29 January 2015

ஆன்மீக புரட்சியாளர் கௌதுல் அஃலம் முஹியித்தீன் அப்துல் கதிர் ஜீலானி (ரஹ்)

ஒவ்வொரு வருடம் ரபீவுல் ஆகிர் மாதம் வந்தவுடன் நம் நினைவில் முதலில் வருவது இறைநேசர்களின் தலைவர் சய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள்தான்.
எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக உருவாக்கிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல்.
இப்படிபட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது மிக முக்கியமானது.
ஜனனம்
எமது ஆத்மீக கடல், ஞானதீபம், மெய்நிலை கண்ட ஞானி, மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள், ஹிஜ்ரி 470 ரமலான் மாதம் திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் ஈராக் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள்.
ஜனனத்தின் மகத்துவம்
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் 11 வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளை யாவார்கள். இவர்களின் தந்தையாரின் பெயர் ஸைய்யது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா ( رضي الله عنه) தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும். இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடைவர்களாகவும் விளங்கினார்கள். மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள். இவர்களின் பரம்பரை ஒரு பரிசுத்தமான குடும்பம்.
பக்குவமான தந்தை
தந்தை ஒரு நாள் கடும் பசியுடன் காட்டில் நடந்து செல்லும் போது ஆப்பிள் ஒன்று ஆற்றில் மிதந்து வர அதை எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாருடைய ஆப்பிள் தெரியவில்லையே' என்ற உறுத்தல் வரவே அந்த ஆறு ஒடிவரும் திசையை நோக்கி பலமைல் தூரம் நடந்து சென்று ஒரு வீட்டை அடைந்து அங்குள்ள மரத்தின் உரிமையாளரிடம் ஹலால் தேடுகிறார்கள். அவர், என் மகளைத் திருமணம் செய்தால் ஹலால் செய்கிறேன்' ஆனால் அவள் குருடி; ஊமை; நொண்டி; இரண்டு கையும் சூகை; என்கிறார். பரவாயில்லை. என் உடலில் ஹராமான ஒரு உணவு கூட இருக்கக்கூடாது. அதை ஹலாலாக்கிவிடுங்கள். அதற்காக என்ன பரிகாரத்தையும் நான் ஏற்கத் தயார். திருமணம் முடிந்து மணமகளைப் பார்த்து பரவசம் அடைந்தனர். ஏனெனில் அழகென்றால் அழகு அவ்வளவு அழகு. ஒரு குறை இல்லை. பிறகு ஏன் உன் தந்தை இப்படி சொன்னார் ?  என்றதற்கு அந்த மாது விளக்கம் சொன்னார்: என் தந்தை சொன்னது உன்மைதான்.
பக்குவமான தாய்
என் கண்கள் தீமைகளைப் பார்க்காத குருடுதான். என் கைகள் தீயவற்றைச் செய்யாத ஊனம்தான். என் கால்கள் பாவத்தின் பக்கம் நடக்காத நொண்டிதான்.
இந்த தம்பதியருக்கு பிறந்தவர்கள்தான் தவசீலர் கௌதுனா அவர்கள். கடும் பசி நேரத்திலும் ஹராம் உண்டுவிடக்கூடாது என்ற பரிசுத்தமான தந்தை. எந்த நேரத்திலும் தீமைகளை நினைத்துக்கூட பார்க்காத தாய். இவர்களின் உதிரத்தில் உதித்தவரும் உத்தமராகத்தானே இருப்பார்கள்?
அவர்கள் இவ்வையகத்தில் பிறந்த இரவு நிகழ்ந்த அற்புதங்களை அவர்களது அருமைத்தாயார் பின்வருமாறு விபரிக்கின்றார்கள்.
பிறந்த நேரத்தில் நடந்த அற்புதங்கள்
1) ஸஹாபாக்கள், வலிமார்கள், இமாம்கள், சகிதம் குத்பு நாயகத்தின் தந்தையின் கனவில் தோன்றிய பெருமானார் (ஸல்) அவர்கள், உங்களுக்குப் பிறக்கப்போகின்ற குழந்தை எனது காதலரும், அல்லாஹ்வின் அன்பாளரும் ஆவார்கள் என சுப சோபனம் கூறினார்கள்.
2) “வலிமார்கள்அனைவரும் உங்கள் மகனுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள். எனவும், அவரது கால் பாதங்களை தங்களது புயங்களின் மேல் சுமந்தோராகவும், இருப்பர் என பெருமானாரைத் தொடர்ந்து ஸஹாபாக்கள் வாழ்த்துக் கூறினர்.
3) அன்று இரவு பிறந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகள் குத்பு நாயகத்தின் பொருட்டால் விலாயத்தைப் பெற்றன.
4) மாண்புமிகு நோன்பு தலைப்பிறையன்று குத்பு நாயகம் பிறந்த காரணத்தால் அன்றைய தினம் பால் அருந்த மறுத்து விட்டார்கள்.
5) குத்பு நாயகத்தின் தோள் புயத்தின் மீது பெருமானார் (ஸல்) அவர்களின் புனித பாதங்களைச் சுமந்த அடையாளம் காணப்பட்டது.
கல்வி கற்றல்
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள். தனது உயர்தர கல்வியை பக்தாதுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த மாபெரும் அறிஞர்களிடம் கற்றார்கள்.
முதல் புரட்சி
அவர்கள் கல்வி கற்க சென்ற வழியில் ஒரு கொள்ளைக் கூட்டம் திருடமுயன்றதும், அவர்களிடம் உண்மை உரைத்ததால் திருடர்கள் மனம் மாறி மார்க்கத்தை ஏற்றதும் பிரபல்யமானது. தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள். இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, அபுல் உபா அல பின் ஹகீம், அபூ காலிப் அஹ்மது, அபுல் காஸிம் அலி, அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி رضي الله عنه போன்றவர்கள். இவர்களிடம் எல்லா விதமான மார்க்க கல்வியை கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள்.
ஷைக்கின் சகவாசம்
எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள். எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷைக் அவர்கள் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் கௌஸுல் அஃலம் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திட நம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் தஸவ்வுஃப்என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், ” இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வினால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு கட்டுப்படுவார்கள்என்று கூறினார்கள்.
துறவு நிலை
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம் செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் வுளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபஹ் தொழுகையையும் தொழுவார்கள். ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட கடும் தவம்! அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகைகளையும் தொழுது , குர்ஆனைப் பற்றி சிந்தனையிலும் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள்.
காதிரியா தரீக்காவின் உருவாக்கம்
ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ம் இரவன்று கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தோன்றி, “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்எனக் கேட்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள், “யா ரசூலல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அரபி இல்லையே! அஜமிதானே. எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபு மொழியில் பேச தயங்குகிறேன்என்று கூறினார்கள். இந்த பதிலைக்கேட்ட அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்த முகத்துடன் கௌஸு நாயகத்தின் வாயை திறக்கச்சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலை துப்பினார்கள். அதற்கு பிறகு கௌஸுல் அஃலத்தின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத்தொடங்கியது. அவர்களின் பயானைக்கேட்க பல ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் கூட்டம், கூட்டமாக பக்தாத்துக்கு வரத்தொடங்கினார்கள். கௌஸு நாயகம் رضي الله عنه இஸ்லாத்திற்கு செய்த சேவையால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேர்வழிப்பெற்றார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களின் முரீதாகி அவ்லியாக்கள் ஆனார்கள். அவர்களின் ஒரு பயானுக்கு 70 ஆயிரம் பேர்கள் கூடி பயான் கேட்டார்கள். பயானை கேட்டதும் மட்டுமல்ல அதை தங்கள் வாழ்க்கையில் எடுத்தும் நடந்தார்கள். மக்கள் தன் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி நல்லவர்களாக வாழவே கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்கள் காதிரியா தரீக்காவை உருவாக்கினார்கள். திக்ருகளையும், நபில் தொழுகைகளையும் போதித்தார்கள். ஒவ்வொரு ஹாஜத்துகளையும் அடைய தன் முரீதுகளுக்கு திக்ரு முறைகளை சொல்லி கொடுத்தார்கள்.
முஹ்யித்தீன் என்ற சிறப்பு பெயர்
ஸைய்யதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார், அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார். இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம் அவர் சொன்னார்: நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும், நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹ்யித்தீன் ஆவீர்கள்.என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார்.
அல்லாஹ்வின் கட்டளையை வெளிப்படுத்தல்
கௌஸுல் அஃலம் அவர்களின் 89ம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள் : எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறதுஎன்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸுல் அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள்.
குடும்ப வாழ்க்கை
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தமது வாலிப வயதில் ஆத்மீக கல்வி கற்பதிலும், தவத்திலும் ஈடுபட்டு விட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஹிஜ்ரி 521ல் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கௌஸுல் அஃலம் அவர்களின் கனவில் தோன்றி திருமணம் செய்து கொள்ளுமாறும், அதுவே உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடைய அவசியமும் ஆகும் என்றார்கள். அதையொட்டி அவர்கள் திருமணம் செய்தார்கள். தமது 51ம் வயதில் நான்கு மனைவிமார்களை மணந்து 27 ஆண் குழந்தைகளையும், 22 பெண் குழந்தைகளையும் மொத்தம் 49 குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் ஆண் மக்கள் சிறந்த கல்விமான்களாகவும், வலிமார்களாகவும் ஆனார்கள். அதில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய தஃவா பணியை சிறப்பாக செய்தார்கள்.
மறைவு
40 ஆண்டுகள் சன்மார்க்க பிரச்சாரம் புரிந்த மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தங்கள் பூத உடலைவிட்டு மறையும் நேரம் வந்தது. அதை லௌஹுல் மஹ்பூல் என்னும் ஏட்டில் அவர்களால் பார்க்க முடிந்தது.

கௌஸுல் அஃலம் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்த்தியதும் சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாகஎன்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது. கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 9வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள். அல்லாஹ்வின்பால் அண்மித்துவிட்ட அவர்களுக்கு மரணமேது!!! 
(அன்னாரின் வரலாறு முகவுரைக்காக தரப்பட்டுள்ளது)

ஆன்மீக புரட்சியாளர்
முஹ்யித்தீன்அப்துல் காதிர்  ஜீலானி (ரஹ்) வாழ்வும் வாக்கும்  இஸ்லாம் கண்ட மிகப்பெரிய சீர்திருத்த வாதி.
 முஸ்லிம் சமுதாயம் அறிவு வழி பயணித்தாலும் ஆன்மீக வழியில் சென்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து வழி தவறிவிடக்கூடாது என்பதை அழுத்தமாக போதித்தவர்கள். இறைச்சிந்தனையே வாழ்வாக கொண்டு நடப்பதில்முன்னோடி      உலக ஆசாபாசங்களையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து விடாமல் இறைச்சிந்தனையோடும் மக்கள் வாழ்வதற்காகவே காதிரிய்யா தரீக்காவின் முறையை கொடுத்தவர். பல்வேறு ஷைகுகளின்  வழிகாட்டுதலின் படி உருவான பக்தி மார்க்கமான தரீக்காக்களை (ஷாதுலிய்யா, நக்ஷபந்திய்யா ,சிஸ்திய்யா) ஒருங்கிணைத்தவர்கள். ஆன்மீகம் என்பதற்கு சரியான இலக்கணம் கொடுத்தவர்கள்.  கேட்போரை அப்போதே ஈர்த்துவிடும் அற்புதமான ஈர்ப்பு சக்திமிக்க சொற்பொழிவுகளால் எராளமான குற்றவாளிகளை திருத்தினார்கள் 50ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமானவர்கள். ஏராளமானஅற்புதங்களுக்கு சொந்தக்காரர்கள். அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறோம்.வழக்கம் போல அவரைப்பற்றி நமக்கு தெரியாது.
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை பாதைக்கு மக்களை பெருமளவில் அழைத்து வந்த புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்ததால் முஹ்யித்தீன் மார்க்கத்திற்கு உயிரூட்டியவர் என்று சிறப்பு பெயரிட்டு அழைக்கப்பட்டார்கள்.
அன்னாரது உபதேசங்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் சக்திமிக்கதாக அமைந்த்திருந்த்து.

ஒரு நாள் தனது உரையில் அவர்கள் கூறினார் : 
ﺃﻧﺖ ﻣﻌﺘﻤﺪ ﻋﻠﻴﻚ ، ﻭﻋﻠﻲ ﺍﻟﺨﻠﻖ ، ﻭﺩﻧﺎﻧﻴﺮﻙ
ﻭﺩﺭﺍﻫﻤﻚ ، ﻭﻋﻠﻲ ﺑﻴﻌﻚ ﻭﺷﺮﺋﻚ ، ﻭﻋﻠﻲ ﺳﻠﻜﺎﻥ
ﺑﻠﺪﻙ ، ﻛﻞ ﻣﻦ ﺇﻋﺘﻤﺪﺕ ﻋﻠﻴﻪ ﻓﻬﻮ ﺇﻟﻬﻚ ، ﻭﻛﻞ ﻣﻦ
ﺧﻔﺘﻪ ﻭﺭﺟﻮﺗﻪ ﻓﻬﻮ ﺇﻟﻬﻚ، ﻛﻞ ﻣﻦ ﺭﺃﻳﺘﻪ ﻓﻲ ﺍﻟﻀﺮ
ﻭﺍﻟﻨﻔﻊ ، ﻭﻟﻢ ﺗﺮ ﺃﻥ ﺍﻟﺤﻖ ﻳﺠﺮﻱ ﺫﻟﻚ ﻋﻠﻲ ﻳﺪﻳﻪ ﻗﻬﻮ
ﺇﻟﻬﻚ : ﺍﻟﻔﺘﺢ ﺍﻟﺮﺑﺎﻧﻲ - ﺍﻟﻤﺠﻠﺲ
நீ உன்னை நம்புகிறாய! படைப்புக்களை நம்புகிறாய்! உனது தீனார்களையும் திர்ஹம்களையும் நம்புகிறாய்! உனது கொடுக்குதல் வாங்குதலை நம்புகிறாய்! உனது ஊரின் சுல்தானை நம்புகிறாய்! யார் மீது நீ பிடிமானம் கொண்டிருக்கிறாயோ அது தான் உனது கடவுள். யாரை நீ பயப்படுகிறாயோ! ஆசைப்படுகிறாயோ அது தான் உனது கடவுள். அல்லாஹ் தான் எல்லாவற்றையும் நட்த்துபவன் என்று எண்ணாமல் நன்மையும் தீமையும் யார் வழியாக ஏற்படுகிறதோ அதை நீ நம்பினால் அது தான் உன்னுடைய கடவுள்.
ஜீலானி ரஹ் அவர்கள் மற்றொரு நாள் இவ்வாறு கூறினார்.
ﻛﻞ ﻣﻦ ﻳﺮﻱ ﺍﻟﻀﺮﺭ ﻭﺍﻟﻨﻔﻊ ﻣﻦ ﻏﻴﺮ ﺍﻟﻠﻪ ﻓﻠﻴﺲ ﺑﻌﺒﺪﻟﻪ ، ﻫﻮ ﻋﺒﺪ ﻣﻦ ﺭﺃﻱ ﺫﻟﻚ ﻟﻪ : ﺍﻟﻔﺘﺢ ﺍﻟﺮﺑﺎﻧﻲ     
அல்லாஹ் அல்லாத மற்ற எதனிடமிருந்து நன்மையும் தீமையும் ஏற்படுகிறது என்று கருதுகிற எவனும் அல்லாஹ்வின் அடிமை அல்ல.அவன் எதை நம்புகிறானோ அதன் அடிமையாவான்.
 இவ்வுலக ஆசையில் திழைப்பதை எச்சரித்தார்
ﻭﻳﺤﻚ ! ﺍﻟﺪﻧﻴﺎ ﻓﻲ ﺍﻟﻴﺪ ﻳﺠﻮﺯ ، ﻓﻲ ﺍﻟﺠﻴﺐ ﻳﺠﻮﺯ ،
ﺇﺩﺧﺎﺭﻫﺎ ﻟﺴﺒﺐ ﻭﺑﻨﻴﺔ ﺻﺎﻟﺤﺔ ﻳﺠﻮﺯ ، ﺃﻣﺎ ﻓﻲ ﺍﻟﻘﻠﺐ
ﻓﻼ ﻳﺠﻮﺯ . ﻭﻗﻮﻓﻬﺎ ﻋﻠﻲ ﺍﻟﺒﺎﺏ ﻳﺠﻮﺯ ، ﺍﻣﺎ ﺩﺧﻮﻟﻬﺎ ﺇﻟﻲ
ﻭﺭﺍﺀ ﺍﻟﺒﺎﺏ ﻓﻼ . ﻭ ﻻ ﻛﺮﺍﻣﺖ ﻟﻚ . ﺍﻟﻔﺘﺢ ﺍﻟﺮﺑﺎﻧﻲ -
ﺍﻟﻤﺠﻠﺲ 51
உனக்கு நாசமே! இந்த உலகம் உனது கையில் இருக்கட்டும். உனது பையில் இருக்கட்டும். ஒரு தேவைக்காக அல்லது நல்ல நோக்கத்திற்காக அதை சேர்த்து வைத்தாலும் கூடும். ஆனால் இதயத்தில் இடமளிக்க கூடாது. அது வீட்டு வாசலில் நிற்கட்டும்.அதை தாண்டி வரக்கூடாது. அப்படி வந்தால் உனக்கு எந்த மரியாதையும் இல்லை. ஷைக் அவர்களின் இந்த உரை வீச்சுக்கள் ஆயிரம் வருடங்களுக்கு அப்பால் இப்போது கேட்கிற போது கூடசிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.
நேரில் இது எத்தகையை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் கற்பனை செய்து பாருங்கள். மக்கள் இந்தப் பேச்சுக்கு கூட்டம் கூட்டமாக திரண்டார்கள். அவரது வாயிலிருந்து உதிரும் முத்துக்களுக்காக காத்திருந்தார்கள். திருந்தினார்கள்.
அரசர்களையும் விடவில்லை
தன்னுடைய உரையில் அரசர்கள்அதிகாரிகளை ஜீலானி விட்டுவைக்கவில்லை. தவறு எங்கு கண்டாலும் கண்டித்தார். ஜீலானி (ரஹ்) அவர்கள் அரசர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பிரமுகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொதுமேடையில் நன்மையை எடுத்துச் சொல்பவராகவும் தீமையை தடுப்பவராகவும்இருந்தார்கள்.  என இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார். 
ஒரு நாள்  தன்னுடையை உரையில் இப்படி கர்ஜித்தார்.
ﺇﻧﻲ ﺃﻗﻮﻝ ﻟﻜﻢ ﺍﻟﺤﻖ ، ﻭﻻ ﺃﺧﺎﻑ ﻣﻨﻜﻢ ﻭﻻ ﺃﺭﺟﻮﻛﻢ ،
ﺃﻧﺘﻢ ﻭﺍﻫﻞ ﺍﻷﺭﺽ ﻋﻨﺪﻱ ﻛﺎﻟﺒﻖ ، ﻷﻧﻲ ﺃﺭﻱ ﺍﻟﻨﻔﻊ ﻭ
ﺍﻟﻀﺮﺭ ﻣﻦ ﺍﻟﻠﻪ – ﻻ ﻣﻨﻜﻢ . ﺍﻟﻤﻤﺎﻟﻴﻚ ﻭﺍﻟﻤﻠﻮﻙ ﻋﻨﺪﻱ
ﺳﻮﺍﺀ ( ﺍﻟﻔﺘﺢ ﺍﻟﺮﺑﺎﻧﻲ - ﺍﻟﻤﺠﻠﺲ ﺍﻟﻮﺍﺣﺪ
ﻭﺍﻟﺨﻤﺴﻮﻥ )
நான் உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறேன். நான் உங்களை பயப்படவும் மாட்டேன். உங்களிடமிருப்பதை ஆசைப்படவும் மாட்டேன்.நீங்களும் இந்த உலகில் இருப்பவையும் என்னிட்த்தில் ஒரு கொசுவைப் போலத்தான்.
நன்மையும் தீமையும் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன உங்களிடமிருந்து அல்ல என்றே நான் நம்புகிறேன். மக்களும் மன்னர்களும் என்னிடம்சமம் தான்.
அப்பாஸியர்கள் ஆட்சிகாலம்
அப்பாஸிய கலீபா “முக்தபா லி அம்ரில்லாஹ் இப்னுல் முஜஹ்ஹிம்” என்ற அக்கிரமக்காரரை நீதிபதியாக நியமித்த போது ஜீலானி (ரஹ்) அவர்கள் மின்பரின் மீதேறி அறைகூவினார்கள்.
ﻭﻟﻴﺖ ﻏﻠﻲ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﺃﻇﻠﻢ ﺍﻟﻈﺎﻟﻤﻴﻦ ، ﻣﺎ ﺟﻮﺍﺑﻚ ﻏﺪﺍ ﻋﻨﺪ
ﺭﺏ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ ، ﺍﺭﺣﻢ ﺍﻟﺮﺍﺣﻤﻴﻦ .
மிகக் கொடிய அக்கிரமக்காரனை முஸ்லிம்களின் அதிகாரியாக நியமித்து விட்டாய்! நாளை ரப்புல் ஆலமீன் மிக்கருணையாளனான அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகிறாய என்று கேட்டார்கள்.
வரலாறு சொல்கிறது, ஜீலானி (ரஹ்) அவர்களின் இந்த வாக்கியத்தில் நடுக்க முற்ற கலீபா அழுதபடியே நீதிபதியை மாற்றினார்.
ﻓﺎﺭﺗﻌﺪ ﺍﻟﺨﻠﻴﻔﺔ ﻭﺑﻜﻲ ، ﻭﻋﺰﻝ ﺍﻟﻘﺎﺿﻲ ﺍﻟﻤﺬﻛﻮﺭ ( ﻗﻼﺋﺪ                                            
ﺍﻟﺠﻮﺍﻫﺮ)
தரீக்காவில் கட்டுப்பாடு
ஜீலானி (ரஹ்) அவர்களின் மற்றொரு மகத்தான பணி ஆன்மீகம் அன்னாரின் மற்றுமொரு சிறப்பு , ஆன்மீகம் தரீக்கா என்பது ஷரீஅத்தை மீறீ நடப்பதல்ல எனபதை ஆணித்தரமாக உணர்த்தினார்கள். இஸ்லாம் பக்தியின் பெயரால் தவறான வழியில் செல்லாமல் காப்பாற்றப்பட்டது.
அவரது வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்ச்சி ஒரு நாள் தூரப்போ ஷைத்தானே என்று அவர் துப்பினார். சீடர்கள் காரணம் விசாரித்தனர். என்னிடம் வந்த சைத்தான் அல்லாஹ் பேசுவது போல நடித்து என்னைப் பாராட்டி விட்டு ஹராம் அனைத்தும் இன்று முதல் உமக்கு ஹலால் என்றான். அவனை விரட்டினேன் என்றார்கள்.
அது சைத்தான் என எப்படி கண்டு கொண்டீர் என சீடர்கள் கேட்டனர். ஹலால் ஹராம் என்பது பெருமானாரோடு முடிந்து விட்டது. வேறு யாருக்கும் அதில் அதிகாரம் கிடையாது அதை வைத்து அவனை அடையாளம் கண்டு கொண்டேன் என்றார்கள்.
சைத்தான் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களிடம் சொன்னான் இதே போல நாற்பது பேரை ஏமாற்றியிருக்கிறேன் நீர் மார்க்கஞானம் பெற்றிருந்ததால் தப்பித்துவிட்டீர்.
· ﻗﺎﻝ ﺍﻹﻣﺎﻡ ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺍﻟﻌﺴﻘﻼﻧﻲ : ﻛﺎﻥ ﺍﻟﺸﻴﺦ ﻋﺒﺪ ﺍﻟﻘﺎﺩﺭ
ﻣﺘﻤﺴﻜﺎً ﺑﻘﻮﺍﻧﻴﻦ ﺍﻟﺸﺮﻳﻌﺔ, ﻳﺪﻋﻮ ﺇﻟﻴﻬﺎ ﻭﻳﻨﻔﺮ ﻋﻦ ﻣﺨﺎﻟﻔﺘﻬﺎ
ﻭﻳﺸﻐﻞ ﺍﻟﻨﺎﺱ ﻓﻴﻬﺎ ﻣﻊ ﺗﻤﺴﻜﻪ ﺑﺎﻟﻌﺒﺎﺩﺓ ﻭﺍﻟﻤﺠﺎﻫﺪﺓ ﻭﻣﺰﺝ
ﺫﻟﻚ ﺑﻤﺨﺎﻟﻄﺔ ﺍﻟﺸﺎﻏﻞ ﻋﻨﻬﺎ ﻏﺎﻟﺒﺎ ﻛﺎﻷﺯﻭﺍﺝ ﻭﺍﻷﻭﻻﺩ , ﻭﻣﻦ
ﻛﺎﻥ ﻫﺬﺍ ﺳﺒﻴﻠﻪ ﻛﺎﻥ ﺃﻛﻤﻞ ﻣﻦ ﻏﻴﺮﻩ ﻷﻧﻬﺎ ﺻﻔﺔ ﺻﺎﺣﺐ
ﺍﻟﺸﺮﻳﻌﺔ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﺔ ﻭﺳﻠﻢ ( ﻗﻼﺋﺪ ﺍﻟﺠﻮﺍﻫﺮ، ﺹ
23. )
ஜிலானி (ரஹ்) அவர்கள் அனைத்து தரீக்கா பிரிவினரையும் இணைத்து மாபெரும் மாநாடுகளை நடத்தி தரீக்கா பற்றியபுரிந்துணர்வை ஏற்படுத்தினார்கள்.  அதனால் நக்ஷபந்தி தரீக்காவினர் ஜீலானி (ரஹ்) அவர்களை எங்களுடையவர்களுக்கும் உங்களுடையவர்களுக்கும் ஷைகு என்று அழைப்பதுண்டு. ஜிலானி (ரஹ்) அவர்களின் முயற்சியின் விளைவாவாகத்தான் பல தரீக்காகளும் இணைந்த பொதுவான ஷைகுகளும் தரீக்காகளும் உருவாயின.
ஜீலானி ரஹ் அவர்களால் திருந்தியவர்கள் அவரிடமிருந்து பை அத் பெற்றவர்கள் அன்னாரின் கருத்துக்களை நாடு நகரமெங்கும் எடுத்துச் சென்றார்கள்.
அப்போது பக்தாது முஸ்லிம்களின் தலை நகராக இருந்ததால் இந்தப் பிரச்சாரம் முஸ்லிம் உலகம் முழுவதற்கும் சென்றது.
இன்றும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் பெருமை உலகின் நாலாபுறத்திலும் நிலைத்து நிற்பதற்கு அல்லாஹ்வின் பாதையில் பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் சரியான தீனை கடைபிடிப்பதற்கு அன்னார் வழி காட்டினார்  என்பதே காரணமாகும்.
அவரது உபதேசங்களும் அறிவுரைகளும்இறை நெருக்கத்திற்கு அவர்கள் கற்றுக் கொடுத்த வழிமுறைகளும் மக்களிடம் அவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தன.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் உபதேசங்களும் வழிகாட்டுதல்களும் மக்களது உள்ளங்களை கொள்ளை கொண்டு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அதற்கு காரணம் அன்னாரின் இறைபக்தியும் உளத்தூய்மையான இஸ்லாமிய வாழ்க்கையுமாகும்.
கராமத்
உளத்தூயமையும் இறைச்சிந்தனையிலேயே திளைத்திருப்பதும் இறையடியார்களின் இயல்பாகும். இந்த இயல்பின் உச்சத்திலிருந்த ஜீலானி (ரஹ்) அவர்களிடமிருந்து கராமத்துக்கள் ஏராளமாக வெளிப்பட்டன. இப்னு கய்யூம் அல் ஜவ்ஸீ வலிமார்களின் அதிக கராமத்துக்களுக்கு சொந்தக்காரர்கள். அப்துல் காதிர் ஜீலானி என்று சொல்கிறார்கள்.
· ﻗﺎﻝ ﺍﻹﻣﺎﻡ ﺍﻟﻨﻮﻭﻱ : ﻣﺎ ﻋﻠﻤﻨﺎ ﻓﻴﻤﺎ ﺑﻠﻐﻨﺎ ﻣﻦ
ﺍﻟﺘﻔﺎﺕ ﺍﻟﻨﺎﻗﻠﻴﻦ ﻭﻛﺮﺍﻣﺎﺕ ﺍﻷﻭﻟﻴﺎﺀ ﺃﻛﺜﺮ ﻣﻤﺎ ﻭﺻﻞ ﺇﻟﻴﻨﺎ ﻣﻦ
ﻛﺮﺍﻣﺎﺕ ﺍﻟﻘﻄﺐ ﺷﻴﺦ ﺑﻐﺪﺍﺩ ﻣﺤﻴﻲ ﺍﻟﺪﻳﻦ ﻋﺒﺪ ﺍﻟﻘﺎﺩﺭ
ﺍﻟﺠﻴﻼﻧﻲ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ,
பெரும்பாலும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுடையஇதயங்களில் என்ன இருக்கிறது என்பதை ஜீலானி ரஹ் அவர்கள் சொல்லிக் காட்டுவதுண்டு.
ﻭﻗﺎﻝ ﻋﻤﺮ ﺍﻟﺒﺰﺍﺯ : ﺧﺮﺟﺖ ﻣﻊ ﺳﻴﺪﻱ ﺍﻟﺸﻴﺦ ﻋﺒﺪ ﺍﻟﻘﺎﺩﺭ
ﺇﻟﻰ ﺍﻟﺠﺎﻣﻊ ﻳﻮﻡ ﺍﻟﺠﻤﻌﺔ ﺍﻟﺨﺎﻣﺲ ﻋﺸﺮ ﻣﻦ ﺟﻤﺎﺩﻱ ﺍﻻﻭﻟﻰ
ﺳﻨﺔ 556 ﻫـ ﻓﻠﻢ ﻳﺴﻠﻢ ﻋﻠﻴﻪ ﺃﺣﺪ ﻓﻘﻠﺖ ﻓﻲ ﻧﻔﺴﻲ : ﻳﺎ
ﻋﺠﺒﺎً ﻧﺤﻦ ﻛﻞ ﺟﻤﻌﺔ ﻻ ﻧﺼﻞ ﺇﻟﻰ ﺍﻟﺠﺎﻣﻊ ﺇﻻ ﺑﻤﺸﻘﺔ ﻣﻦ
ﺍﺯﺩﺣﺎﻡ ﺍﻟﻨﺎﺱ ﻋﻠﻰ ﺍﻟﺸﻴﺦ ﻓﻠﻢ ﻳﺘﻢ ﺧﺎﻃﺮﻱ ﺣﺘﻰ ﻧﻈﺮ ﺇﻟﻲ
ﺍﻟﺸﻴﺦ ﻣﺒﺘﺴﻤﺎً ﻭﻫﺮﻉ ﺍﻟﻨﺎﺱ ﺇﻟﻰ ﺍﻟﺴﻼﻡ ﺣﺘﻰ ﺣﺎﻟﻮﺍ ﺑﻴﻨﻲ
ﻭﺑﻴﻨﻪ ﻓﻘﻠﺖ ﻓﻲ ﻧﻔﺴﻲ : ﺫﺍﻙ ﺍﻟﺤﺎﻝ ﺧﻴﺮٌ ﻣﻦ ﻫـﺬﺍ ﺍﻟﺤﺎﻝ
ﻓﺄﻟﺘﻔﺖ ﺇﻟﻲ ﻣﺴﺎﺑﻘﺎً ﻟﺨﺎﻃﺮﻱ ﻭﻗﺎﻝ ﻳﺎ ﻋﻤﺮ ﺃﻧﺖ ﺍﻟﺬﻱ ﺃﺭﺩﺕ
ﻫـﺬﺍ
உமருல் பஸ்ஸார் சொல்கிறார்; நான் ஷைகுடன் 556 வது வருடம் ஜமாதுல் அவ்வல் 15 வெள்ளிக்கிழமை அன்று ஜும் ஆ தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றேன். அவருக்கு யாரும் சலாம் சொல்லவில்லை. நான் என் மனதுக்குள் பேசிக்கொண்டேன் என்ன ஆச்சரியம்! எப்போதும் மக்கள் ஷைகுக்கு சலாம் சொல்ல முண்டியடித்து வருவார்கள். நெருக்கடியில்லாமல் இருக்காதே எதேச்சையாக ஷைகை பார்த்தேன் என்னைப் பார்த்து சிரித்தார்கள். அடுத்த கணம் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். எனக்கு அவர்களுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. அப்போது நான் இதற்கு முன்பிருந்தது போலவே இருந்திருக்கலாம் என்று என மனதிற்குள் எண்ணினேன். ஷைகு சொன்னார்கள் : உமரே! இதைத்தானே நீங்கள் விரும்பினீர்கள்.
கராமத்து எனும் அதிசயங்கள் வலி மார்களிடமிருந்துவெளிப்படுவது சகஜம். அது அல்லாஹ் அவர்களுக்கு அளிக்கின்ற சிறப்பு. நாம் கவனிக்கவேண்டியது இறைநேசர்களுடைய வாழ்க்கயை எப்படி இருந்தது அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் மாகும்.
40 ஆண்டுகள் தொடர்ச்சியான மார்க்கப் பிரச்சாரத்திற்கு இடையே ஏராளமான நூற்களை எழுதியுள்ளார்கள். அவர்களுடைய உரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
இறுதியில் ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ம் நாள் தன்னுடைய 91 வது வயதில் வபாத்தானார்கள். அன்னாருடைய அடக்கஸ்தலம் பக்தாதில் அவர்கள் பணியாற்றிய மதரஸா வளாகத்திலேயே உள்ளது.

0 comments:

Post a Comment