19 February 2015

இஸ்லாம் வழிகாட்டித் தந்த சகோதரத்துவம்!


அன்று இவ்வுலகில் இஸ்லாம் பரவிய பல காரணங்களில் ஒன்று சத்திய ஸஹாபாக்கள் தங்களுக்கு மத்தியில்  சகோதரத்துவத்தோடு வாழ்ந்தது தான்.

இன்று இஸ்லாமை பற்றி தவறாக பேசப்படும் பல காரணங்களில் ஒன்று நாம் நமக்கு மத்தியில்
சகோதரத்துவத்தோடு வாழாதது தான்.

அன்று நாயகம் ஏற்படுத்திய சகோதரத்துவத்தின் மூலம் இஸ்லாம் பரவியது.இன்று நமக்கு மத்தியில்  சகோதரத்துவம் ஏற்படாததின் மூலம் முஸ்லிம்களே மதம் மாறும் அவநிலையை பார்க்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்பு சென்னை கொருக்கு
பேட்டையில் சில முஸ்லிம் குடும்பங்கள் கிறிஸ்துவ மதத்தை ஏற்று கொண்டதாக பத்திரிக்கையில் பரவலாக வந்ததையொட்டி இஸ்லாமிய அமைப்புகள் கூட்டம் கூட்டமாக சென்று கேட்ட போது நாங்கள் பிறந்தது முதல் இன்று வரை கஷ்டப்படும் போது யாரும் வந்து எட்டி கூட பார்க்கவில்லை.ஒரு வேலை உணவு கூட இல்லாமல் பல நாட்களாக கஷ்டப்பட்டோம்,உடுத்த சரியான துணி கூட இல்லாமல் பல நாட்களாக கஷ்டப்பட்டோம்,நோயிக்கு சரியான மருத்துவம் கூட பார்க்க முடியாமல் பல நாட்களாக கஷ்டப்பட்டோம் அப்போதெல்லாம் இவர்கள் தான் உதவினார்கள்.இவர்கள் யாரும் எங்களை மதம் மாற்றவில்லை நாங்களாக மனம் மாறி கிறிஸ்துவ மதத்தை ஏற்று கொண்டோம்,கிறிஸ்துவ ஆலயத்தில் பணி செய்வதை புண்ணியமாக கருதுகிறோம் என்று நம் முகத்தில் காரி துப்பாத குறையாக விரட்டியடித்ததை நாம் இன்னும் மறக்கவில்லையே!

அன்று நாயகம் வறுமை மனிதனை குஃப்றிலே சேர்த்துவிடும் என்று சொன்னது இன்று எதார்த்தமாக நடக்கிறது. வறுமை தான் அவர்களை குஃப்ரிலே சேர்த்தது என்றாலும் நாம் சகோதரத்துவத்தோடு வாழாததும் இதற்கு காரணம். 

பிரபல்யமான சம்பவம் ஒன்று  ஒரு சஹாபி (ரலி) போரிலே வெட்டப்பட்டு உயிர் போகும் நிலையில் தண்ணீர் குடிக்க குவளையை வாயில் வைக்கும் போது அருகாமையில் வெட்டுப்பட்டு  இருந்த இன்னொரு  சஹாபி தண்ணீர் என்று சப்தம் கொடுத்த போது இவர்கள் தண்ணீர் அருந்தாமல் அவருக்கு கொடுக்கும் படி சைக்கினை செய்தார்கள் அதேப்போல அந்த சஹாபியும் அடுத்த சஹாபிக்காக விட்டுக்கொடுத்து இருதியில் மூவருமே தண்ணீர் அருந்தாமல் சகோதரத்துவத்தை வாழ வைத்து அவர்கள் மரணித்தார்கள் என்பது வரலாறு.

ஆனால் இன்று யார் நரகிற்கு சென்றாலும் சரி,பசியால் வாடினாலும் சரி, நோயினால் மரணித்தாலும் சரி, உடையே இல்லாமல் மானம் இழந்து வாழ்ந்தாலும் சரி  நாமும் நம்முடைய பல தலைமுறைகள் வாழ்ந்தால் மட்டும் போதும் என்று சகோதரத்துவத்தை நாம் சாகடிக்கிறோம்.

சில குடும்பங்கள் மதம் மாறிவிட்டதால் அவர்கள் மட்டும் மாறவில்லை அவர்களின் பரம்பரையையே மாற்றிவிட்டார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அல்லாஹூதஆலா தன் திருமறையில்:
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்: 3: 103)

இத்தகைய ஒற்றுமை இன்று நம்மிடத்திலேயே இல்லை என்பது தான் உண்மை.

மிருகங்களுக்கும் கால்நடைகளுக்கும் மத்தியில் இருக்கும் ஒற்றுமை கூட இன்று நம்மடத்தில் இல்லை.

குக்கிராமம் ஒன்றில் வேலன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் வீட்டில் பல ஆடுகளை வளர்த்து வந்தான். அந்த வாரம் செவ்வாய்க்கிழமை சந்தையில் செம்மறி ஆடு ஒன்றை வேலன் வாங்கி வந்தான்.

செம்மறி  ஆடு கொழு கொழுவென்று மிகவும் அழகாக இருந்தது. அதனால் வேலனுக்கு அதன் மேல் அதிக பிரியம் ஏற்பட்டது. அதனை நன்கு கவனித்துக் கொண்டான். அதனால் மற்ற வெள்ளாடுகள் அதன் மீது பொறாமை கொண்டன.

இந்த செம்மறி ஆடு மூக்கும் முழியுமாக அழகாக இருக்கிறது. அதனால் நம்மை கவனிக்காமல் இந்த செம்மறி ஆட்டை அல்லவா? வேலன் நன்கு பார்த்துக் கொள்கிறான் என்று கருதிய ஆடுகள், செம்மறி ஆட்டை தங்களுடன் சேர்த்துக் கொள்ளவில்லை.

ஒன்றாக சேர்ந்து கொண்டு செம்மறி ஆட்டை விரட்டி விரட்டி முட்டின. எப்போதும் சண்டைக்கு அழைப்பதுபோல் முறைத்துக் கொண்டு செருமின. வேலன் ஆடுகளுக்கு தண்ணீர் வைத்தான்.

உடனே ஆடுகள் முண்டியடித்து கொண்டு வந்து தண்ணீரைக் குடித்தன. கூடவே செம்மறி ஆடும் தண்ணீரைக் குடிக்க வந்தது. பொறாமை பிடித்த வெள்ளாடுகள், செம்மறிக்கு இடம் தராமல் மறித்துக்கொண்டு தண்ணீர் குடித்தன. செம்மறி ஆடு பசியெடுத்துப் போய் மீண்டும் மீண்டும் தண்ணீர் பருக முயற்சித்தது.

அதனால் மற்ற ஆடுகள் செம்மறி ஆட்டை முட்டித் தாக்கத் தொடங்கின. இந்த சண்டையில் தண்ணீர் தொட்டியில் வைத்திருந்த கஞ்சி சிந்திவிட்டது. செம்மறி ஆடு பட்டினியாய் கிடக்க வேண்டியதாய்ப் போய்விட்டது.

சிந்திய சோற்றுப் பருக்கைகளை சாப்பிட எறும்புகள் சாரை சாரையாய் ஊர்ந்து வந்தன.

ஆடுகள் சண்டை போட்டுக்கொண்டு மூலைக்கொன்றாய் நிற்பதைப் பார்த்து, எறும்புக்கூட்டம் ஹஹ ஹா என்று சிரித்தது.

எங்கிருந்தோ சிரிப்பொலி வருகிறதே? என்று கவனித்த ஆடுகுள் எறும்புகள் கூட்டமாக நின்று சிரிப்பதை அறிந்தன.

ஏய் எறும்புகளா? நாங்கள் உருவத்தில் பெரியவர்கள். எங்கள் நகத்தின் அளவுகூட இல்லை. நீங்கள் எங்களைப் பார்த்து சிரிக்கிaர்களா? என்று ஆடு கேட்டது.

நீங்கள் உருவத்தில் பெரியவர்களாக இருந்து என்ன செய்வது. உணவைக்கூட உங்களுக்குள் பகிர்ந்து சாப்பிடத் தெரியாத மூடர்களாய் இருக்கிறீர்கள். ஒரே கூட்டில் வாழும்போது கூட அடித்துக்கொள்கிறீர்கள். இதுதான் பெரியவர்கள் குணமா? என்று இளக்காரமாக கேள்வி கேட்டது எறும்புத் தலைவன்.

வெட்கத்தால் தலைகுனிந்து நின்றன ஆடுகள்.

நீங்களும் எங்களை மாதிரி ஒற்றுமையாக இருந்திருந்தால் இப்படி முட்டி மோதி, கிடைத்த உணவைக் கூட வீணாக்கி இருப்பீர்களா?

தனியே நிற்கும் செம்மறி ஆட்டை இப்படி ஒன்றாக சேர்ந்து கொண்டு தாக்குகிறீர்களா? அது தவறல்லவா? உயிர்களைக் கொல்வது பாவம் அல்லவா? என்று தொடர்ந்து கேள்வி கேட்டது எறும்பு.

ஆம் நீங்கள் சொல்வது சரிதான் நண்பர்களே, உருவத்தில் சிறியவர்களாக இருந்தாலும் நீங்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். இப்போது எங்கள் அறிவுக் கண்களையும் திறந்துவிட்டீர்கள். நாங்களும் இனி ஒற்றுமையாக இருப்போம் என்று ஒன்றாக கூறின ஆடுகள்.

எறும்புகள் சோற்றுப் பருக்கைகளுடன் புறப்பட்டன. வெள்ளாடுகள் செம்மறி ஆட்டிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டன.

இது கதை என்றாலும் இன்று நம் வாழ்க்கையும் இப்படி தான் இருக்கிறது.

நாம் ஆடுகளை போன்று ஒருவரோடு ஒருவர் முட்டிக்கொல்கிறோமே ஒழிய எறும்புகளை போல இணைந்து வாழ்வதில்லையே நம்மை இணைப்பதற்காக  எத்தனை பாலங்கள் வந்தாலும் அவற்றை உடைப்பதையே  நம் முதல் வேலைகளாக பார்க்கிறோம்.

இயக்கங்களாக அமைப்புகளாக பிரிந்து நிற்கும் நம்மை ஒன்று சேர்க்கவே ஒரு அமைப்பு தேவை படுகிறதே

இன்றைய சூழலில் முஸ்லீம் சமுதாயத்திற்கு மிக மிக அவசியமானது சமுதாய ஒற்றுமையும் சகோதரத்துவமும்  என்பதில் சமுதாய நலனில் அக்கறையுள்ளவர்கள் அனைவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.

மேற்கூறிய வசனம் (3:103)  இறக்கப்பட்டதன் காரணத்தை அறிந்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

இந்த வசனத்தில், எல்லாம் வல்ல மகத்தான இரட்சகன், அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! என்று கட்டளையிடுகின்றான். இந்த வசனம் அருளப்பட்டதன் நோக்கம் என்னவென்றால், அது எத்தகைய ஒற்றுமையை கொண்டு வந்ததென்பதை, பின்வரும் சம்பவம் சான்று பகர்கின்றது.

அதாவது மதினாவில் வசித்து வந்த அவ்ஸ், கஜ்ரஜ் ஆகிய கூட்டாத்தார்களிடையே அறியாமைக் காலத்தில் ஏராளமான போர்கள் நடைபெற்றன. அவர்களுக்குள் கடுமையான விரோதமும் வன்மங்களும் காழ்ப்புகளும் இருந்து வந்தன. அவற்றின் காரணத்தால் அவர்களிடையே மோதல்களும் பிரச்னைகளும் நீண்டகாலமாக இருந்து வந்தன. இந்நிலையில் அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தைக் கொண்டு அவர்களை ஒன்றிணைத்தான். அப்போது அவ்விரு கூட்டத்தாரில் இஸ்லாத்தைத் தழுவிய அனைவரும் சகோதரர்களாக மாறினர். அல்லாஹ்வுக்காக ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் நேசம் பாராட்டினர். நன்மை மற்றும் இறையச்சத்தில் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்தனர்.

மேலும் காலங்காலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த அவ்ஸ் மற்றும் கஜ்ரஜ் கூட்டத்தாரின் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தது இந்த வசனம்  தான்,

நாம் நம்மிடத்தில் உள்ள இயக்க மற்றும் அமைப்பு ரீதியிலான வெறிகளை தூக்கி எரிந்து விட்டு சகோதரத்துவத்தோடு வாழ அல்லாஹ்வும் ரஸூலும் நிறையவே வழிகாட்டியிருக்கிறார்கள்....


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் போட்டியாக விலைகளை உயர்த்திக் கேட்க வேண்டாம். ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
ஒருவரையொருவர் புறக்கணித்து நடக்க வேண்டாம். உங்களில் சிலர் இன்னும் சிலரது வியாபாரத்திற்கெதிராக வியாபாரம் செய்ய வேண்டாம்.
அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாகி விடுங்கள்.ஒரு முஸ்லிம் இன்னோரு  முஸ்லிமின் சகோதரனாவான்.எனவே ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமுக்கு அநீதியிழைக்க மாட்டான். அவனைக் கைவிட
மாட்டான். அவனிடம் பொய்யுரைக்க மாட்டான். அவனை இழிவாகக் கருத
மாட்டான். ''இறையச்சம் இங்கே உள்ளது''என்று மூன்று தடவைகள்
தனது நெஞ்சைத் தொட்டுக்காட்டிய நபியவர்கள் தொடர்ந்தும் கூறினார்கள்.
ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை இழிவுபடுத்துவதே அவன்
தண்டனை பெறுவதற்கு போதுமான தீய செயலாகும். ஒவ்வொரு முஸ்லிமின் இரத்தமும் உடமையும் மானமும் அடுத்த முஸ்லிமின் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த
நபிமொழி இமாம் முஸ்லிம்
அவர்களின் பதிவாகும். (இந்த ஹதீஸின் பல பகுதிகள் ஸுனன் அத்திர்மிதி, ஸுனன் அபூதாவூத் போன்ற நூல்களிலும் இன்னும் ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய நூல்களிலும் வித்தியாசமான அறிவிப்பாளர்
தொடர் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது)

முஸ்லிம் சமூகக் கட்டுக்கோப்புக்கு அஸ்திவாரமாகதிகழும் சகோதரத்துவம்
குறித்து இங்கு உணர்த்தப்படுகின்றது. சகோதரத்துவம் என்பது தானாக
உருவாகி வளரக்கூடியதொன்றாகும் சமூகத்தின் எல்லா உறுப்பினர்களும்
பரஸ்பரம் நல்லெண்ணத்துடனும் ஒத்துழைப்புடனும் சேர்ந்து பணியாற்றும்
போதே அச்சமூகம் வளர்ச்சியடைய முடியும் இந்த ஹதீஸ் பற்றி இப்னு ஹஜர் அல்ஹைதமி பின்வருமாறு விளக்குகிறார்கள் :
''இந்த ஹதீஸ் அதிகமான போதனைகளை உள்ளடக்கியுள்ளது இஸ்லாத்தின்
நோக்கங்களையும் அடிப்படைகளையும் சுட்டிக் காட்டுகின்றது. இந்த ஹதீஸ்
கூறும் கருத்துக்களை ஆழ்ந்து நோக்கினால் இஸ்லாமிய சட்டத்துடன்
தொடர்புடைய பல அம்சங்கள் உட்பொதிந்திருப்பதைக்காணலாம்''.
மனித நடத்தைகளை ஒழுங்குபடுத்தி அவர்களிடையே சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப விரும்பிய நபியவர்கள் சகோதரத்துவத்துக்கு சவாலாக
அமைகின்ற மனிதனது மனோநிலைகளை இங்கு தடை செய்திருப்பதைக்
காண்கிறோம்.உதாரணமாக பொறாமை கொள்ளல் பொதுவாக பொறாமை என்பது, ஒருவர் தன்னிடம் இல்லாத ஏதேனுமொரு அல்லாஹ்வின்
அருள் அவரை விட்டும் நீங்கி தனக்குக் கிட்ட வேண்டுமென்றோ அல்லது வேறு யாருக்காவது கிடைக்க வேண்டுமென்றோ எண்ணுவதைக்
குறிக்கும். இத்தகைய மனோநிலை மனிதனிடத்தில் காணப்படும்
மிகவும் இழிவான பண்பாகும்.தன்னைவிட அடுத்தவன் சிறப்புக்களை,
உயர்வுகளை அடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே பொறாமை உணர்வாக வெளிப்படுகிறது.இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது மனிதர்களுக்கிடையிலான உறவுகளுக்கு இது பெரும் சவாலாக அமைந்து விட முடியும்.

யூதர்களிடம் காணப்படும் இம்மோசமான மனோநிலை பற்றி அல்குர்ஆன்
பின்வருமாறு குறிப்பிடுகிறது வேதம் அருளப்பட்டவர்களில் பலர் நீங்கள்
இறைநம்பிக்கை கொண்டு விட்டதன் பின்னர் உங்களை எவ்விதத்திலாவது நிராகரிப்பாளர்களாக திருப்பிவிட வேண்டும் என விரும்புகின்றனர். சத்தியம்
தமக்குத் தெளிவாகி விட்டதன் பின்னரும் தங்களிடமுள்ள பொறாமையின்
காரணமாக இவ்வாறு முனைகின்றனர்.(ஸுரா அல்பகரா – 109)


ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.''உங்களுக்கு முன்பிருந்
சமூகத்தினருக்கு ஏற்பட்ட பொறாமை, பகைமை போன்ற நோய்கள் உங்களையும் பீடிக்கும் பகைமை உணர்வு சிதைத்து விடக்
கூடியது. அது மார்க்கத்தை சிதைத்து விடும்.தலைமுடியை  அல்ல, எவனது கைவசம் முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் ஒருவருக்கொருவர் நேசத்துடன் நடந்து கொள்ளும் வரைக்கும் நீங்கள் பூரண முஃமீன்களாக மாட்டீர்கள்.

நான் ஒரு விசயத்தை உங்களுக்குச் சொல்லித் தரவா? நீங்கள் அதனைச் செய்வீர்களாயின் பரஸ்பரம் நேசம் கொண்டவர்களாகி விடுவீர்கள்.
உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப்பரப்புங்கள்!'' (ஆதாரம் : அஹ்மத்,
திர்மிதீ)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பின்வரும்
ஹதீஸை அறிவிக்கின்றார்கள். ''பொறாமை கொள்வதை விட்டும்
உங்களை நான் எச்சரிக்கிறேன். நெருப்பு விறகையோ புற்பூண்டுகளையோ தின்றுவிடுவது போல, பொறாமையானது நற்செயல்களைத்தின்று விடும்''. (ஆதாரம் :அபூதாவூத்)

இவ்வாறு குர்ஆனும், ஹதீஸும் இதன் பாரதூரத்தை, சுபாவத்தை விளக்குகிறது. உண்மையில் பொறாமைப்படுபவன் உளவியல்ரீதியான
பாதிப்புக்குள்ளாகின்றான்.அல்லாஹ் தனது அடியார்களுக்கு கொடுத்திருக்கும்
அருள்கள்குறித்து திருப்தியடையாதவனாக, அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்க
மறுத்து அதற்கெதிராக செயற்பட முனைவதனையோ பொறாமைக்காரனின்
மனோநிலை காட்டுகிறது. பிற சகோதரனைப் பற்றியும் அவனுக்குக் கிடைத்திருக்கும் திருப்திகரமான வாழ்வு குறித்தும் நல்ல மனோநிலையோடு நோக்கும் முஸ்லிம் எப்போது சாந்தி மயமான மனோ உணர்வுடன் இவ்வுலகில் வாழ்வான். பொதுவாக பொறாமைக்குணம் படைத்தவர்களை பின்வருமாறு நோக்கலாம் பிறர் பெற்றுள்ள அல்லாஹ்வின்
அருட்கொடைகள் அவர்களை விட்டும் நீங்கி விட வேண்டும் என்ற
மனோநிலை படைத்தவர்கள். இவர்கள் தமது சொல்லாலும் செயலாலும் இதற்காக முழுப்பிரயத்தனம் மேற்கொள்வர். அவை தமக்குக் கிட்டிவிட
வேண்டுமெனவும் விரும்புவர். தனக்குக் கிடைக்காதவை பிறருக்கும்
கிடைக்கக் கூடாது  அவை தனக்குக் கிடைக்க வேண்டுமென ஆசை கொள்ளாவிட்டாலும் பிறரிடம் இருப்பதை சகித்துக்கொள்ளாதோர்.

பிறர் பெற்றிருக்கும் அருட்கொடைகள் பற்றி பொறாமை கொண்டாலும்
அதற்கேற்ப செயல்படாதவர்கள். இவ்வாறாக பொறாமை கொள்வோரின்
மனநிலைக்கேற்ப அவர்களுக்கு பாவமுண்டு. எனினும் பிறர் செய்யும்
நற்செயல்களைப்பார்த்து தானும் அவ்வாறு செய்ய வேண்டும்
எனும் எண்ணம் கொள்வது பிழையானதல்ல. வரவேற்கத்தக்கது.

வியாபாரப் போட்டி:

நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தைப் பாதிக்கும் மற்றுமொரு காரணிணை தொடர்ந்து சொல்கிறார்கள்.பொருளை வாங்கும் எண்ணமின்றி அப்பொருளின் விலையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் அதன் விலையை கூடுதலாக கேட்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. சந்தையில் ஏலத்துக்காக விடப்பட்டுள்ள பொருட்களை கொள்முதல்  செய்யும்
போது இத்தகைய நிலைமைகள் ஏற்படலாம். வாங்குவோர் கூடுதலான
விலையை செலுத்துவதற்காக தந்திரமாக பொருட்களின் விலையைக் கூட்டிக்கேட்பதற்கு சிலரை ஏற்பாடு செய்து கொள்ளும் மரபு வியாபாரிகளிடையே இருப்பதனை நாம் காண்கிறோம். இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது.இங்கு வந்துள்ள''லா தனாஜஷு''என்பது சூழ்ச்சி, ஏமாற்று, தந்திரம் போன்றவற்றில் ஈடுபடாதீர்கள் எனும் கருத்திலும் விளக்கப்பட முடியும்.

குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.'தீய சூழ்ச்சிகள் அவற்றைச்
செய்வோரையே தாக்கும்'' (ஸூரா பாதிர் :43)

நபி (ஸல்) அவர்கள் சூழ்ச்சி செய்பவனைப்பற்றி பின்வருமாறு உரைத்தார்கள்.
''முஸ்லிமுக்கு சூழ்ச்சி செய்தவனும்அவனுக்கு அநீதியிழைத்தவனும்
சபிக்கப்பட்டவனாவான்''.(ஆதாரம் : திர்மிதீ)

பகைமையுணர்வு தனது சகோதர முஸ்லிமுடன் அன்புடனும் நேசத்துடனுமேயே உறவுகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென
இஸ்லாம் முஸ்லிம்களுக்கு பணிக்கிறது.

ஒருவருக்கொருவர் பகைமையுணர்வை ஏற்படுத்திக் கொள்வதை இஸ்லாம்
தடை செய்துள்ளது. இந்த வகையில் முஸ்லிம்களிடையே குரோதத்தையும்
பகைமையுணர்வையும் ஏற்படுத்தும் காரணிகளையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.ஸூரா அல்மாயிதாவின் 91 ம் வசனம் பின்வருமாறு குறிப்பிடுகிறது. ''மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்களுக்கிடையில்
பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்வதிலிருந்தும்,தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது இவற்றை நீங்கள் தவிர்ந்து கொள்வீர்களா?''


அல்லாஹ்வுக்காக ஒருவருடன் பகைமை கொள்வது பிழையானதல்ல.
ஈமானின் விளைவுகளிலொன்றாக இது அமைய முடியும்.தனது சகோதரன் ஹராமான ஒரு செயலில் ஈடுபடுவதைக்காணும் முஸ்லிம் அதற்காக
கோபப்படுவான். அந்த தீய செயலில் அவன் பிடிவாதமாக இருப்பதன் காரணமாக அவனுடன் பகைமை கொள்வது இவன் மீது குற்றமாகாது.

மாற்றமாக அதற்காக நன்மை வழங்கப்படும். சகோதர முஸ்லிமைப் புறக்கணித்து நடத்தல் சகோதரத்துவத்தைப்பாதிக்கும் மற்றொரு அம்சமான
சகோதர முஸ்லிமைப் புறக்கணித்து நடப்பதனை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஒருவரையொருவர் புறக்கணித் பரஸ்பரம் உறவுகளைத் துண்டித்துக்கொள்வதனை இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். இது பற்றிக் குறிப்பிடும் ஏராளமா ஹதீஸ்களை நாம்
காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி)அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள். 'நீங்கள் பரஸ்பரம் பொறாமை கொள்ளாதீர்கள்.பகைமை கொள்ளாதீர்கள். உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்
உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளவாறு அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக இருங்கள். (ஆதாரம் :முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாகஅபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேலாக புறக்கணித் நடக்கலாகாது. அவர்களில் ஒவ்வொருவரும்
அடுத்தவரை சந்தித்தும் புறக்கணித்துச் செல்கின்றனர். இந்நிலையில் இருவரில் முதலில் ஸலாம் சொல்பவரே சிறந்தவர். (ஆதாரம் : புகாரீ,முஸ்லிம்)

இது தொடர்பாக ஏராளமான ஹதீஸ்களை மேற்கோள்களாகக் காட்டலாம். எனினும் விரிவஞ்சித் தவிர்த்துக் கொள்கின்றோம். மார்க்க விசயங்களுக்காக
மூன்று நாட்களுக்கு அதிகமாக புறக்கணித்து நடத்தலை இஸ்லாம்
அனுமதித்துள்ளது. தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளா சிலருடன் அல்லாஹ் அவர்கள் தொடர்பான முடிவை வழங்கும் வரை நபித்தோழர்களும்,
நபியவர்களும் ஐம்பது நாட்களுக்கும் கூடுதலாக  புறக்கணித்து நடந்தமையை இதற்கு ஆதாரமாக  இமாம் அஹ்மத் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.


தந்தை தனது பிள்ளையையும், கணவன் தனது மனைவியையும் அவர்களைத் திருத்தும் நோக்கில் மூன்று நாட்களுக்கும் அதிகமாக புறக்கணித்து நடக்க
முடியும் என இமாம் அல்கத்தாபி குறிப்பிடுகிறார்கள்......


சகோதரத்துவ உறவுக்குத் தடையாக இருக்கும் மேற்கூறப்பட்ட அம்சங்களை தவிர்ந்துகொண்டு, தனது சக முஸ்லிமுடைய உரிமைகளைப் பேணி வாழுகின்ற போது சகோதரத்துவ உணர்வு பலமடைய முடியும்.
ஸலாம் உரைத்தல், தும்மினால்  அருள் வேண்டிப் பிரார்த்தித்தல், நோய்
ஏற்பட்டால் நலம் விசாரிக்கச் செல்லல், மரணித்தால் ஜனாஸாவில் கலந்து கொள்ளல்,அழைப்பு விடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளல் உபதேசம் புரியுமாறு வேண்டினால் உபதேசம் புரிதல், எப்போதும் தூய்மையாக நடத்தல் போன்றன சக முஸ்லிமின் உரிமைகளாகக் காணப்படுகின்றன.

ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுடன் எவ்வாறு நடந்து கொள்ள
வேண்டும் என்பதை ஹதீஸின் அடுத்த பகுதி விளக்குகிறது. பிற முஸ்லிமுக்கு எத்தகையதொரு அநீதியையும் இழைக்காமல் அவனுக்கு உதவி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அவனை கைவிட்டு விடாமல்,
அவனிடம்  பொய்யுரைக்காமல், அவனை இழிவாகக் கருதாமல் இணக்கப்பாட்டுடனும் ஒத்துழைப்புடனும் வாழ வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது...


இஸ்லாம் இத்தகைய அம்சங்களை முஸ்லிம்களுடன் மாத்திரம் சுருக்கி விடாமல்,முழுமனித சமூகத்தாருடனும் இவ்வாறான உயர்பண்புகளைப்
பேணுவதை வலியுறுத்துகிறது. அடுத்த மனிதனுக்கு அநீதியிழைப்பது பற்றி அல்லாஹ் மிகவும் கண்டித்திருக்கின்றான்.

''எனது அடியார்களே! அநீதியிழைப்பதனை எனக்கு நான் ஹராமாக்கிக்
கொண்டேன்.அதனை நான் உங்களுக்கும் தடை செய்து விட்டேன். எனவே நீங்கள் உங்களில் ஒருவருக்கொருவர் அநீதியிழைத்துக் கொள்ளாதீர்கள்''
என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)

தனது சகோதர முஸ்லிமை அவனுக்கு உதவ வேண்டிய சந்தர்ப்பத்தில்
கைவிட்டு விடுவதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.

''ஒரு முஸ்லிம் இழிவுபடுத்தப்படும் போது  அவனுக்கு உதவி செய்யும்
சக்தியிருந்தும் உதவி செய்யாதவனை மறுமையில் அல்லாஹ் படைப்பினங்கள்  அனைத்திற்கும் முன்னால் இழிவுபடுத்தி விடுவான்''.
ஆதாரம் : முஸ்னத் அஹ்மத்)

தனது சகோதரனிடம் பொய்யுரைப்பது பாவமாகும். இதனைப் பின்வரும்
நபிமொழி குறிப்பிடுகிறது.

''உனது சகோதரன் உன்னை நம்பிய நிலையில் அவனுக்கு நீ பொய்யாக
ஒரு செய்தியைக் கூறுவது மிகப் பெரும் மோசடியாகும்  என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் :முஸ்னத் அஹ்மத்)

தனது சகோதரனை இழிவுபடுத்தி நோக்குவதும் ஒரு முஸ்லிமிடம் காணப்படக் கூடாத பண்பாகும்.

''தனது அடியானை அல்லாஹ் கண்ணியப்படுத்தி பொறுப்புள்ளவனாகப்
படைத்திருக்கும் போது அவனை இழிவபடுத்தி தரத்தில் குறைத் மதிப்பிடுவது பெரும் பாவமாகும்.

இறுதியாக, இந்த ஹதீஸ் ஒரு முஸ்லிமின் உயிர், உடமை, மானம் என்பவற்றை உத்தரவாதப்படுத்துகிறது. இவற்றில் அத்துமீறி பங்கம்
ஏற்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. இவை பொதுவான மனித
உரிமைகளாகும். இஸ்லாமிய உம்மத்தும் இவ்வுரிமைகளின் அடிப்படையில் பாதுகாப்பான ஒரு வாழ்வை தனது குடிமக்களுக்கு வழங்குகிறது. எனினும் இஸ்லாத்தின் தண்டனைகளுக்கான குற்றங்களை இழைத்தோரைத் தவிர ஏனையோர் எத்தகைய அச்சமும் பீதியுமின்றி மன நிறைவுடன் பூரண
பாதுகாப்புடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமிய சமூக அமைப்பில் காண முடியும்!

இந்த அளவுக்குச் சகோதரத்துவத்தை இஸ்லாம் வலியறுத்தும்போது அதன்
முக்கியத்துவம், சிறப்பு குறித்து பேசும் போது இந்த இடத்தில் ஓர் விஷயத்தை கவனிக்க வேண்டும்.

இன வாதத்திற்கு எதிரான சகோதரத்துவம் அதாவது, இத்தகைய
சகோதரத்துவ உணர்வு எந்த நிலையிலும் இன வாதமாக மாறிவிடக் கூடாது!
அது மிகப் பெரிய தவறாகும்.

ஏனெனில் இனவாதம் இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு முரணானது எதிரானது!
இவ்வுலகத்திற்கு இறைத்தூதர்கள் வருகை தந்ததும் இறைவேதங்கள்
அருளப்பட்டதும் இனவாதத்தைக் கில்லி எறிவதற்காகத்தான். அதன் அடிப்படையிலான குறுகிய சிந்தனையையும் குதர்க்கமான போக்கையும்
மாற்றி மனித குலம் முழுவதும் ஒரே குடும்பம் எல்லா மனிதர்களின்
நலனையும் பேணிட வேண்டும்.எல்லா மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். நீதி எல்லாருக்கும் பொதுவானது. அது விருப்பு வெறுப்பு இன்றி தயவு தாட்சண்யமின்றி நிலைநாட்டப்பட வேண்டும்
எனும் பரந்த நோக்கத்திற்காகவே இவ்வுலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் பாடுபட்டார்கள்.


ஒருமுறை நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் சகோதரனுக்கு உதவி
செய்திடு., அவன் அநீதி இழைப்பவனாக இருந்தாலும் அநீதிக்குள்ளானவனாக
இருந்தாலும் சரியே! அப்பொழுது ஒருவர் எழுந்து ஆட்சேபனை கிளப்பினார்....!
அல்லாஹ்வின் தூதரே! அவன் அநீதிக்கு உள்ளானால் நான் அவனுக்கு உதவி செய்யம் வேண்டும் தான். ஆனால் அவன் அநீதியாளனாக இருந்தால் அவனுக்கு நான் எப்படி உதவி செய்ய முடியும்?
இது பற்றி எனக்குச் சொல்லுங்கள்! நபி(ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்: 'அநீதி இழைப்பதிலிருந்து அவனை நீ தடுத்திடவேண்டும்.
அது தான் அவனுக்கு நீ செய்யும் உதவி ' (நூல்: புகாரி)

இன்றைய காலகட்டத்தில்  முஸ்லிம்களே இன வாதம் பேசினால் ஒரே இறை.ஒரே குலம், ஒரே மறை எனும் உண்மையை எடுத்துரைத்து உலக மக்களை அனைவரையும் இறைமார்க்கத்தின் பக்கம்அழைக்கக் கடமைப்பட்டவர்களே இனவாதத்திற்குப் பலியானதினால்  நிலைமை என்னாவது? தமது இனத்திற்காக மட்டும் அதன் முன்னேற்றத்திற்காக
மட்டும் பரிந்து பேசுபவர்கள். வலிந்து வாதாடுபவர்கள் இவர்கள்., இவர்களது மார்க்கம் நமக்குத் தேவை இல்லை எனக் கருதிக் கொண்டு மக்கள்
இஸ்லாத்தை விட்டும் விலகிச் செல்லும் சூழ்நிலைதான் மேலும் மேலும்
தொடர்கதையாகின்ற! இஸ்லாமிய சகோதரத்துவம் இன வாதத்திற்கும்
எதிரானது. அவ்விரண்டுக்கும் மத்தியில் உள்ள நாசூக்கான வேறுபாட்டைப்
புரிந்து கொள்ள வேண்டும். சரியான கருத்தின் அடிப்படையிலான
சகோதரத்துவ உறவை வளர்க்க வேண்டும். வலுப்படுத்த வேண்டும்.


ஒருவன் சகோதரத்துவம் என்ற பெயரில் தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டு மேலே சொன்ன சகோதரத்துவப் பயன்பாடுகளை
எதிர்பார்த்தான் எனில் கானலைப் பார்த்து தண்ணீர் என ஏமாறும் நிலைதான்
ஏற்படும்.


சகோதரத்துவத்திற்கென சிலநெறிமுறைகள் -நிபந்தனைகள் உள்ளன.

அவற்றைப் பேணினால் தான் அவற்றின் பயன்களை அடைய முடியும்.

1) அல்லாஹ்வின் உவப்புதான் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் வேறொரு கிராமத்தில் உள்ள தன் சகோதரனைச் சந்திப்பதற்காகச் சென்றார். அந்தப் பாதையில் அவனை எதிர்பார்த்திருக்குமாறு அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி வைத்தான். அங்கு அவர் வந்த போது மலக்கு கேட்டார்: நீ எங்கே செல்கிறாய்? அதற்கு அவர் இந்த ஊரிலுள்ள என் சகோதரரைச் சந்திக்கச்
செல்கிறேன் என்றார். நீ அவருக்கு ஏதேனும் உபகாரம் செய்து அதற்கு கைமாறு பெற நாடுகிறாயா? என்று மலக்கு கேட்டார். அதற்கு அவர், அப்படி ஒன்றுமில்லை. அல்லாஹ்வுக்காக அவரை நான் நேசிக்கிறேன் என்றார். அப்பொழுது வானவர் சொன்னார்: ஒரு விஷயத்தை அறிவிப்பதற்காக அல்லாஹ்தான் என்னை உன்னிடம் அனுப்பி வைத்துள்ளான்;: நீ அவரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது போன்று அல்லாஹ் உம்மை நேசிக்கிறான்
(நூல்: முஸ்லிம்)

2) இறையச்சத்துடன் சகோதரத்துவம் பேணிட வேண்டும். அதாவது,
கடமைகளில் பொடுபோக்கும் தீமை நாடுவதும் தவிர்க்கப் படவேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும்
ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர்' (49 :10).

3) பிறர் நலன் நாடுதல் எனும் அடிப்படையில் அமைந்திட வேண்டும்.
ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்;:
'நான் நபியவர்களிடம், தொழுகையை நிலைநாட்டுதல், ஜகாத் கொடுத்தல், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலன் நாடுதல் ஆகியவற்றின் பேரில் விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தேன்' (புகாரி)

4) நன்மையான காரியத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர்
உதவியாக இருக்க வேண்டும். சகோதரத்துவத்தின் நோக்கமும் இதுவே.
இந்நிலை இல்லையெனில் அது, சகோதரத்துவம் வலுவிழந்து வருவதன்
அடையாளமாகும்.

5) வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற ஒருவருக்கொருவர்
உதவியாக இருப்பது. அதாவது, இது போன்ற சூழ்நிலைகளில் தம் சகோதரர்களின் நலனுக்காக அர்ப்பணமாகும் நிலை இருக்க
வண்டும்! இந்நிலையை வலியுறுத்தக் கூடிய நபிமொழிகளில் முத்தாய்ப்பாக ஒன்று:உங்களில் எவரும்தனக்கு விரும்புவதையே தன்
சகோதரனுக்கும் விரும்பாத வரையில் இறை நம்பிக்கையாளராக முடியாது ' (நூல்:முஸ்லிம்)

.ஒரு பெரியவருக்கு 5 ஆண்  மக்கள் இருந்தார்கள்.அவர் இறக்கும் நேரத்தில் மகன்மார்களை அழைத்து ஐந்து பேருக்கும் ஐந்து குச்சிகளைக் கொண்டு வரச் சொன்னார் .ஐந்து பேரும் குச்சிகளைக் கொண்டு வந்த போது மூத்த மகனிடம் ஐந்து குச்சிகளையும் ஒன்று சேர்த்து உடைக்குமாறு கூறினார்.ஆனால் அவற்றை அவரால் உடைக்க முடியவில்லை.பிறகு அவரவர் கொண்டு வந்த குச்சிகளை அவர் அவர்களுக்கே உடைக்கச் சொன்னார்.ஒவ்வொருவரும் அவற்றை எளிதாக உடைத்து விட்டார்கள். அப்போது தந்தை மக்களைப் பார்த்து எனதன்புச் செல்வங்களே! இதோ இந்த குச்சிகள் ஒன்றோடொன்று சேர்ந்து இருக்கும் போது அவற்றை உடைப்பது எவ்வளவு சிரமமோ அதைப் போன்றுதான் நீங்கள் ஐந்து பேரும் ஒன்றாய் சேர்ந்து ஒற்றுமையாக இருப்பீர்களானால் எந்த சக்தியும் ( இறைவனைத் தவிர) பிரிக்க முடியாது.நீங்கள் மட்டும் பிரிந்து விடுவீர்களானால் இதோ இந்த குச்சிகளை உடைப்பதுப் போல் மற்றவர்கள் உங்களை பலவீனப்படுத்தி விடுவார்கள்.எனவே நீங்கள் எப்பொழுதும் எக்காரணத்தைக் கொண்டும் ஐக்கியத்தையும,ஒற்றுமையையும் கைவிட்டு விடாதீர்கள் என்று உபதேசம் செய்தார்.


எனவே இஸ்லாம் வலியுறுத்திய சகோதரத்துவத்தை பேணி அதே நேரத்தில் இனவெறி இல்லாமல் இவ்வுலகில் வாழ்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக.

குறிப்பு வழங்கியவர்கள்: ஷேக் ஆதம் தாவூதி ஹழ்ரத், சுல்தான் சலாஹி ஹழ்ரத், நஸீர் மிஸ்பாஹி ஹழ்ரத், பத்ரு அல்தாஃபி ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் ஹசனி ஹழ்ரத். மேலதிக தகவலோடு தொகுத்து வழங்கியவர் அப்பாஸ் ரியாஜி

0 comments:

Post a Comment