05 February 2015

மக்கள் தொகை அதிகரிப்பால் நாட்டில் வறுமை ஏற்படுமா?



நேரத்தைக் காட்டும் கடிகாரம் போல, உலக மக்கள் தொகையைக் காட்டும் கடிகாரம் ஒன்று உள்ளது. இணையதளத்தில் இந்தக் கடிகாரத்தைப் பார்க்கலாம். ஜுலைமாதம், 11ம் தேதி, "உலக மக்கள் தொகை' தினத்தன்று இந்தக் கடிகாரம் காட்டிய உலக மக்கள் தொகை அளவு, 710 கோடி. பிறப்பு மற்றும் இறப்பு வீதத்தின் அடிப்படையில் இந்தக் கடிகாரம், "புரோகிராம்' செய்யப்பட்டு உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், 200 கோடிக்கும் குறைவாக இருந்த மக்கள் தொகை, நூற்றாண்டின் இறுதியில், 600 கோடியை மிஞ்சி விட்டது. அதாவது, 19 நூற்றாண்டுகளில் அதிகரித்த மக்கள் தொகையைப் போல், இரு மடங்கு, ஒரே நூற்றாண்டில் அதிகரித்து இருக்கிறது.மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்பிய, ஐக்கிய நாடுகள் சபை, ஜூலை 11ம் தேதியை, உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.உலக மக்கள் தொகை, 500 கோடியை எட்டிய தினம், 1986 ஜூலை 11ம் தேதி. அதன் காரணமாகத் தான், அந்த குறிப்பிட்ட தேதியை, உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது, ஐ.நா., சபை. அதன் படி, 1987 முதல் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 11ம் தேதி, உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


உலக மக்கள் தொகையில், முதல், 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகளில், முதலிடம் வகிப்பது சீனா. 20 சதவீத மக்கள் தொகையை, சீனா கொண்டிருக்கிறது. இரண்டாம் இடம் வகிப்பது, இந்தியா. உலக மக்கள் தொகையில், 18 சதவீதம் இந்தியாவில் உள்ளது. மூன்றாவது இடம் வகிக்கும் அமெரிக்காவின் பங்கு வெறும், 5 சதவீதம்தான்.இதைத் தொடர்ந்து, அந்த வரிசையில் இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், நைஜிரியா, வங்கதேசம், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஆக, சீனாவும், இந்தியாவும் மட்டுமே மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான, 38 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.மக்கள் தொகைப் பெருக்கத்தின் பாதிப்பு, வளரும் நாடுகளில் தான் அதிகமாக உள்ளது. காரணம், உலக வளத்தில், 80 சதவீதத்தை வைத்திருக்கும் வளர்ந்த நாடுகளான, செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை, 20 சதவீதம். வெறும், 20 சதவீத வளங்களைக் கொண்டிருக்கும் வளரும் நாடுகளான, ஏழை நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ, 80 சதவீதம்.மக்கள் தொகை மிகுந்த நாடாக சீனா இருப்பினும், மக்கள் நெருக்கடி மிகுந்த நாடாக இந்தியா இருக்கிறது. இதற்குக் காரணம், இந்தியாவைப் போல, மூன்று மடங்கு பரப்பளவைக் கொண்டது சீனா. இந்தியாவில் சுதந்திரத்தின் போது, 34 கோடியாக இருந்த மக்கள் தொகை, தற்போது, 127 கோடியாக உயர்ந்து விட்டது.

உலக நிலப்பரப்பில் வெறும், 2.4 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில், 18 சதவீதத்தைக் கொண்டுள்ளது. உலக மக்கள் தொகையில், ஆறு பேரில் ஒருவர் இந்தியர்.இந்தியாவின் மக்கள் தொகை, வரும், 2018ல், 145 கோடியாக அதிகரித்து, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என, ஐ.நா., சபை தெரிவித்து உள்ளது.
மக்கள் தொகையில், இந்தியாவில் முதலிடம் வகிக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை, பிரேசில் நாட்டின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமாக இருக்கிறது. இரண்டாவது பெரிய மாநிலமான, மகாராஷ்டிர மாநிலத்தின் மக்கள் தொகை, மெக்சிகோ நாட்டின் மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது. மூன்றாவது பெரிய மாநிலமான, பீகாரின் மக்கள் தொகை, ஜெர்மனி நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது.வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றில் இருந்து, வன்முறை, கொலை, கொள்ளை வரையிலான அனைத்தும் அளவுக்கதிகமான மக்கள் தொகைப் பெருக்கத்தின் பக்க விளைவுகளே என, உறுதியாகச் சொல்லலாம்.

ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் பொருளாதார வளம் இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத் தவறினால், முன்னேற்றம் காண முடியாது. அளவோடு பெற்றால் தான், வளமோடு வாழ முடியும். என்று இறை நம்பிக்கையில்லா இவ்வுலகம் பகல் கனவு கொண்டிருக்கிறது .மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து, இரு வேறு கருத்துகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. மக்கள் தொகைப் பெருக்கத்தை, சுமை என்று ஒரு சாராரும், அது ஒரு சொத்து என்று இன்னொரு சாராரும் கூறி வருகின்றனர்.மேலும், மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகளை விட, மக்கள் தொகைக் குறைந்து விட்டால், அது பேராபத்தில் முடிந்து விடும் என்ற கணிப்பும் இருக்கிறது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் காரணமாக, உழைக்கும் மக்களின் எண்ணிக்கைக் குறைந்து, ஓய்வெடுக்கும் மூத்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதை, ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.அறிவுப் புரட்சி மேலோங்கி இருக்கும் காலகட்டத்தில், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலம், உழைப்பு, மூலதனம், ஆகியவற்றை மட்டுமே சார்ந்தது என்ற கருத்து, பழங்கதையாகி, அறிவுத்திறனே முக்கிய காரணி என்ற கருத்து, உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு மத்தியில் வறுமையின் காரணமாக தன் பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்யும் அவல நிலை கூடிக்கொண்டே செல்கிறது.

வறுமையை பயந்து கொலை செய்யலாகாது


وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْئًا كَبِيرًا
17:31
உணவு அளிப்பவன் அல்லாஹ் என்பதை அழுத்தமாக சொல்லித்தந்தது நம் இஸ்லாம் மட்டுமே
முன்னேற்றத்தில் அக்கறையுடைய யாராலும் வறுமையையும் வறுமையினால் ஏற்படுகிற தனிமனித மற்றும் சமூகக் கேடுகளைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடியாது. இதற்கு ஒரு முஸ்லிம் விதிவிலக்கல்ல. வறுமை, மனிதனின் ஆற்றல் மற்றும் கண்ணியத்தின் ஊற்றுக் கண்களையே அழித்துவிட வல்லது. மனிதனை இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாக்கி, ஒழுங்கீனத்தில் மூழ்கவைத்து, குற்றங்கள் புரிய வறுமை காரணமாகி விடுகிறது.
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படி துஆ செய்வார்களாம்
عَنْ مُسْلِمِ بْنِ أَبِي بَكْرَةَ، قَالَ: كَانَ أَبِي يَقُولُ فِي دُبُرِ الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ                (نسائى)
.. "இறைவா! வறுமையிலிருந்தும் இறைமறுப்பிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன்"                                                            ( நஸாயீ)
. வறுமை, இறைமறுப்பு ஆகிய இரண்டையும் இணைத்துப் பேசியிருப்பதே வறுமை ஒரு முஸ்லிமின் மனதில் எவ்வளவு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது என்பதை அறிந்துக் கொள்ளப் போதுமான சான்றாகும். (அ. முஹம்மது கான் பாகவி, 'இஸ்லாமும் பொருளாதாரமும்').
1970-களில் வங்கதேசத்தில் நிலவிய கடும் பஞ்சத்தில் வறியவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானதைக் கண்டு, நிலைமையைச் சீர்செய்ய தம்மாலானதைச் செய்ய முனைந்தார் பொருளியலாளரான முஹம்மது யூனுஸ். ஆனால் அவர் கற்றிருந்த பொருளியல் சித்தாத்தங்களில் பஞ்சத்தையும் வறுமையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி எதுவுமே சொல்லித்தரப் பட்டிருக்கவில்லை என்பது அப்போதுதான் அவருக்குப் புரிந்தது.
"அதி புத்திசாலிகளான பொருளியல் வல்லுனர்கள், வறுமையையும் பட்டினியையும் பற்றிச் சிந்திப்பதுகூட காலவிரயம் என்று எண்ணி அப்பிரச்சினைகளைக் கண்டுகொள்ளவேயில்லை. 'சமூகப் பொருளாதாரம் பொதுவாக செழிப்படையும்போது இந்தப் பிரச்சினைகள் தானே தீர்ந்து விடும்' என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். பொருளாதார முன்னேற்றத்தின் பல நிலைகளைப் பற்றியும் அலசி ஆராய்வதில் தங்கள் திறமை அனைத்தையும் செலவிடும் அவர்கள், வறுமையும் பஞ்சமும் ஏற்படுவதற்கான மூல காரணிகளைப் பற்றி மிக அரிதாகவே சிந்திக்கின்றனர். எனவே, உலகில் வறுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது"
உண்மைதான். இன்றைய உலகில் நடைமுறையில் உள்ள இரு பெரும் பொருளியல் கோட்பாடுகளில், முதலாளித்துவம் முதலாளிகளின் நலனை மட்டுமே பாதுகாப்பதிலும் பொதுவுடைமைக் கோட்பாடு வர்க்கப் போராட்டங்களைத் தூண்டிவிடுவதிலுமே கவனம் செலுத்துகின்றன. ஆனால் இஸ்லாமியப் பொருளியல் மட்டுமே வறுமை ஒழிப்பு உள்ளிட்ட எல்லா பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் தக்க தீர்வைத் தருகிறது.
பொருளாதார சுழற்சி:

مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَى فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ 59:7
"பல ஊர்வாசிகளிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவை அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் (அவருடைய) பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியவையாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்கள் இடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி அல்லாஹ் கட்டளையிடுகின்றான்). (குர்ஆன் 59:7)

செல்வம் சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்குமிடையே சுழன்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பது இஸ்லாமியப் பொருளியலின் அடிப்படை அம்சங்களுள் ஒன்று. வட்டி தடை செய்யப்பட்டிருப்பதும் ஜகாத், ஸதகா, ஹஜ் போன்ற பொருள் சார்ந்த வணக்க வழிபாடுகளும் இஸ்லாமிய வாரிசுரிமை போன்றச் சட்டங்களும் செல்வம் ஒரே தரப்பாரிடம் தேங்கிக் கிடப்பதைத் தடுத்து அதன் சுழற்சியையைத் தோற்றுவிக்கின்றன.

"யார் பொன்னையும் வெள்ளியையும் திரட்டி வைத்துக் கொண்டு, அவற்றை இறைவழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு என்று (நபியே) நீர் நற்செய்தி கூறுவீராக!" (குர்ஆன் 9:34) என்ற இந்த இறைவசனம் பொருளை இறைவழியில் செலவு செய்யாமல் தடுத்துக் கொண்டவர்களைக் கடுமையாக எச்சரிக்கிறது.
செல்வத்தில் வறியோரின் பங்கு:
"வானங்கள், பூமி, அவற்றுக்கு இடையே இருப்பவை மற்றும் பூமிக்கடியில் புதைந்து கிடப்பவை அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை" (குர்ஆன் 20:6)
"அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்து நீங்கள் அவர்களுக்குக் கொடுங்கள்" (குர்ஆன் 24:33)

"அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புங்கள். அவன் உங்களை எந்தச் செல்வங்களுக்குப் பிரதிநிதிகளாக்கினானோ அதிலிருந்து (தானமாகச்) செலவு செய்யுங்கள்." (குர்ஆன் 57:7)
மேற்கண்ட இறைவசனங்கள் இவ்வுலக வாழ்வில் செல்வ வளங்கள் அருளப்பட்டவர்கள் அல்லாஹ்விற்குச் சொந்தமான பொருளுக்குப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்களேயொழிய அச்செல்வத்தின் மீது அவர்கள் முழு அதிகாரம் படைத்தவர்கள் அல்லர் என்பதை வலியுறுத்துகிறது. இஸ்லாமியப் பொருளியலின் இன்னொரு அடிப்படை அம்சம் இது. உரிமையாளரின் ஆணைகளைச் செயல்படுத்துவதுதான் பிரதிநிதியின் பொறுப்பு. எனவே அல்லாஹ் வழங்கியுள்ள செல்வத்திலிருந்து அவனது கட்டளைப்படி வறியவர்களுக்கு உரிய பங்கைப் பிரித்து அளிக்க வேண்டியது செல்வம் வழங்கப்பட்டவர்கள் மீதான கடமை.
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 3:92)
 சமூகத்தில் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சனைகள் மற்றும் கொலை, கொள்ளை போன்ற கொடிய பல செயல்கள் ஆகியவற்றின் மூல காரணமாக ஒருவரின் வறுமை சொல்லப்படுகிறது. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் வறுமையை ஒழிக்கும் ஒரே ஆயுதமாக "வளத்தை விநியோகித்தல்" எனும் அற்புதத் திட்டமான 'ஜகாத்'தை ஏற்படுத்திய இஸ்லாம், தமது இறைவிசுவாசத்தினைக் காட்ட ஒவ்வொரு முஸ்லிமும் தங்களால் இயன்ற அளவிற்குச் சமூகத்திற்கு, தான-தர்மங்கள் செய்வதை வலியுறுத்துகிறது. ஏழை, பணக்காரன் என்ற பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்கான மூலக்காரணம் விநியோகத்தில்தான் உள்ளது என்பதை அறிந்து உருவாக்கப்பட்ட திட்டமே இது என்பதை சிந்திப்பவர்கள் உணர்ந்து கொள்ள இயலும்.
புன்னகையும் தர்மமே


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ، وَإِنَّ مِنَ الْمَعْرُوفِ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ، وَأَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ أَخِيكَ.
وَفِي البَابِ عَنْ أَبِي ذَرٍّ.
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும்! என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்" - அறிவிப்பாளர்கள்: அபூதர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (திர்மிதி 2022, 2037)
இறைவனிடமிருந்து இவ்வளவு எளிதாக நன்மையைப் பெற்றுத்தரும் ஒரு வாழ்வியல் நெறி வேறெந்த சமுதாயத்திலும் சொல்லப்பட்டதில்லை என்பது தெளிவு.

அதே சமயம் ஒருவர் ஒரேயடியாகச் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் புன்னகை மன்னனாகவும் இல்லாமல் அளவுடனும் கனிவுடனும் சிரிப்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. தவிர, தக்கக் காரணமின்றி எப்போதும் சிரிப்பவர் எதிரில் உள்ளவரைப் பரிகாசம் செய்வதாகவும், மறைகழன்றவர் என்று பிறர் எண்ணவும் வாய்ப்புண்டு என்பதைக் கவனிக்கவேண்டும். எனவே புன்னகைக்கான அளவுகோலையும் அறிந்திடல் அவசியமாகிறது.
பணக்காரரின் செல்வத்தில் ஏழைகளுக்குரிய ஒரு பங்கே ஆகும். எனவே ஜகாத் கடமையான ஒருபொருள் அதன் உரிமையாளருக்கும் ஜகாத் பெறத் தகுதியுடைய ஏழைகளுக்கும் கூட்டான பொதுவுடைமை என்றே சொல்லலாம். எனவேதான் ஜகாத் கடமையாகியுள்ள ஒருபொருளை அல்லது சொத்தை, அதன் மீது கடமையான ஜகாத்தை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே விற்பனை செய்வது கூடாது எனவும் சில மார்க்க அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வசதியில்லாதோரும் வறியோருக்கு உதவ வேண்டும்:

ஜகாத் பெறத் தகுதியுடையவர்கள் என அல்லாஹ் வரையறை செய்திருப்பவர்களுள் முதல் பிரிவினர் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள வசதியற்ற வறியவர்கள். இவர்களின் உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவுவது ஜகாத் கொடுக்கும் அளவிற்கு வசதி படைத்த செல்வந்தர்கள்மீது மட்டும் உள்ள கடமை அல்ல. ஒருவரிடம் தனது குடும்பத்திற்கு மட்டுமே போதுமான உணவு இருந்தால்கூட அதைப் பட்டினியால் வாடும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளும்படி சொல்லித்தருகிறது இஸ்லாம்.
عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ إِذَا طَبَخْتَ مَرَقَةً، فَأَكْثِرْ مَاءَهَا، وَتَعَاهَدْ جِيرَانَكَ
நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: "அபூதர்ரே! நீர் ஆணம் சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக்கொண்டு பிறகு உமது அண்டை வீட்டாரைக் கவனித்து நல்லவிதமாக அவர்களுக்கும் சிறிது கொடுங்கள்" (ஸஹீஹ் முஸ்லிம்).
அதே முஸ்லிம் கிதாபிலே இன்னொரு சந்தர்பத்தில் அபூதர் ரலியைப் பார்த்து நாயகம் இப்படிச் சொல்வார்கள் 
يَا أَبَا ذَرٍّ، إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ»، قُلْتُ: يَا رَسُولَ اللهِ، مَنْ سَبَّ الرِّجَالَ سَبُّوا أَبَاهُ وَأُمَّهُ، قَالَ: «يَا أَبَا ذَرٍّ، إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، هُمْ إِخْوَانُكُمْ، جَعَلَهُمُ اللهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَأَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ، وَأَلْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ، وَلَا تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ»،
அண்டை வீட்டார் பசித்திருக்க
தனது அண்டை வீட்டார் வறுமையிலும் சிரமத்திலும் இருக்கும் நிலையில் தான் மட்டும் வளமையும் வசதியுமாக ஆடம்பரத்துடன் இருப்பதை ஓர் உண்மை முஸ்லிமின் உள்ளம் ஒப்புக்கொள்ளாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தமது அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் இறைவிசுவாசியாக மாட்டார்" (முஸ்னத் அபூ யஃலா).
வறியவரின் துயர் துடைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்பதை இதை விட எளிமையாக யாராலும் சொல்ல முடியாது.

வறியோர் நலம் பேணுதல் மார்க்கத்தின் ஓர் அங்கம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மார்க்கம் என்பது பிறர்நலம் பேணுவதாகும்". நாங்கள் கேட்டோம், "யாருக்கு அல்லாஹ்வின் தூதரே?" நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அவர்களின் பொதுமக்களுக்கும்" என பதிலளித்தார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்).

கட்டிடத்தை போன்று 
عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا»

மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மூஃமின் மற்றொரு மூஃமினுக்கு கட்டடத்தைப் போன்றவராவார். அதில் ஒரு பாகம் மற்றொரு பாகத்திற்கு வலுச் சேர்க்கிறது" (ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).
மேலும் கூறினார்கள்: "மூஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும் கருணை காட்டுவதற்கும் இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது ஓர் உடலைப் போன்றதாகும். அதில் ஏதேனும் ஓர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலையும் தூக்கமின்மையையும் முறையிடுகின்றன" (ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).

நம்பிக்கையாளர்கள் ஒரு கட்டடத்தைப் போலவும் ஓர் உடலைப் போலவும் இணைந்திருக்க வேண்டியவர்கள் என்ற இந்த உதாரணங்கள், சமுதாயத்தில் ஒரு பிரிவினர் நலிவடைந்திருந்தால் அவர்களுக்கு வசதி படைத்த மற்றவர்கள் உதவ வேண்டும் என்பதையும், அவ்வாறு உதவிகள் செய்வது அந்த வறியவர்களுக்குப் பலனளிப்பதோடு மட்டுமல்லாமல் முழு சமுதாயத்திற்குமே பலனளிக்கும் என்பதையும் வலியுறுத்துகின்றன.

செல்வ வளம் படைத்தவர்கள் ஏழை எளியவர்களுக்கு ஜகாத் வழங்குவதால் அவர்களின் மனம் பொறாமை, வஞ்சினம் போன்ற தீய குணங்களிலிருந்து தூய்மையாகிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடையேயும் பரஸ்பர அன்பும் புரிந்துணர்வும் தோன்றுகின்றன. வர்க்க பேதங்கள் வலுவிழக்கின்றன. அப்படியே இருந்தாலும் அவை மோதல்களாக உருவெடுக்காமல், ஏழை வர்க்கத்தின் பொறாமை போன்ற சில தீய எண்ணங்களிலிருந்து செல்வந்தர்கள் பாதுகாப்புப் பெறுவர். சமூகத்தில் வீண் குழப்பங்களும் பதற்றங்களும் அகன்று அமைதியான சூழல் நிலவ வாய்ப்பு ஏற்படும். நாட்டின் பொதுஅமைதிக்கும் அது வகை செய்யும்.

மனிதனை மறந்து விட்டு கடவுளை நினைத்தல்

'மதங்கள் அர்த்தமற்றவை' என்று விமர்சனம் செய்யும் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் ''மதங்கள் கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்கின்றன'' என்பதாகும்.
அன்றாடம் உண்பதற்கு உணவில்லாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் போது கோவில் உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் போடப்படுகின்றன.
ஒரு மூக்குத்திக்குக் கூட வழியில்லாத ஏழைப் பெண்கள் கோடிக் கணக்கில் இருக்கும் போது சிலைகளும், கலசங்களும், தேர்களும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. செல்வந்தர்கள் இதற்காக வாரி வழங்குகின்றனர்.

தேவையுள்ள மனிதர்களுக்குச் செலவிடாமல் எந்தத் தேவையுமற்ற கடவுளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படும் மனித நேயமற்ற காரியங்களைப் பார்க்கும் சிந்தனையாளர்கள் ''மதங்கள் அர்த்தமற்றவை'' என்று கருதுகின்றனர்.

இஸ்லாத்தைப் பொருத்த வரை இந்த விமர்சனமும் பொருந்தாது. ஏனெனில் இது போன்ற காரியங்களையும் இஸ்லாம் மறுக்கிறது.

கடவுளுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்கள் இரு வகைகளாக இஸ்லாத்தில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

ஒன்று உடலால் செய்வது.

மற்றொன்று பொருளாதாரத்தால் செய்வது.

தொழுகை, நோன்பு போன்றவை உடலால் செய்யப்படும் வணக்கங்களாகும்.

உடலால் செய்யும் வணக்கங்களை இறைவனுக்காக மட்டுமே செய்ய வேண்டும். வேறு எவருக்காகவும் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

''மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள்'' என்ற விமர்சனம் இதில் எழாது.

பொருளாதாரத்தைச் செலவிடுவதில் தான் மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனம் எழும். இது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

மனிதர்கள் நோய் வாய்ப்படுகிறார்கள்.

வறுமையில் உழல்கிறார்கள்.

மன நிம்மதியை இழக்கிறார்கள்.

குழந்தைச் செல்வம் கிடைக்காமல் கவலைப்படுகிறார்கள்.

இது போன்ற துன்பங்களைச் சந்திக்கும் போது ''கடவுளே எனக்கு இந்தக் குறையை நிவர்த்தி செய்தால் நான் உணக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவிடுகிறேன்'' என்பது போல் மனிதர்கள் நேமிதம் (நேர்ச்சை) செய்து கொள்கிறார்கள்.

அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறினால் எந்தக் கடவுளுக்கு நேர்ச்சை செய்தார்களோ அவரது ஆலயத்தில் அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர்.

துன்பத்திலிருப்பவன் இறைவனுக்காக இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாமும் அனுமதிக்கின்றது.

ஆனால் இறைவனுக்காக பொருளாதாரம் குறித்த எந்த நேர்ச்சையைச் செய்தாலும் அவற்றைப் பள்ளிவாசல் உண்டியலில் போடக் கூடாது. மாறாக ஏழைகளுக்குத் தான் செலவிட வேண்டும்.

''கடவுளே உனக்காகப் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்கிறேன்'' என்று ஒருவர் முடிவு செய்தால் ஏழைகளின் உணவு, உடை, மருத்துவச் செலவு போன்றவற்றுக்காகத் தான் அதைச் செலவிட வேண்டும்.

கடவுளுக்காக நேர்ச்சை செய்த பணத்தில் பள்ளிவாசல் கட்டுவதோ, பள்ளிவாசலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதோ கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.

சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பது போல் ''கடவுளின் பெயரால் எந்தப் பொருளாதாரத்தையும் செலவிடாதே'' என்று ஒருவனிடம் கூறினால், அதை ஏழைக்குத் தான் அவன் செலவிடுவான் என்று கூற முடியாது.

கடவுளுக்கும் செலவிடாமல் ஏழைக்கும் செலவிடாமல் இருந்து விடுவான்.
''ஏழைக்குச் செலவிடுவது தான் கடவுளுக்குச் செலவிடுவது'' எனக் கூறும் போது கண்டிப்பாக ஏழைகள் பயன் பெற்று விடுவார்கள்.

சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பதை விட இது சிறந்ததாக அமைந்துள்ளது.

''இவ்வுலகத்தை இறைவன் ஒரு நாள் அழித்து விட்டு எல்லா மனிதர்களையும் மீண்டும் உயிர்ப்பித்து விசாரணை நடத்துவான். மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பரிசுகளையோ, தண்டனைகளையோ இறைவன் வழங்குவான்'' என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. இது நியாயத் தீர்ப்பு நாள் எனப்படுகிறது.

நியாயத் தீர்ப்பு நாளில் நடைபெறவுள்ள விசாரணையின் ஒரு காட்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றனர்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي "

''மனிதனே! நான் நோயுற்றிருந்த போது நோய் விசாரிக்க ஏன் நீ வரவில்லை'' என்று நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் கேட்பான். ''என் இறைவா! நீயோ அகிலங்களைப் படைத்துப் பராமரிப்பவன். உன்னை நான் எப்படி நோய் விசாரிக்க முடியும்?'' என்று மனிதன் பதிலளிப்பான். ''எனது அடியான் ஒருவன் நோயுற்றதை நீ அறிந்தும் அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நோய் விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்று இறைவன் கூறுவான். ''மனிதனே! உன்னிடம் நான் உணவு கேட்டு வந்த போது எனக்கு உணவளிக்க மறுத்து விட்டாயே?'' என்று இறைவன் மீண்டும் கேட்பான். ''நீயோ அகிலத்தையும் படைத்துப் பராமரிப்பவனாக இருக்கிறாய். நான் உனக்கு எவ்வாறு உணவளிக்க இயலும்?'' என்று மனிதன் கூறுவான். ''என் அடியான் உன்னிடம் உணவு கேட்டு வந்த போது அவனுக்கு நீ உணவளிக்க மறுத்தது உனக்குத் தெரியாதா? அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்'' என்று இறைவன் கூறுவான். ''மனிதனே! உன்னிடம் நான் தண்ணீர் கேட்டு வந்த போது எனக்குத் தண்ணீர் தர மறுத்து விட்டாயே?'' என்று இறைவன் மீண்டும் கேட்பான். ''என் இறைவா! அகிலத்தின் அதிபதியான உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?'' என்று மனிதன் கூறுவான். ''எனது அடியான் ஒருவன் உன்னிடம் தண்ணீர் கேட்டு வந்த போது அவனுக்கு நீ தண்ணீர் புகட்டவில்லை. அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்'' என்று இறைவன் கூறுவான். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 4661 )

''மனிதனுக்கு உதவுவது தான் இறைவனுக்குச் செய்யும் வணக்கம்'' என்பதை இறைவனின் இந்த விசாரணை முறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தில் தொழுகை, நோன்புக்கு அடுத்த கடமையாக ஸகாத் எனும் கடமை உள்ளது.

வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தனது சொத்துக் கணக்கைப் பார்த்து, அதில் இரண்டரை சதவிகிதம் வழங்க வேண்டும். வயல்களில் உற்பத்தியாகும் பொருட்களில் மானாவாரிப் பயிர்களாக இருந்தால் ஐந்து சதவிகிதமும் மற்ற பயிர்களில் பத்து சதவிகிதமும் வழங்க வேண்டும். ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளிலும் குறிப்பிட்ட சதவிகிதத்தை வழங்க வேண்டும். இதுவே ஸகாத் எனப்படுகிறது.

இதை யாருக்கு வழங்க வேண்டும்? பள்ளிவாசல் கட்டுவதற்கோ, மராமத்துச் செய்வதற்கோ, அதன் நிர்வாகப் பணிகளுக்கோ செலவிட வேண்டுமா?

செலவிடக் கூடாது என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

 (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (திருக்குர்ஆன் 9:60)

இந்த எட்டு வழிகளில் தான் அதைச் செலவிட வேண்டும். இந்த எட்டுமே மனிதர்களுக்கானது தான். மனிதர்களுக்கு உதவுவதை மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் ஆக்கியுள்ளது.


''கடவுளை மற! மனிதனை நினை!'' என்பார்கள்.

மனிதனை நினைப்பதற்கு கடவுளை மறக்கத் தேவையில்லை. கடவுளை இஸ்லாம் கூறுகிற படி நினைத்தால் ஏழைகள் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

திருமறைக் குர்ஆனில் பிறருக்கு வாரி வழங்குவது பற்றி அதிகமான அளவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(சொத்தைப்) பங்கிடும் போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்து விட்டால் அதில் அவர்களுக்கும் வழங்குங்கள்! அவர்களுக்கு நல்ல சொல்லையே கூறுங்கள்! (திருக்குர்ஆன் 4:8)

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! (திருக்குர்ஆன் 17:26)

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 24:22)

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர். (திருக்குர்ஆன் 30:38)

அவனை (அல்லாஹ்வை) நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனக் கூறுவார்கள்.) (திருக்குர்ஆன் 76:8,9,10)

குற்றவாளிகளிடம் ''உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று (நல்லோர்) விசாரிப்பார்கள். ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் (குற்றவாளிகள்) கூறுவார்கள். (திருக்குர்ஆன் 74:40 41, 42, 43, 44)

அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும். (திருக்குர்ஆன் 70:24)

எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்! யாசிப்பவரை விரட்டாதீர்! (திருக்குர்ஆன் 93:10)

(கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது. (திருக்குர்ஆன் 2:280)
அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:245)

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ்தாராளமானவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 2:261)

அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:262)

தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (திருக்குர்ஆன் 2:261)

அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத் தோட்டம் இருமடங்காக அதன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:265)

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:272)

தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு. (திருக்குர்ஆன் 57:18)

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ''நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:215)

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 4:36)

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (திருக்குர்ஆன் 2:177)

மனிதர்களுக்கு உதவுவது தான் கடவுளுக்குச் செய்யும் வணக்கம் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.

எனவே கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்யும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை.

அறிவு வளத்தைப் பயன்படுத்தி, பொருள் வளத்தைப் பெருக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே, 21ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தின் இலக்காக உள்ளது.இந்த அடிப்படையில் தான், ஒரு நாட்டின், "வளர்ச்சி' என்பது, பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியதாக மட்டும் அல்லாமல், மானுட வளர்ச்சியை உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும். இதற்காக, 1990ல், ஐக்கிய நாட்டு வளர்ச்சி திட்டம், "மானுட வளர்ச்சிக் குறியீட்டு எண்' என்ற புதிய அளவுகோலை அறிமுகப்படுத்தியது. அதனடிப்படையில் 2013ம் ஆண்டிற்கான, "மானுட வளர்ச்சி அறிக்கை' வெளியிடப்பட்டு உள்ளது. ஐ.நா.,வின் உறுப்பு நாடுகளான, 192 நாடுகளில், 186 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தியா, 0.55 புள்ளிகளைப் பெற்று, நடுத்தர வளர்ச்சிப் பட்டியலில், 136வது இடத்தில் உள்ளது.இந்தியாவிற்கு மேலாக சீனா, 101வது இடத்திலும், இலங்கை, 92வது இடத்திலும் உள்ளன. இந்தியாவிற்குக் கீழாக வங்கதேசம், 146வது இடத்திலும், பாகிஸ்தான், 145வது இடத்திலும் உள்ளன.

மிக உயர்ந்த வளர்ச்சிப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே, நார்வே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. கடைசி மூன்று நாடுகளாக, மொசாம்பிக், காங்கோ, நைஜர் (186வது ரேங்க்) ஆகியவை உள்ளன.ஆக, இந்தியா இன்னும் மானுட வளர்ச்சியில் செல்ல வேண்டிய பயணத் தூரம், அதிகமாகவே உள்ளது. கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகளை, அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே, "மிக உயர்ந்த' வளர்ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலில், இந்தியா இடம் பெற முடியும்.இன்றைய நிலையில் இந்தியாவில், 65 சதவீத மக்கள், 35 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது, நமக்கிருக்கும் மிகப்பெரிய பலம்."இந்தியா ஏழைகள் வாழும் செல்வந்த நாடு' என்பர். இந்தியாவில் செம்மைப்படுத்தப்படாத, பக்குவப்படுத்தப்படாத, வெளிச்சத்திற்கு வராத பல திறமைகள் புதைந்து கிடப்பது போல், உலகில் வேறு எங்கும் இல்லை' என்று, 20ம் நூற்றாண்டின், தலைசிறந்த நிர்வாகி என்று கருதப்படும், ஜாக் வெல்ச் கூறுகிறார்.இயற்கையின் உன்னதப் படைப்பு மனிதன். இயற்கை வளம் மிகுந்த இந்தியாவில், மகா சக்தியாக விளங்கும் மனித சக்தியை முறையான கல்வி அளித்து, அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைத்து, உள்ளார்ந்த திறனை வளர்த்து, ஆக்க வழியில் ஈடுபடுத்தினால், சுமையாகக் கருதப்படும் மக்கள் தொகை, சொத்தாக மாறும்.

அந்தநாள் வரும் வரை, மக்கள் தொகை தினத்தைக் கடைபிடிப்போம். அதன் பிறகு
கொண்டாடுவோம்.


தகவல் வழங்கியவர்கள்:             
நஸீர்   மிஸ்பாஹி,ஹள்ரத்                                             
ஷேக் ஆதம் ஹள்ரத்,                                   
முஹம்மது இலியாஸ் ஹள்ரத்,                              
முஹம்மது ஈஸா ஹள்ரத்

 மற்றும் சில இணையதளங்களிலிருந்து சில தகவல்.
மேலதிக தகவலோடு தொகுத்து வழங்கியவர்: பீர் முஹம்மது, ஃபைஜீ 

.

2 comments:

அல்ஹம்து லில்லாஹ். நல்ல தொகுப்பு. அல்லாஹ் தங்களின் சேவைகளை இக்லாஸானதாக பொருந்திக்கொள்வானாக! இம்மையிலும் மறுமையிலும் தாங்கள் எதிர்பார்க்கும் கூலிகளை விட அதிகமானதை தந்தருள்வானாக ! ஆமீன்

மாஷா அல்லாஹ் தங்கள் சேவையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக

Post a Comment