை என்னால் நிறைவுப் படுத்தப்படுகிறது.
(நூல்:முஸ்லிம்)
சிறு பிராயம் ஓர் அருட்கொடை
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் 12வயதை அடைந்தார்கள்.அப்போது அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் வியாபாரத்தின் நிமித்தம் அண்மை நாடான சிரியாவுக்கு பிராயணம் மேற்கொள்கிறார்கள்.அவருக்கு பல குழைந்தைகள் இருந்தும் சகோதரர் மகனான முஹம்மது (ஸல்)அவர்களையே உடன் அழைத்துச் செல்கிறார்.
அபூதாலிப் அவர்கள் சென்ற பிரயாணக்கூட்டம் பஸ்ரா என்ற நகரை அடைகிறது.அங்கு அவர்கள் வழமையாகத் தங்குமிடத்தில் தங்குகிறார்கள்.அவ்விடத்தில் கிருஸ்துவ அறிஞர் பஹீரா என்பவர் அவர்களுக்குத் தென்படுவார்.அவர் இதுவரை அவர்களிடம் உரையாடியது கூடக்கிடையாது.ஆனால் இந்த முறை அவரது நடவடிக்கை அதிசயக்கத்தக்க விதத்தில் மாறியிருந்தது.
அவராக வந்து இவர்களிடம் பேச்சுக்கொடுத்தார்.அவர் விருந்தொன்றுக்கு அழைப்புக்கொடுத்தார்.உங்களில் சிறியவர் முதல் பெரியவர் வரை,அடிமை முதல் எஜமானர் வரை அனைவரும் வந்து எனது விருந்தோம்பலில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
சரக்குகளுக்குக் காவலாக நபி (ஸல்)அவர்களை அமைத்து விட்டு மற்ற அனைவரும் பஹீராவின் அழைப்பை ஏற்றுச் செல்கிறார்கள்.
வந்தவர்களை வரவேற்ற பஹீரா சுற்று முற்றும் பார்கிறார்.ஒருவர் கூட விடுபடாமல் எல்லோரும் வந்து விட்டீர்களா?ஒரு சிறுவர் மட்டும் பொருட்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார் என்று அபூதாலிப் பதிலுரைத்தார்கள்.''இல்லை அவரும் வர வேண்டும்-சொல்லப்போனால் இந்த விருந்தோம்பலில் சிறப்புக்குரிய விருந்தினர் அவர்தான்!நீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் இங்கு வருகிறீர்கள்.ஆனால் இதுவரை உங்களிடம் பேசிக்கூட அறியாத நான் இன்று உங்களுக்கு விருந்தளிக்க முன் வந்திருப்பதே அந்த சிறுவர் உங்களுடன் வந்திருப்பதால்தான்.
அவர் சிறுவர் அல்ல,மகான் அவரைக் காணுவதற்காகவே நான் இங்கே தவமிருக்கிறேன்!''என்றார் பஹீரா.
பஹீராவின் உணர்ச்சி ததும்பும் வார்த்தைகளைச் செவயுற்ற அபூதாலிப் அவர்கள் அண்ணலாரை அழைத்து வரலானார்கள்.
இந்த வரலாற்றில் பல அதிசயங்கள் புதைந்துக் கிடைக்கின்றன.
அல்லாஹ் கூறுகிறான்:-
''இவர் வருவதற்கு முன்னாள் இவர் பொருட்டால் இறை மறுப்பாளர்களுக்கு எதிராக வெற்றி வேண்டிக்கொண்டிருந்தார்கள்''.
(அல் குர்ஆன் 2:89)
அண்ணலார் நபியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பே பஹீரா போன்ற பல அண்ணலாரின் பரக்கத்தைப் பெறத் தவம் கிடந்திருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் விளக்குவதைப் போன்றே அண்ணலாரின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும்,அவர்களின் திறமையையும் எடுத்தோதிக்கிறது.
சிறு வயதினராக இருந்தாலும்,அவர்களையே வியாபாரிகள் தங்கள் பொருட்களைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ள தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஆம்,அந்தப் பருவத்திலேயே ''அல் அமீன்''-நம்பிக்கையாளர்.
''அஸ்ஸாதிக்''-உண்மையாளர் என்று அவர்கள் பெயரெடுத்தார்கள். வாலிபத்திலும் அருட்கொடை
இஸ்லாம்
இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளது; இஸ்லாமிய சமூகத்தின்
மிக மகத்தான சொத்தாக மதிக்கிறது. உலகில் சத்தியம் நிலைக்கவும், அசத்தியம்
அழியவும், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தவர்கள் இஸ்லாமிய இளைஞர்களே! நபி
(ஸல்) அவர்கள் தமது ஏகத்துவப் பிரசாரத்தை, ஜாஹிலிய்யத்துக்கு எதிராக
மக்காவில் ஆரம்பித்த போது, முதலில் விளங்கி, அதிகளவு விரும்பி ஏற்று,
செயற்பட்டு அதனைப் பிரசாரப்படுத்த துணை நின்றவர்களும் இளைஞர்களே! நபி (ஸல்)
அவர்களுக்கு முன்னர் உலகில் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு
அனுப்பப்பட்ட தூதர்களின் ஆதிமீக, பிரசார வரலாற்றிலும் இளைஞர்களின் பணி
மகத்தானது.
1. மரணம் வரமுன் வாழ்க்கையையும்.
2. நோய் வரமுன் உடலாரோக்கியத்தையும்.
3. அதிக வேலை பழுக்கள் வரமுன் ஓய்வு நேரத்தையும்.
4. முதுமை வரமுன் இளமைப் பருவத்தையும்.
5. வறுமை வரமுன் செல்வநிலையையும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி)
நூல் : நஸாயீ.
உற்றார்,உறவினர்களிடம் அருட்கொடை....மனைவியிடம் நல்லவரே உங்களில் நல்லவர்.(முஹம்மதாகிய)நான் என் மனைவிமார்களுக்கு நல்லவனாக இருக்கிறேன்.(நூல்:திர்மிதி)
ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தங்களது அழகிய வழிமுறையை தோழர்களுக்கு கற்றுக்கொடுத்து குடும்ப வாழ்க்கையிலும் வணக்க வழிபாட்டிலும் எவ்வாறு நடுநிலையுடன் நடக்கவேண்டும் என்று வழிகாட்டினார்கள். ஆகவேதான் மார்க்கத்தில்நடுநிலையை கையாளும் குணம் நபித்தோழர்களின் இயற்கை பண்பாகவே மாறிவிட்டது.
அன்னை அயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தார்கள். இருவரும் ஒட்டப்பந்தயம் வைத்தபோது ஆயிஷா (ரழி) அவர்கள் முந்திவிட்டார்கள். கொஞ்சம் சதைபோட்ட பிறகு இருவரும் ஒடினார்கள். அப்போது நபி (ஸல்) முந்திவிட்டார்கள். "இது அந்தப் பந்தயத்திற்கு பதிலாகிவிட்டது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸன்னன் அபூ தாவுத், முஸ்னத் அஹ்மத்)
தனது நேசமிகு இளம் மனைவியின் இதயம் மகிழ்ச்சி அடையவேண்டும் என்பதற்காக அவர்களை அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளைக் காண்பித்து அதை அவர்கள் பார்த்து ரசித்ததைக் கண்டு நபி (ஸல்) அவர்களும் மகிழ்ந்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது சிறுவர்கள்,
பெரியவர்களின் ஆரவாரத்தை செவியுற்றார்கள். அங்கு சில ஹபஷிகள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். மக்கள்
அவர்களை சூழ்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் "ஆயிஷாவே! இங்குவந்து பார்'' என்றார்கள். எனது
கன்னங்களை அவர்களது தோளின் மீது வைத்துக்கொண்டு, நான் அவர்களது புஜத்துக்கும் தலைக்கும் மத்தியிலிருந்து
பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் "ஆயிஷாவே உனக்கு திருப்தியா? ஆயிஷாவே உனக்கு திருப்தியா?''
என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். என்மீது அவர்களுக்கு இருந்த நேசத்தை அறிந்துகொள்வதற்காக நான்
"இல்லை'' என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன், தங்களது
இருபாதங்களையும் (வலியின் காரணமாக) மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தார்கள். (ஸன்னனுன் நஸயீ)
மற்றோர் அறிவிப்பில், அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "அல்லாஹ்வின் மீது
ஆணையாக! நான் நபி (ஸல்) அவர்களை என்னுடைய அறையின் வாசலில் நிற்கக் கண்டேன். ஹபஷிகள் சிலர்
மஸ்ஜிதில் ஈட்டியைக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களின் காதுக்கும்
தோளுக்கிடையிலிருந்து அந்த விளையாட்டைக் காண்பதற்காக நபி (ஸல்) அவர்கள் என்னை தனது மேலாடையால்
மறைத்துக் கொண்டார்கள். நானாக திரும்பிச் செல்லும்வரை எனக்காக நபி (ஸல்) அவர்கள் நின்று
கொண்டிருந்தார்கள். விளையாட்டில் ஆர்வமுள்ள இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை
நீங்களே மதிப்பிட்டுப் பாருங்கள்!'' (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியரிடம் கொண்டிருந்த நல்லுறவு, நகைச்சுவை போன்ற பண்புகளைக் காணும்
உண்மை முஸ்லிம், தனது மனைவியுடன் நல்லவராகவும் அவளுக்கு உறுதுணையாகவும் அவளுடன் அன்பான குணமுடையவராகவும்
மிருதுவானவராகவும் நடந்துகொள்வார்.
உறவுகள்....... அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்காகவும், தனக்காகவும் அளப்பரிய தியாகங்கள் செய்தவர்களை நினைத்து பல சந்தர்பங்களில் ஆனந்தக் கண்ணீருடன் அழுதுள்ளார்கள். அதனை விளக்கும் ஒரு சில சம்பவங்கள் இதோ.
ஒரு தாய் தன்னுடைய மகனைப் பிரிந்து பல நாட்கள் கழித்து சந்தித்தாலோ, அல்லது ஒரு சகோதரி நீண்ட நாட்கள் பிரிந்த தன்னுடைய சகோதரனை மீண்டும் சந்தித்தாலோ, அல்லது ஓர் உற்ற நண்பன் தன்னுடை இளமை காலத்து நண்பனை நீண்டதொரு இடைவேளைக்கு பிறகு சந்தித்தாலோ ஆனந்த கண்ணீர் வருவது இயல்பானது. இது நம்மில் எல்லோருக்கும் பல சந்தர்பத்தில் ஏற்பட்டிருக்கும். இது போலவே அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது அது அந்த நபர்களின் தியாகத்தை நினைத்து கண்ணீர் சிந்தியுள்ளார்கள்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்களின் சபைக்கு ஒரு பெண் வந்தார்கள், அவர்கள் யார் என்றால், நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய பால்யகாலத்தில் தாயை இழந்து, பிறகு ஹலீமா ஸஃதிய்யா என்ற பெண்மணி அவர்களிடம் பால்குடித்து வளர்ந்தார்கள் என்பது நாம் வரலாற்றில் அறிந்த தகவல். அந்த பால்குடித் தாய் அவர்களின் மகளார் பல வருடங்களுக்குப் பிறகு தீன்குலத் தலைவர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார்கள். தன்னுடைய பால்குடி சகோதரிக்கு தன்னிடம் இருந்த விரிப்பை விரித்துவிட்டு, அவர்கள் தன்னருகில் அமர வைத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ட தன் சகோதரியைப் பார்த்து மாண்புமிகு இறைத் தூதர் நபி(ஸல்) அவர்கள் சந்தோசத்தில் அழ ஆரம்பித்தார்கள், தன்னுடைய தாடி நனைகின்ற வரை அழுதுள்ளார்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது.
அப்போது நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களிடம் சொன்னார்கள், “எனக்கு இந்த சகோதரியின் தாய் பாலுட்டினார், அந்த பாலூட்டிய தாயுடைய மகளுக்கு நான் எவ்வளவு கொடுத்தாலும், அவைகள் அந்த பாலூட்டிய தாயின் தியாகத்துக்கு ஈடாகாது” என்று சொல்லி பெருமிதம் கொண்டதோடு அல்லாமல், தன்னுடைய பால்குடி சகோதரிக்கு சில சொத்துக்களைக் கொடுத்தார்கள் என்று வரலாற்று தொகுப்புகளில் (முஸ்னத் அப்துற்றஜ்ஜாக்) காண முடிகிறது.
குழந்தை பருவத்தில் தன்னோடு ஒன்றாக ஒரே தாயிடன் பால்குடித்து வளர்ந்த அந்த சகோதரியைப் பல வருடங்கள் கழித்து பார்த்த சந்தோசத்தாலும், அந்த பாலூட்டிய தாய் தனக்காக செய்த தியாகத்தை நினைத்தும் ஆனத்தக் கண்ணீர் விட்டு நம்முடை தலைவர் நபி(ஸல்) அழுதுள்ளார்கள் என்பதை இந்தச் சம்வங்களில் இருந்து நாம் காணமுடிகிறது.
வறுமையிலும்......
நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் வெளியில் வேகமாக நடந்து வருகிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களை முதன் முதலில் உண்மைபடுத்திய (சித்தீக்) உண்மையாளர் என்று ஒட்டுமொத்த முஸ்லீம்களால் அழைக்கப்படும் அபூபக்கர்(ரலி) அவர்களும் அதே பட்டப் பகலில் வெளியே வருகிறார்கள். அந்த வீரத்தோழரும், உண்மை தோழரும் தெருவில் சந்திக்கிறார்கள்.
“என்ன உமரே இந்த பகல் நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்” என்று அபூபக்கர்(ரலி) கேட்க, அதற்கு உமர்(ரலி) அவர்கள் “எனதருமை தோழர் அபூபக்கரே பசி தாங்க முடியவில்லை, அதுதான் நபி(ஸல்) சபைக்குச் செல்கிறேன்” என்று சொன்னார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் கையைப் பிடித்து “அதே நிலைதான் எனக்கும் உமரே, வாருங்கள் நபி(ஸல்) அவர்களின் சபைக்கு நாம் செல்வோம்” என்று கூறி இருவரும் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.
நபி(ஸல்) அவர்களும் அந்த வெயில் நேரத்தில் வெளியில் வருகிறார்கள், தன்னுடைய அருமைத் தோழர்கள் இருவரும் நடுப்பகலில் தெருவீதியில் வேகமாக வருவதைக் கண்டார்கள். “என்ன தோழர்களே எங்கே இந்த வெயில் நேரத்தில் கிளம்பிவிட்டீர்கள்” என்று கேட்டார்கள்.
அந்த தோழர்களில் ஒருவர் சொன்னார்கள் “யா ரசூலுல்லாஹ் பசி தாங்முடியவில்லை அதான் உங்களைச் சந்திக்க வந்தோம்” என்றார்கள். உடனே நபி(ஸல்) “எனது உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நானும் அதற்காகத்தான் வெளியில் வந்தேன்” என்று கூறி அந்த உத்தம தோழர்கள் இருவரைக் கட்டி அனைத்து, “வாருங்கள் நம் அருமை தோழர் அபூ அய்யூப் அல் அன்சார்(ரலி) அவர்கள் வீட்டிற்குச் செல்வோம்” என்று அவ்விருவரையும் அழைத்துச் சென்றார்கள்.
உத்தம நபியின் மதீனத்து உண்ணத தோழர் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களும், உமர்(ரலி) அபூபக்கர்(ரலி) ஆகியோரின் வருகையை அறிந்து உடன் தன் இல்லத்திற்கு வந்தார்கள். உணவு சமைத்து வருவதற்கு முன்பு வந்த விருந்தாளிகள் மூவருக்கும் பேரீத்தம்பழங்களைக் கொடுக்கிறார்கள் கொஞ்சம் பசியார வைக்கிறார்கள்.
பிறகு உணவு சமைத்து தட்டில் வைத்து, அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கும், அருமை தோழர்களுக்கும் பரிமார மிக ஆவலோடு வருகிறார்கள். அப்போது நபி(ஸல்) திடீரென எழுகிறார்கள், சஹபாக்கள் இருவரும் என்ன ரஸூலுல்லாஹ் எழுந்துவிட்டார்களே என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை தன் தோழர்களுடைய பசி, தன்னுடைய பசியைப் பற்றியே பேசிய நபி(ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களைப் பார்த்து “ நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்கிறோம் அபூ அய்யூப் அல் அன்சாரி அவர்களே, இந்தத் தட்டில் உள்ள உணவை என்னுடை அருமை மகள் ஃபாத்திமா அவர்களிடம் சென்று கொடுத்துவிட்டு வாருங்களேன். வீட்டில் என்னுடைய மகள் ஃபாத்திமாவும்(ரலி), மருமகன் அலி(ரலி), பேரக்குழந்தைகள் ஹசன்(ரலி) ஹுசைன்(ரலி) ஆகியோரும் பசியோடு இருக்கிறார்கள், சாப்பிட்டு பல நாட்களாகிவிட்டது.” என்று கேட்டுக்கொண்டார்கள். அதுவரை நபி(ஸல்) அவர்களும் இரு தோழர்கள் மட்டும் தான் பசியாக இருக்கிறார்கள் என்று எண்ணிய அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களுக்கு அப்போது தான் தெரிந்தது நபி(ஸல்) அவர்களின் குடும்பமே பசியில் உள்ளது என்று. சுப்ஹானல்லாஹ்….
அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் அந்த உணவை ஃபாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்குச் சென்று கொடுத்துவிட்டு, நபி(ஸல்) அவர்களை உபசரிப்பதற்காக தன் வீட்டிற்கு வந்தார்கள், பிறகு நபி(ஸல்) அவர்களுடனும், மற்ற இரு தோழர்களுடம் உணவருந்தினார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் நபி(ஸல்) அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள், தாடி நனையும் வரை அழுதார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களைப் பார்த்து அழுதவர்களாக சொன்னார்கள் “ இதோ ரொட்டி, இதோ இரைச்சி, இதோ பேரீச்சம்பழம் என்று விதவிதமாக சாப்பிடுகிறோமே, இதற்கெல்லாம் நாளை மறுமையில் அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்பான் தோழர்களே, அதை நினைத்து அழுகிறேன் என்றார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது. சுப்ஹானல்லாஹ்.
நபியின் கால் பதித்த மதீனத்துப் பட்டணம் கூட அருட்கொடை
மக்காவும், மதீனாவும் ‘ஹரமைன்’ இரண்டு புனிதத் தளங்கள் என அழைக்கப் படுகின்றன. ‘ஹரம்’ என்றால் தடுக்கப்பட்டது, புனிதமானது என்பன அர்த்தங்களாகும். ஹரம் எல்லையில் வேட்டையாடுவது, உயிர்களைக் கொல்வது, மரங்களை முறிப்பது போன்றவை தடுக்கப்பட்ட வையாகும்.
நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் கஃபாவைக் கட்டி விட்டு,
‘என் இரட்சகனே! (மக்காவாகிய) இதை அபயமளிக்கும் நகரமாக ஆக்குவாயாக!” (2:126) எனப் பிரார்த்தித்தார்கள். அதனை அல்லாஹ் அங்கீகரித்தான்.
இது குறித்து நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அவர் கள் அறிவிக்கிறார்கள்.
‘இப்றாஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனிதமாக்கி அதற்காகப் பிரார்த்தனையும் புரிந்தார்கள். இப்றாஹீம் நபி மக்காவுக்காகப் பிரார்த்தித்தது போன்று மதீனாவைப் புனிதமாக்கி அதன் அளவையின் அபிவிருத்திக்காக நானும் பிரார்த்தித்தேன்!” எனக் கூறினார்கள்.
(பார்க்க: புகாரி 2129, முஸ்லிம் 454)
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘பாம்பு தன் பொந்துக்குள் ஒதுங்கு வது போல் ஈமான் மதீனாவுக்குள் ஒதுங்கி விடும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 1876, முஸ்லிம் 1777)
மதீனாவில் இஸ்லாத்தின் சுடர் பிரகாசிக்கும் என்பதற்கும், உலகம் அழியும் காலம் வரை மதீனாவில் ஈமானிய ஜோதி பிரகாசித்துக்கொண்டிருக்கும் என்பதற்கும் இது ஆதாரமாக அமைகின்றது.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘யத்ரீப்’ எனும் ஏனைய நகரங்களைச் சாப்பிட்டுவிடக் கூடிய இந்த (மதீனா) நகருக்கு (ஹிஜ்ரத்) செய்யுமாறு நான் ஏவப்பட்டேன்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பரகத் பொதிந்த பூமி:
மதீனா பரகத் பொதிந்த பூமியாகும்.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது, ‘யா அல்லாஹ்! எமது (மதீனாவின்) கனிகளில் அருள் புரிவாயாக! யா அல்லாஹ்! எமது மதீனாவில் அருள் புரிவாயாக! யா அல்லாஹ்! எமது ஸாஉ என்னும் அளவையிலும், முத்து எனும் அளவையிலும் அருள் புரிவாயாக!” என அவர்கள் துஆச் செய்தார்கள்.
(முஸ்லிம் 473, 3400, திர்மிதீ 3454,
இப்னுமாஜா 3329)
எனவே மதீனா அருள் பொருந்திய பூமியாகும்.
பாதுகாக்கப்பட்ட பூமி:
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘மதீனா நகருக்கு இரண்டு விதமான முக்கிய பாதுகாப்புகளை அல்லாஹ் வழங்கியுள்ளான். மதீனாவைச் சூழ மலக்குகள் பாதுகாப்புக்காக இருக்கின்றனர். அவர்கள் காலரா நோயையும், தஜ்ஜாலையும் உள்ளே நுழைய விட மாட்டார்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி1880, 7133, முஸ்லிம் 485, 3416)
காருண்ய நபியின் மரணமும் அருட்கொடை
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக: (வானவர்) ”ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை இரு முறை ஓதச்செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட (தைக் குறிப்ப) தாவே அதை நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்கள். (புகாரி) இது ஹிஜ்ரி 10ம் ஆண்டு ரமதான் மாதம் நடந்த சம்பவம்.
ஹிஜ்ரி 10ம் ஆண்டு ஹஜ்ஜின் போது,
”நீங்கள் உங்களது ஹஜ் கடமைகளை (என்னிடமிருந்து) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா) மாட்டேனா என்பதை அறிய மாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். (முஸ்லிம்)
மதீனா பள்ளியில் மிம்பரில் ஏறி, ”நான் உங்களுக்கு முன் செல்கிறேன். உங்களுக்கு சாட்சியாளனாக இருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்னும் இதுபோல் நபியவர்களின் பல இறுதி உபதேசங்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை பிரியும் வேளை நெருங்கி, அவர்களது மரணச் செய்தி நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்பதை உணர்த்துகிறது.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
”இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்” (திருக்குர்ஆன், 005:003)
தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.
நபி (ஸல்) அப்போது “இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்…
அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை… (ஸஹீஹுல் புகாரி)
கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.
ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 5 நாட்கள் ஆகியிருந்தன.
إنا لله وإنا إليه راجعون
நாளை மறுமை நாளிலிலும் அருட்கொடைமறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, 'நமக்கு ஏற்பட்டுள்ள கவலையிலிருந்து(துன்பங்களிலிருந்து) நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)' என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, 'நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். 'நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்' என்று சொல்வார்கள்.
உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று
கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம்
இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம்(அலை) அவர்களிடம்) செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே,
இறைநம்பிக்கையாளர்கள்
(இப்ராஹீம் - அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே,
அவர்கள்
மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், '(நீங்கள் நினைக்கும்)
அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக்
கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, 'நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது
அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான்
இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்)
அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.
உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'என்னுடைய
இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி
வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான்
விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) 'உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்!
உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும்.
பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும் அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு
நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார்
வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு
அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக்
காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும்
இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம்
என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக
(இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், 'குர்ஆன் தடுத்துவிட்ட,
நிரந்தர நரகம்
கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை' என்று சொல்வேன்.
என
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.இமாம்
புஹாரி(ரஹ்),இமாம் முஸ்லிம்(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்),இமாம் அபுதாவுத்(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்),இமாம் நஸயி(ரஹ்)....))
நபி (ஸல்) அவர்கள் (அஷ்ஷாஃபிஉல் முஷஃப்பிஉ)
சிபாரிசு செய்பவர்களும், அவர்களின் சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்படக்
கூடியவர்களும் ஆவார்கள் என்பதை நபி ஈஸா (அலை) அவர்கள் விளக்கினார்கள். ஸலவாத்தும் அருட்கொடையே
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லப்படும்வரை துஆக்கள்
அனைத்தும் (அல்லாஹ்விடம் செல்ல முடியாமல்) தடுக்கப்பட்டதாக இருக்கும்' (ஆதாரம் பைஹகீ)
பூமியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வுடைய சில மலக்குகள் இருக்கின்றனர். என்னுடைய உம்மத்துகளில் என்மீது ஸலாம் சொல்லுகின்றவர்களின் ஸலாமை, அவர்கள் என்மீது எத்தி வைக்கின்றனர்' (ஆதாரம்: அஹ்மத்)
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். (ஆகவே) மூமின்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்" (33:56)
யா அல்லாஹ்! நபி(ஸல்)அவர்களின் உன்னதமான சுன்னத்தை பின்பற்றி வாழும் பாக்கியத்தையும்,ஸலவாத் சொல்லும் பாக்கியத்தையும்,நாளை மறுமை நாளில் ஷபாஅத் பெறக்கூடிய பாக்கியத்தையும் தந்தருள் புரிவாயாக!ஆமீன்.
குறிப்பு வழங்கியவர்கள்: மௌலானா நஸீர் மிஸ்பாஹி
மௌலானா ஷாகுல் ஹமீத்
மௌலானா சிராஜுதீன்
மௌலானா இல்யாஸ் மிஸ்பாஹி
மௌலானா அஹ்மது ஹஸன் கட்டுரையின் விரிவை அஞ்சி சில இணைப்புகளை இங்கே தருகிறோம். அவற்றை க்ளிக் செய்து மேலதிக தகவல்களை வாசிக்கலாம்.
- அகிலத்தின் அருட்கொடை
- அகிலாத்தாருக்கு ஓர் அருட்கொடை
- அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 1 : நபிகள் நாயகம்!
- கருணை
தாங்கள் துஆ வோடு தொகுத்து வழங்கியவர்
கம்பம் மௌலவி ஹாபிழ் சுல்தான் முஹையித்தீன் ஸலாஹி.
0 comments:
Post a Comment