06 August 2015

"மதுவை ஒழிப்போம்"

                         

இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் பிறந்து வளர்ந்து தீய பழக்கங்களைக் கையாண்டு அற்புதமான வாழ்க்கையைச் சீரழித்து மாண்டும் போகிறான். இயற்கை மனிதனை ஆறறிவு கொண்ட மனிதனாகவும், பகுத்தறியும் மனிதனாகவும் படைத்துள்ளது.புலன்களின் ஈடுபாட்டால் தன்னை இழந்து நோயின் பிடிக்கு ஆளாகி தவிக்கின்றான். இந்த புலன்களை அடக்கியாண்டால்தான் அவன் மனிதனாக முடியும். இந்த புலன்கள் அனைத்தையும் உடைந்த காட்டாற்று வெள்ளம் போல் ஓடச் செய்வதற்கு முழுமுதற் காரணமாக அமைவது மதுப்பழக்கம்தான்.
மனிதனின் உடல், மனம், உள்ளம் இவற்றை பாதிக்கச் செய்து அவனது வாழ்க்கையையும், அவனது குடும்பத்தினர் வாழ்க்கையையும், சீரழித்து சின்னாபின்னமாக்கக் கூடிய தீய பழக்கம் தான் குடிப்பழக்கம்.சண்டை சச்சரவுகள், களவு, கொலை, கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும், குற்றங்களும் மது எனும் அரக்கனின் தூண்டுதலாலேயே நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.மகாயுத்தம், பஞ்சம், இயற்கை பேரழிவு, கொள்ளை நோய் ஆகிய இம்மூன்றும் சேர்த்து அழித்ததை விட மதுபானம் அதிகமான மக்களை கொள்ளை கொண்டுள்ளது.
பழங்காலத்தில் மன்னர்கள் சோமபானம் என பழச்சாறுகள் கொண்டு தயாரித்து விருந்து உபசரிப்புகளில் பயன்படுத்தி வந்தனர். தீய குணங்கள் அனைத்திற்கும் மதுப்பழக்கம் தான் வழிகாட்டி என்று எடுத்துரைப்பதுடன் மதுபானம் அருந்தக்கூடாது எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை, சோளம், ஓட்ஸ், பார்லி, அரிசி, திராட்சை போன்றவற்றிலிருந்து தயாரிக்கப் படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் (நொதி) பழத்திலும், தானியங்களிலுள்ள மாவையும், சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.
அதுபோல் தற்போது தயாரிக்கப்படும் மதுவில் மூலக்கூறாக ஈதைல் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது.
மதுக்களில் உள்ள ஈதைல் ஆல்கஹாலின் அளவு
ரம் 50 - 60%
விஸ்கி, பராந்தி, ஜின் 40 - 45%
ஒயின் 10 - 15%
சாராயம் 40 - 50%
பீர் 4 - 8%
இதில் உள்ள ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடு பரவல் மூலம் இரத்தத்தில் வெகு விரைவில் கலக்கிறது. இதனால் உடனே போதை உண்டாகிறது.இரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகரிக்க அதிகரிக்க மனிதன் தன்னை இழக்க ஆரம்பிக்கிறான். முதலில் தசை கட்டுப்பாடு இழக்கும். தொடு உணர்வு குறையும். சிந்தனை மாறும், வாய் வார்த்தை குளறும். நடையில் தள்ளாட்டம், அதிக மயக்கம், ஞாபகமறதி, குழப்பம் போன்றவை உண்டாகும்.
ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத்து குடிக்கப்படும் மதுவில் 20 சதவிகிதம் ரத்தத்தில் நேரடியாக கலக்கிறது. மீதமுள்ள மது முழுவதையும் கல்லீரல் அரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப்புகளில் பரவி பல வகையான மாற்றங்களை உண்டுபண்ணுகிறது.பின்பு உடல் நரம்புகள் பாதிப்படைந்து, பார்வை நரம்புகளும் பாதிக்கப்படும். பித்தம் அதிகம் சுரந்து குடலில் அழற்சி உண்டாகி கல்லீரல் செல்கள் சேதப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் தெரிவதில்லை.பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்படும் இந்த மதுப்பழக்கம் நாள் ஆக ஆக, எந்த நேரமும் அதைப் பற்றிய சிந்தனையையே உண்டாக்கும். தினமும் அருந்தும் எண்ணம் உண்டாகும். அருந்தும் அளவும் அதிகரிக்கும்.
இப்படி அளவுக்கு அதிகமாக மது குடிப்பவர்களின் நரம்புகள் தளர்ச்சியடைந்து, கை, கால்கள் நடுக்கம் உண்டாகும். இந்த நடுக்கத்தைப் போக்க மேலும் மேலும் மது அருந்த ஆரம்பிப்பார்கள். சுயக் கட்டுப்பாட்டை இழந்துவிடுவார்கள்.குடிப்பதற்காக பலவிதமான போலிக் காரணங்களைக் கூறி நியாயப்படுத்துவார்கள். மனைவி, மக்கள் உறவுகளுடன் இனிமேல் குடிக்க மாட்டேன் என சத்தியங்களை அள்ளி விடுவார்கள்.காதல் தோல்வி, விரக்தி, குழந்தை இல்லையென பல ஆண்கள் மது அருந்துகிறார்கள். இது மேலும் பாதிப்பை ஏற்படுத்துமே ஒழிய மாற்றத்தை உண்டு பண்ணாது என்பதை புரிந்து கொள்வதில்லை.பொதுவாக மது அருந்துவது உடல்நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் அதிக அளவில் பாதிக்கும். மது குடிப்பது பற்றிய சிந்தனை இருந்து கொண்டேயிருக்கும். உடல் அளவிலும் மனதளவிலும் பதற்றத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தும்.மெல்ல மெல்ல காரணமற்ற பயத்தால் தன் குடும்பம் பற்றிய அவநம்பிக்கையான எண்ணங்கள், தாம்பத்திய உறவில் விரிசல், சந்தேக எண்ணங்கள் போன்றவை ஏற்படும். இதுபோல் உடலிலும், மனதிலும் பல பாதிப்புகள் உண்டாகும்.
மதுவினால் உண்டாகும் பாதிப்புகள்:
நாம் சாப்பிடுகின்ற எத்தகைய உணவும் சீரமணடைந்த பிறகு குடலில் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பலவகையான மாற்றங்களைப் பெற்று, உடலின் தேவைக்கு ஏற்ப பல பாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள சத்துக்கள், கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. அதுபோல அருந்தும் மதுவானது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு இரத்தத்தில் கலந்து கல்லீரலுக்கு சென்றடைகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்படும் சத்துக்கள் போல் மதுவும் வளர்சிதை மாற்றங்களுக்கு உட்படுகிறது. அதாவது கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால் டீஹைடிரோஜனேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும். மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜினஸ் என்ற நொதியில் அசிட்டால் டீஹைடு, ஆயிடேட் என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப்பொருட்களும், மதுவும் கல்லீரலைப் பெரிதும் பாதிப்படைய வைக்கிறது.மதுவை தொடர்ந்து அதிகமாக அருந்தும்போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமுக்கு அதிகமாக மது அருந்தும் ஆண்களுக்கும், 20 கிராமுக்கு அதிகமாக மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்படைகிறது.
மது அதிகமாக அருந்தும்போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமான கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப்படுகின்றன. அதேநேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாக செலவழிக்கப்படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரைப் பாதிப்படைய செய்கிறது.கல்லீரலில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குவதால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிந்துபோகின்றன. ஹையலின் என்ற பொருட்கள் கல்லீரலை இறுக்கி நோயாக மாற்றுகிறது. மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப்படிகிறது.துவக்கத்தில் அறிகுறிகள் ஏதும் தெரியவராது. ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு காமாலை, மூளை பாதிப்பு, நரம்பு பாதிப்பு, வைட்டமின் குறைபாடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண், கை கால் நடுக்கும் உண்டாகும்.
இஸ்லாம் மதுவை பற்றி என்ன சொல்லுகின்றது பார்ப்போம்
يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ
மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத்
தவிர்த்துக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)
மதுவைப் பற்றி நபிகளாரின் வாக்கு
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مُدْمِنُ الْخَمْرِ، كَعَابِدِ وَثَنٍ
தொடர் குடிகாரன் சிலை வணங்கியைப் போல என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இப்னு மாஜா
அல்லாஹ்வின் சாபம் பெற்றவர்கள்
عَنْ أَبِي عَلْقَمَةَ، مَوْلَاهُمْ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ الْغَافِقِيِّ، أَنَّهُمَا سَمِعَا ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَشَارِبَهَا، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَحَامِلَهَا،
وَالْمَحْمُولَةَ إِلَيْهِ
صحيح أبي داود: -
மது, மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், பிழிபவர், பிழிந்து வரவேண்டுமென  நாடுபவர், அதை சுமந்து செல்பவர், தனக்கு சுமந்து கொண்டுவரவேண்டும் என எண்ணமுள்ளவர்  அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரம் : அபூதாவுத்,)
வியர்வை குடிக்கும் குடிகாரன்

عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ شَرِبَ الْخَمْرَ، لَمْ يَرْضَ اللَّهُ عَنْهُ أَرْبَعِينَ لَيْلَةً، فَإِنْ مَاتَ، مَاتَ كَافِرًا، وَإِنْ تَابَ، تَابَ اللَّهُ عَلَيْهِ، وَإِنْ عَادَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ» قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا طِينَةُ الْخَبَالِ؟ قَالَ: «صَدِيدُ أَهْلِ النَّارِ»
யார் மது குடிக்கிறாரோ நாற்பது நாள் வணக்கத்தை அல்லாஹ்  ஏற்றுக் கொள்ளமாட்டான். அவன் (அதே நிலையில்) இறந்தால் காபிராக தான் மரிப்பான். அவன் தவ்பா செய்தால் அல்லாஹ் மன்னித்து விடுவான். அவன் மீண்டும் மீண்டும் குடித்தால் தீனுல் ஹபாலை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவான். தீனுல் ஹபால் என்றால் என்ன? என்று நபித் தோழர்கள் கேட்ட போது நரகவாசிகள் உடலிலிருந்து வெளியேறக்கூடிய வியர்வை என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். 

وفى الحديث (من شرب الخمر بعد ان حرمها الله على لسانى فليس له ان يزوج إذا خطب ولا يصدق إذا حدث ولا يشفع إذا تشفع
மது அருந்துபவனுக்கு மணமுடித்து வைக்கக் கூடாது. அவன் பேசினால் உண்மை படுத்தவும் வேண்டாம்.
அவன் சிபாரிசு செய்தால் சிபாரிசு  ஏற்றுக் கொள்ளபடாது
என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் (ரூஹுல் பயன்)

மது ஒழிப்பு சாத்தியமே!

மதுவினால் ஏற்படும் தீமைகள் குடி போதையில் பெற்றோர்களையே கொலை செய்த சம்பவமும், குடிப்பழக்கத்துக்குஅடிமையான தாயும், மகளும் மது அருந்த பணம் இல்லாததால் தங்களின் பச்சிளம்குழந்தைகளையே விற்ற சம்பவமும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. மதுரையில் பள்ளியில் இருந்த பெஞ்சை திருடி விற்று மாணவர்கள் மது அருந்தியுள்ளனர்.குடிக்க பணம் தர மறுத்ததால் தீக்குளித்தவர்கள் பலர்.தள்ளாடும் தமிழகம், தமிழகத்தின் சிறப்புத் தன்மைகள் : 1,இந்தியாவில் மிகஅதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள். 2, தமிழகத்தில்குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி.அவர்களில் 20 சதவீதம் பேர் குடியைவிட்டு மீளமுடியாத அளவுக்கு போதைக்கு அடிமையானவர்கள் 3,தமிழகத்தில்அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதைசேர்ந்தவர்கள். 4. அதிகமான சாலை விபத்துக்களை கொண்ட மாநிலம் என்ற பெருமைதமிழகத்தையே சேரும் ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்கு பலகாரணம் இருந்தாலும் 60 சதவீத விபத்துகள் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால்தான்.5. மதுபான விற்பனையால்,ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் மொத்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்கு சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.6. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மதுபானத்துக்காகசெலவிடுகிறார்கள். ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கும் கிராம மக்கள்தான் தினமும் 70 ரூபாய் கொடுத்து டாஸ்மாக் மதுவை அருந்தும்நிலை உள்ளது
பத்திரிக்கைகளை திறந்தால் படுகொலை, கொள்ளை, வழிப்பறிகள், கற்பழிப்புகள் மானபங்கப்படுத்துதல்கள் பற்றிய செய்திகள் தான் அதிக மாக வருகின்றன. புது தில்லியில் இரவு நேரத்தில் பஸ்ஸில் பயணித்த பெண்ணை 5 நண்பர்கள் கொடூரமாக தாக்கி கற்பழித்த நிகழ்வு நாட்டையே உலுக்கியது.பாராளுமன்றத்தை அதிர வைத்த்து.இதில் குற்றம் சாட்டப்பட்ட பவன் என்பவன் என்னை தூக்கில்போடுங்கள் நான் கொடூரமான குற்றத்தை செய்து விட்டேன் என்று கதறியிருக்கிறான்.
இத்தனைக்கும் பின்னணியில் மதுவின் மாயம் மறைந்திருக்கிறது.
இந்தச் செய்திகள் ஒவ்வொன்றிலும் மதுக் குடித்து விட்டு என்ற வார்த்தை தவறாமல் இடம் பெறுவதை காணலாம்.
பள்ளிக்கூட மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் இந்த கொடூரத்திற்கு ஆட்படுகிறார்கள்.

15 ஆண்டுகளுக்கு முன் 28 வயதுக்கு மேறபட்டவர்கள் குடிப்பதை பார்க்க முடிந்தது. இப்போது 13 வயது சிறுவர்கள் குடிக்கிறார்கள்
அவன் குடித்தான்.. தள்ளாடியது... அவன் மட்டுமல்ல அவனுடைய  குடும்பமும் தான்  என்று சொல்லுவார்கள். ஒரு மனிதனை இந்த குடிப்பழக்கம் அதல பாதாளத்தில் தள்ளி, எட்ட நின்று எள்ளி நகையாடும், மகா கொடிய மிருகம் என்றால் அது மிகையாகாது. புஜங்கள் திமிரும் பலம் பொருந்திய,அறிவு பொதிந்த, ஆட்சி அதிகாரங்கள் கொண்ட அரசனாக இருந்தாலும், இந்த குடியில் வீழ்ந்தால்.. எழுவது வீதியில் தான் என்பதில் யாவருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

இறைவனின் முதல் கட்டளை செய் என்பதல்ல. செய்யாதே.. என்பதுதான். இறைவன் ஆதாம் ஏவாலை படைத்தபின் அவர்களிடம் கூறும் முதல் கட்டளை ஒருகுறிப்பிட்டமரத்தில், அதாவது அறிதலைத் தரக்கூடிய மரத்தில் உள்ள கனியை உண்ணக்கூடாது என்பது தான். இதில் ஒரு கோட்பாடு உள்ளடக்கப் பட்டுள்ளது. அது மனித மனம் எதிர்மறையில் தான் கட்டமைக்கப்படுகிறது என்பது  தான். இந்த சோதனைக் களத்தில் வெற்றி பெறுபவருக்குத் தான் ஈருலக வாழ்க்கையும் வளம் பெறும்.

அரேபிய பாலைவனத்தில் 'ஜாஹிலியா' என்று சொல்லக் கூடிய அறியாமை காலத்தில்பெண் பிள்ளைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்த மகா பாதக கொடுமைகளை அரங்கேற்றிய காட்டரபிகள் விபச்சாரம்,கொலை, கொள்ளை மட்டுமல்லாமல், குடம்குடமாக மது அருந்திய ஒரு சமுதாயம், தங்களை முழுவதுமாக மாற்றிக் கொண்டு மதுக் குடங்களை தெருவில் போட்டு உடைத்து, திருந்திய வரலாற்றுப்பதிவுகள், இந்த பூவுலகை இன்றும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆகவே இந்தஅறிவை மழுக்கும் மதுவை இன்றைய சமுதாயம் முழுமையாக விலக்குவது சாத்தியமா ? என்பதை சமூகத்தின் பார்வையிலும், இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் மூலமும்ஆராய்ந்து பார்ப்போம்.

இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர்.அப்போது அது பற்றி எத்தகைய சட்டமும் இல்லாதிருந்ததால், அதுஅனுமதிக்கப்பட்டதாகவே கருதப்பட்டு வந்தது. முஸ்லீம்கள் திருமதீனா வந்தபின்னர் ஹஜ்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் சில அன்சாரித்தோழர்களும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள் : 'அல்லாஹ்வின்தூதரே ! மதுவையும் சூதாட்டத்தையும் பற்றி எங்களுக்கு ஒரு தீர்ப்புவழங்குவீர்களாக. அவை அறிவை கெடுக்கின்றன. பொருளை நாசம் செய்கின்றன என்றுகூறினார்கள்' அப்போதுதான் அல்லாஹுத்தாஆலா குர்ஆனில் இந்த வசனத்தை இறக்கிவைத்தான்.

عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي مَيْسَرَةَ، عَنْ عُمَرَ أنَّه قَالَ: لَمَّا نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ قَالَ: اللَّهُمَّ بَيِّن لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا. فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ التِي فِي الْبَقَرَةِ: {يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ [وَمَنَافِعُ لِلنَّاسِ] (1) } فدُعي عُمَرُ فقرئتْ عَلَيْهِ، فَقَالَ: اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا. فَنَزَلَتِ الْآيَةُ التِي فِي النِّسَاءِ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النِّسَاءِ: 43] ، فَكَانَ مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَقَامَ الصَّلَاةَ نَادَى: أَلَّا يَقْرَبَنَّ الصَّلَاةَ سكرانُ. فدُعي عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ، فَقَالَ: اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا. فَنَزَلَتِ الْآيَةُ التِي فِي الْمَائِدَةِ. فَدَعِي عُمَرُ، فَقُرِئَتْ عَلَيْهِ، فَلَمَّا بَلَغَ: {فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ} [الْمَائِدَةِ: 91] ؟ قَالَ عُمَرُ: انْتَهَيْنَا، انْتَهَيْنَا
"மதுவையும் சூதாட்டதையும் பற்றி (நபியே) உம்மிடம் அவர்கள்கேட்கிறார்கள். அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்கு சிலபிரயோஜனங்களும் இருக்கின்றன. ஆயினும் இவ்விரண்டின் மூலம் ஏற்படும் பாவம்அவற்றின் பிரயோஜனத்தைவிட மிகப் பெரியதாகும் என்று நீர் பதில் கூறும் (அல்குர்ஆன்)"
மேற்கண்ட இவ்வசனத்தின் மூலம் விடையும் கிடைத்தது. எனினும் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது என்று இவ்வசனத்தின் மூலம் ஆரம்பத்தில் தடைவிதிக்கப்படவில்லை. அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்கு சிலபிரயோஜனங்களும் இருக்கின்றன என்று மட்டும் கூறப்பட்டதால் பாவம் என்றுகருதிய சிலர் அதை விட்டனர். அதில் சில பலன்கள் உண்டு என கருதியோர் அதை அருந்தினர்.ஆனால் அனைத்து பாவங்களுக்கும் தலையாயதாக, பாவங்கள் செய்யதூண்டுகோலாக, தலைவாசலாக இந்த மதுப் பழக்கம் இருப்பதினை உணர்ந்த அரபியர்கள் குடிப்பழக்கத்திலிருந்து முழுவதுமாக விடுபட இறைவன் விரைவிலேயே நல் வழிகாட்டினான்.

மதுவருந்துதல் அரேபியர்களின் அன்றாட பழக்கமாக இருந்தது. அதனால் பலன்கள் அதிகமுண்டு எனக்கருதி அதனை விடாது அவர்கள் அருந்தி வந்தனர். முதல்தடவையிலேயே மது அருந்தக்கூடாது என கடுமையான தடை விதிக்கப்பட்டால் அதனை அமுல் நடத்துவது அவர்களுக்கு சிரமமாகிவிடும். அதனால் தான் சிற்கச்சிறுக பலவிதமாக அதன் கெடுதிகளை உணர்த்திக்கொண்டே வரப்பட்டது. இறுதியில் மதுதீங்கு விளைவிப்பதே என அவர்கள் உணர்ந்ததும் பூரணமாக தடை விதிக்கப்பட்டது.அச்சமயம் அதை அமுல்படுத்துவதற்கும் அவர்களுக்கு எளிதாகி விட்டது.கண்டிப்பாக மது அருந்தக்கூடாது என்ற சட்டம் வந்தது ஏன்? என்பதை பின் வரும்ஹதீஸ் விளக்குகிறது.

ஹஜ்ரத் அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் தோழர்கள் சிலரை அழைத்திருந்தார்கள். விருந்தினருக்கு உணவுபரிமாரப்பட்டது. அதில் பண்டைய வழக்கப்படி மதுவும் வைக்கப்பட்டிருந்ததால்விருந்தினர் அதையும் அருந்தினர். மஃரிப் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டதால்யாவரும் எழுந்தனர். அவர்களில் ஒருவர் இமாமாக முன் நின்று தொழ வைக்கசென்றார். போதை தலைக்கேறியிருந்த சமயம். அதனால் "காஃபிரூன் என்றஅத்தியாயத்தை ஓதிய அவர் காஃபிர்களே! நீங்கள் வணங்கிக்கொண்டிருப்பதை நான்வணங்க மாட்டேன் என்று இருக்கும் வசனத்தில் வணங்கமாட்டேன் என்பதை வணங்குவேன்என்று மாற்றி ஓதிவிட்டார். இதனை உத்தேசித்து உண்மை விசுவாசிகளே ! நீங்கள்போதையாக இருக்கும் நிலையில் தொழுகையின்பால் நெருங்காதீர்கள் (அல்குர்ஆன் 4:43) என்னும் வசனம் அடுத்து இறக்கப்பட்டது.
போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்றுதான் தடை விதிக்கப்பட்டது.இதனால் மது அருந்துவோர் இரவின் பிற்பகுதி தொழுகையான இஷாவை முடித்துக்கொண்டுமது அருந்துவிட்டு தூங்கிவிடுவர். காலை எழுந்திரிக்கும் போது போதைதெளிந்திருக்கும். பஜ்ர் தொழுகையை நிறைவேற்றிவிட்டு பிறகு மது அருந்துவார்கள். மதியம் லுஹர் தொழுகையின் போது அது தெளிந்துவிடும். இந்நிலைசில நாட்கள் நீடித்தது. ஆனால் மது அருந்துவது அறவே தவிர்க்கப்படவில்லை .

பின்பு உதுமான் பின் மாலிக் என்பவர் ஒரு விருந்து வைத்து முஸ்லீம்கள் சிலரை அதற்கு அழைத்தார். அழைக்கப்பட்டவர்களில் ஸஃதுபின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். அவ்விருந்தில் ஒட்டகத்தின் தலைபொரித்து வைக்கப்பட்டிருந்த்து. அதனை அனைவரும் ரசித்து புசித்துவிட்டுஅதற்கு மேல் வேண்டிய மட்டும் மதுவை அருந்தினர். மிதமிஞ்சிய போதையால் ஆடலும்பாடலும், குடும்ப பெருமை பற்றிய புகழ்பாக்களும் கிளம்பிவிட்டன. ஸஃதுபின்அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒரு கவிதை புனைந்து அதில் தன்மரபினரை பெருமைபடுத்தியும் மதினா வாசிகளான அன்சாரிகளை இகழ்ந்தும் பாடினார். இது அன்சாரிகளில் ஒருவருக்கு ஆத்திரத்தை மூட்டியது. ஒட்டகத்தின் எழும்பொன்றை எடுத்து ஸஃது அவர்களின் தலையில் ஓங்கி அடித்துகாயப்படுத்திவிட்டார். ஸஃது அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் சென்று முறையிட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த ஹஜ்ரத் உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைவா! மது விஷயத்தில் தெளிவான கட்டளையைதெரிவிப்பாயாக என்று வேண்டிக்கொண்டார்கள். இதன் பின்னர்தான் அறவே மதுஅருந்தக்கூடாது என்ற கட்டளை பிறந்தது. இதனை தாங்கிய வசனம் அல்மாயிதா என்றஅத்தியாயத்தில் வருகிறது. (ஆதாரம்: புகாரி, முஸ்லீம்)

மனிதனின் அறிவை மாற்றி மிருகத்திற்கு ஒப்பாக்கி வைக்கும் மதுவைஅருந்துதல் கொடிய குற்றமாகும். கள்ளை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அதுகெடுதிகள் அனைத்திற்கும் தாயாகும். அல்லாஹ்வின் மீது பிரமாணமாக உண்மைவிசுவாசமும் கள் குடித்தலும் ஒன்று சேராது. இரண்டில் ஒன்று மற்றொன்றைஅப்புறப்படுத்திவிடும் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் : உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவ்ர்கள். நூல்:நஸாஈ)
மது அருந்துவோர் குற்றவாளியாக இருப்பது போல அவர்களுக்கு உதவியாகஇருப்போரும் குற்றவாளிகளே!.

.
குடித்தவன் எவ்வளவு படித்தவனாக இருந்தாலும், எத்தகைய ஈமான் கொண்டசீமானாக இருந்தாலும், அவன் அல்லாஹ்வின் அன்புக்குறியவனாக ஆக முடியாது. அவன்இறக்கும் வரை ஈமானை இழக்காமல் இதயத்திலேயே வருத்தியிருந்தாலும் கூட எத்தகைய சிறப்பும் பெற்றுவிட முடியாது. மதுமேல் அவன் கொண்ட மோகம் அவனின் ஈமானின்பாகத்தை பறித்துவிடும். மதுபானம் குடித்து மகிழ்ந்திருப்பவன், அதில் மயங்கியிருப்பவன் மாண்புடைய ஈமானையும் கொண்டிருப்பானாயின் அந்த ஈமான்அவனிடமிருந்து பறிக்கப்பட்டே தீரும். ஆகவே அவன் இறப்பதற்கு முன்னேயே அவனிடமுள்ள ஈமான் இறந்து விடும்.

இதற்கோர் எடுத்துக்காட்டு :

ஷைக் அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கிறார்கள், ஒருசமயம் நான் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது வழியில் பெண்கள்கூட்டமாக அழுதுகொண்டிருந்தார்கள்.இதைக்கண்ட நான் அவர்களிடம் சென்று ஏன்அழுதுகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அண்டை வீட்டில்ஒருவர் சக்ராத் நிலையில் கிடக்கிறார். அவர் வாயில் ஷஹாதத் கலிமா சொல்லவரவில்லை. நாங்கள் பலமுறை சொல்லிக்கொடுத்தோம். அப்படியும் அவரால் அதை சொல்லமுடியவில்லை. ஆகவே நீங்கள் அதை சொல்லிக்கொடுத்தால் ஒரு வேலை அவர்சொன்னாலும் சொல்லக்கூடும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.நானும்சென்று அம் மனிதனுக்கு எத்தனையோ முறை கலிமா ஷஹாதத்தை சொல்லிக்கொடுத்தேன்.அப்போதும் அவர் சொல்லவேயில்லை. இறுதியாக திடீர் என்று கண் விழித்தார். நான்சொன்ன கலிமாவை மட்டும் காதால் கேட்டார். கேட்ட உடனேயே நான் இஸ்லாத்தை வெறுக்கிறேன் என உரத்துச் சப்தமிட்டார். அந்த சப்தத்துடன் அவரது ஆவிபிரிந்தது.
உடனே நான் அப்பெண்களிடத்தில் இவர் காபிராக மரணித்துவிட்டார். ஆகவேஇவருக்கு ஜனாசா தொழ வைப்பதோ முஸ்லீம்களின் அடக்க ஸ்தலங்களில் அடக்கம் செய்வதோ கூடாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். பின் அந்த இறந்தவரின் உறவினர்களை அழைத்து இவர் தன் ஜீவியத்தில் என்ன செயல்களை செய்துகொண்டிருந்தார் என்று கேட்டேன். இதற்கவர்கள் இவர் தனது ஜீவியத்தில்ஒழுங்காக தொழுது இறைவனுக்கு பிரியமான பல காரியங்களும் செய்து வந்தார்.ஆனால் மது அருந்துவதை மட்டும் தன் பழக்கமாக கொண்டிருந்தார் என கூறினார்கள்.நான் உடனே இவர் மது அருந்துவதை பழக்கமாக கொண்டதால் இவரின் ஈமான் பறிக்கப்பட்டு விட்டது என்று கூறினேன். இவ்வாறு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹிஅலைஹி அறிவிக்கிறார்கள்.

மதுபானமானது பாவங்களை சேகரிக்கும் மிகப்பெரும் கருவியாகும். மதுபானம்அருந்துபவர் சிலைகளை வணங்குபவர் போல் ஆவார். மதுபானம் அருந்துபவரை இறைவன்சபிக்கிறான். மேலும் அவன் மீது இறைவனின் சாபமும் ஏற்படுகிறது. மது பானம்அருந்துபவரின் ஈமான் பரிக்கப்பட்டுவிடும். ஏனெனில் மதுபானமும் ஈமானும்ஒன்று சேராது. மது அருந்துபவரின் நிலை இப்படியென்றால் மதுக்கடைகளை வைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கொடுக்கிறார்களே அவர்களின் நிலை என்னவாகும்? அகிலத்தை படைத்து ஆட்சி செய்யும் ஏக அல்லாஹ்வின் ஆணை பெரிதல்லவா? சிலமுஸ்லீம்கள் ஐங்காலமும் தொழுது வருகிறார்கள். ஆயினும் மது வியாபாரத் தொழிலைசெய்து வருகிறார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டால் நாங்களென்ன குடிக்கவா செய்கிறோம். வியாபாரம்தானே செய்கிறோம் என்று கூருகிறார்கள்.அவர்கள் கொடுக்கின்ற மது பாட்டில்கள் எத்தனை குடும்பங்களை குட்டிச்சுவராக்கியுள்ளன. எத்தனை மானங்கெட்ட ஈன பிறவிகளை எல்லாம் உருவாக்கியுள்ளன? மதுபானம் குடிப்பவன்,விற்பவன்,அதற்கு உதவி செய்பவன்அனைவருக்கும் ஒரே தண்டனைதான் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியிருப்பதை அவர்கள் எண்ணிப்பர்க்க வேண்டும்.

மது அருந்துவது மா பாதகச்செயல். அது மதியை மங்க வைத்துவிடும். புனிதமிகு மனிதனை கொடிய மிருகமாக்கி விடும் என்பதை மதியுடையோர் அனைவரும் நன்குணர்வர். மது அருந்துவதை சர்வ சாதாரண செயலாகக்கொண்டு நாள்தோரும் பலமுறை குடித்து குடித்து கும்மாளமிட்ட அரேபியர்களிடையே மதுவின் தீமைகளைபடிப்படியாக துணிந்துரைத்து, இறுதியில் மதுவிலக்கை அமுல் நடத்தி வெற்றிகண்ட பெருமை வேந்தர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களேயே சாரும்.

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொண்டுள்ளாரோ அவர் மதுக்குவலையின் அருகில் கூட அமர வேண்டாம் என அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள். அவர்களது அறிவுரையை கேட்ட அரேபியமுஸ்லீம்கள் தங்கள் இல்லங்களிலிருந்த மதுக்குவலையை உடைத்து நொருக்கிய போதுமதீனாவின் வீதிகளில் அம்மதுவானது ஆறென பெருக்கெடுத்து ஓடியது. மதுஅருந்துபவன் இஸ்லாத்தின் துரோகி மட்டுமல்லாமல் நாட்டின் துரோகியுமாவான்.மது அருந்துவதனால் பல வகையான இழி தன்மைகள் ஏற்படுகின்றன. எனவே அதை விட்டுநீங்கி கொள்ளுமாறு உம்மை எச்சரிக்கிறேன் என அறிஞர் பகீஹ் அபூலைத் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பார் அறிவிக்கிறார்.

நபிகள் நாயகம் அவர்கள் சொல்கிறார்கள். என் சமுதாயம் கீழ் காணும்பதினைந்து வஷயங்களை செய்தால் சிகப்பு காற்று பூகம்பம், உருமாற்றம், கல்மாரிஎனத்தொடர்ச்சியான பல வேதனைகள் நிகழும். அதில் மது அருந்துவதும் இடம்பெறுகிறது. (நூல் : மிஷ்காத்).

ஒரு வீட்டில் தீ பிடித்துவிட்டால் அதன் அருகிலுள்ளோர் அணைக்க வேண்டும். இல்லையெனில் சுற்றியுள்ள பற்பல வீட்டையும் நாசமாக்கிவிடும். இதேபோன்று தீச்செயல்களைத் தடுக்க வேண்டும்.

مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُنْكِرْهُ بِيَدِهِ، فَمَنْ لَمْ يَسْتَطِعْ فَلْيُنْكِرْهُ بِلِسَانِهِ، فَمَنْ لَمْ يَسْتَطِعْ فَلْيُنْكِرْهُ بِقَلْبِهِ، وَذَاكَ أَضْعَفُ الْإِيمَانِ» ابو داود
யார் எக்கேடு கெட்டுபோனால் நமக்கென்னஎன்று இருந்து விடக்கூடாது.
சமுதாயத்தில் பரவியிருக்கும் தீய செயல்களாம் வர தட்சணை. கொலை,கொள்ளைஎன்பன போன்றவையின் வேதனை, பாதிப்பு அனைத்து மக்களையும் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளன. அதேபோல் மது அருந்துவது சர்வ சாதாரணமாககருதப்படுகிறது. மற்றவர்கள் குடித்தால் நமக்கென்ன? நாம் மட்டும்குடிக்காமல் இருந்தால் போதும் என்று இருந்து விட்டால் அவர்களை பிடிக்கும் வேதனை நம்மையும் சேர்த்து பிடித்துக்கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

 கொலைதற்கொலை ஆகிய குற்றங்கள் புரிவோரில் அதிகமானோர் மதுஅருந்தியவர்களேயாவர்.வீடுகளில் ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்கும் மதுக்கடைகளில் ஏற்படும் கலகங்களுக்கும் மதுவே காரணமாகும், மது அல்லது போதைமருந்துகளின் மயக்கத்திலேயே பல தற்கொலைகள் நடக்கின்றன. நாட்டில் ஏற்படும்குற்றங்களில் 90 சதவிகிதம் மது அருந்தும் போது ஏற்படும் குற்றங்களேயாகும்.
மதிகெட்டு மிருக நிலைக்கு ஆளாகும் குடிகாரன் ஞாபகமிழந்து, உடல்தளர்ந்து, உள்ளம் சோர்ந்து, எண்ணும் திறனிழந்து பயனற்ற ஜடமாகி விடுகிறான்.மூர்க்க தனமும், வெறிக்கூச்சலும் அவன் குடி போதையில் செய்யும்வேடிக்கைச்செயல்களும் நல்லொழுக்கத்திற்கு நேர்மாறாகி விடுகிறது. இனிஎப்போதும் மதுவை தொடுவதில்லை என ஒவ்வொரு முறை குடிக்கும்போதும் சத்தியம்செய்யும் வார்த்தைகள் போல, மனோ நிலையும் எப்போதும்மாறிக்கொண்டேயிருக்கிறது. கோபமும் அதைத்தொடர்ந்து அழுகையும் உடனேவெடிச்சிரிப்பும் சிறிதும் வெட்கமின்றி வெளிப்படுத்துவான். அவனுக்காகவோஅல்லது குடி வெறியால் மற்றவர்களுக்கு விளையும் தொல்லைகளுக்காகவோ சிறிதும்கவலைப்படுவதில்லை. இதுவே இவர்களின் இழிநிலையாகும். இத்தகய மக்களால்சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் என்ன பயன் ஏற்பட்டுவிடும்?

   மனிதனின் கௌரவத்தை குலைத்து அவனை நேர்மையற்றவனாக, வெட்க உணர்வுசிறிதுமற்றவனாக மது மாற்றுவதை நாம் காண்கிறோம். மது போதையில்எண்ணிப்பார்க்க முடியாத பல பயங்கர குற்றங்களை மனிதன் எல்லா நிலைகளிலும்எல்லாக்காரியங்களிலும் புரிகிறான். அதனால் அவனும் அவனது குடும்பத்தவரும்ஏன் சமுதாயமும் கூட வேதனைப்படுகிறது என்ற போதிலும் மகிழ்விக்கும் மதுகோப்பையை மனிதன் கைவிட விரும்பவில்லை. இதை எதிர்த்து அனைத்து துறையினரும்முயல வேண்டும். எளிதில் திருத்த முடியாத உலகப்பிரச்சனையாக என்றும் போலஇன்றும் இருந்து வருவது யாவரும் மறுக்க முடியாத உண்மை.அலுவலகத்திலிருந்து கண்ணியமாக வரும் ஒருவன், மது அருந்தும் பாருக்குசென்று திரும்பியவுடன் அலங்கோலமாகின்றான். இதில் பாமரன் படித்தவன் என்றபேதமின்றி நடுத்தெருவில், சாக்கடைகளில் விழுந்து கிடப்பதை அன்றாடம் நாம்கண்டு வருகின்றோம். ஒருநாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் தனதுசம்பாத்தியத்தின் முக்கால் பகுதியான 75 ருபாயை டாஸ்மாக்கில் செலவுசெய்கிறான். வீட்டில் பசியோடு காத்திருக்கும் மனைவியும் குழந்தைகளும்மீதமுள்ள 25 ரூபாயில் தான் மூன்று வேளை உணவு உண்டு, பிற செலவுகளையும் செய்யவேண்டும். பணம் போதவில்லை என்று மனைவி கேட்டுவிட்டால் அடி, உதை தான்.தள்ளாடும் தமிழகத்தை கரையேற்ற நினைப்பதற்தற்கு பதிலாக மூழ்கடிக்கநினைத்ததன் விளைவு இன்று பெண்களும் வெளிப்படையாக டாஸ்மாக் கடைக்கு சென்றுமது அருந்தும் பழக்கம் பேஷனாகி வருகின்றது. வரிசையில் நின்று பாட்டில்வாங்குவது மக்களுக்கு சிரமம் என்பதால் டில்லி அரசு, ஓட்டல்களில் மது பரிமாறஏற்பாடு செய்யப் போகிறதாம். இதுவரை நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும்பரிமாறப்பட்டு வந்த மதுவை தற்போது அனைத்து ஹோட்டல்களிலும் பரிமாறும் புதியமதுக்கொள்கையை டில்லி அரசு ஏற்படுத்தியுள்ளதாம். இந்திய தேசத்தின்நன்மதிப்பு, கலாச்சாரம் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.'தீமைகளுக்கெல்லாம் தீமை மது' என்று சொன்னால் மிகையல்ல. இதன் மோசமானகெடுதிகளை நாம் சிந்தித்தால் மது பாவத்தின் அன்னை என்பதில் எள்ளளவும்சந்தேகம் இருக்க முடியாது. மதுவினால் விளையும் தீமைகள் அனைத்து துறைகளையும்பாதிக்கக்கூடிய உடல் நலக்கேடு, சுகாதாரக்கேடு, பொருளாதார நஷ்டம்,சமூகசீர்குலைவு, அரசியல் அநாகரீகம் என சகல மட்டங்களிலும் மதுவின் தீமைகள் பரவிகிடக்கின்றது.இத்தனை கொடுமை நிறைந்த பழக்கத்தை சிறைத் தண்டனையாலோ, அபராதம்விதிப்பதாலோ நிறுத்திவிட முடியாது. மனக் கட்டுப்பாட்டினால்தான் இதை ஒழிக்கமுடியும். இவ்வுலகில் எந்த ஒரு சமயமும், மது அருந்துவதை நியாயப்படுத்திபோதனை செய்யவில்லை. ஆதலால் குடிப்பவர்களுக்கு உபதேசம் செய்து குடியை தடுத்து நிறுத்துங்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அச்செய்கையைவிட்டும் காப்பற்றுவானாக.. ஆமீன்.


மேலும் குறிப்புகளுக்கு :



புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை: மது
http://googleweblight.com/?lite_url=http://pudukaiulama.blogspot.com/2012/12/blog-post_25.html?m%3D1&ei=dEXOSyMl&lc=en-IN&s=1&m=760&ts=1438621154&sig=AKQ9UO8ju5Kp__H5jUwUMItSrJtgu2b_rg

மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?
http://ayurvedamaruthuvam.forumta.net/t1170-topic
பாவத்தின் தலைவாசல் மது எம்.முகமது சித்திக் – மலேசியா | மக்கள் மது ஒழிப்பு இயக்கம் - தமிழ்நாடு
https://pmptn.wordpress.com/2012/04/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/


@இன்றையை கண்ணேட்டம்@
 (டாஸ்மாக்)
தமிழ் நாட்டுல,
📚📚📚
4042 நூலகங்கள் இருக்கு,
🍺🍺🍺
6824 டாஸ்மாக் இருக்கு,
📖📖📖
நான் படிக்கவா?
🍻🍻🍻
குடிக்கவா?

10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்!
🏫
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
🍸🍸🍸🍸🍸🍸🍸🍸🍸🍸

காய்ச்சி விற்றால் கள்ளசாராயம்!
அரசே விற்றால் நல்ல சாராயமா..!

இந்த வருஷம் இவ்வளவு
♨️♨️♨️
பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.

இந்த வருஷம் இவ்வளவு
🚗🚗🚗
வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.

இந்த வருஷம் இவ்வளவு
🍺🍺🍺
சாராயம் விக்கனும்னு தீர்மானம் அது தமிழ் நாடு...

குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்..
💵💵💵
போதைல வண்டி ஒட்டுனா
👮👮👮
போலீஸ்க்கு வருமானம்..
அடிபட்டா
👷👷👷
ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்..
குடிக்கிற உங்களுக்கு
🙇🙇🙇
அவமானம் மட்டுமே..!

காலியான சாராய பாட்டில் சொல்கிறது..
📢📢📢
இன்று உன்னால் நான் காலி
நாளை என்னால் நீ காலி...!
👾👾👾

🙈🙉🙊டாஸ்மாக்"-


இதனை
👬👭👬👭 நான்கு குழுவுக்கு shere செய்ய வேண்டும்...

இப்படிக்கு
உங்களின் 🚶ஒருவன்
 ..........................................................................................................................................................

இந்த வார ஜும்ஆ குறிப்பு வழங்கியவர்கள் : மௌலவி நஸீர் மிஸ்பாஹி
மௌலவி ஹனீப் ஜமாலி , மௌலவி இஸ்மாயீல் ,மௌலவி முஹம்மது தாஜுத்தீன் காசிமி , மௌலவி அப்பாஸ் ரியாஜி , மௌலவி ஹாஜி , மௌலவி முஹம்மது ஜுபைர் , மௌலவி உமர் பாரூக் முனீரி,  மௌலவி

மேலதிகத் தகவலோடு தொகுத்தவர் : பீர் பைஜி 

2 comments:

Masha allah arputhamaana athikamaana thagavalhal JAZAKALLAH

Masha allah arputhamaana athikamaana thagavalhal JAZAKALLAH

Post a Comment