20 August 2015

மனித நேயம்





وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. (القرآن 59:9)
அல்லாஹ் கூறுகிறான்: ‘’தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர் ஆவார்’’ (அல்குர்ஆன் 59:9)
عن جرير بن عبد الله قال: قال رسول الله صلى الله عليه وسلم " لا يرحم الله من لا يرحم الناس. (رواه البخارى-7376)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். (அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: புகாரி-7376)

மனிதனிடத்தில் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமான பண்பு மனித நேயம். மனித நேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும்.
தனக்கு விரும்பும் நன்மைகளை பிறருக்கு விரும்புவதும்தான் விரும்பாததை பிறருக்கும் விரும்பாமல் இருப்பதும் மனித நேயமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாகக் கண்டு வருகிறோம்.

இறைவன் மனிதனுக்குப் பயன் படக்கூடிய உறுப்புகளை ஏற்படுத்தி வெறும் உடலாக மட்டும் அவனைப் படைக்கவில்லை. உலகம் இயங்க வேண்டும் என்பதற்காக உடலுடன் பல நல்ல குணங்களையும் தன்மைகளையும் சேர்த்தே உருவாக்கியுள்ளான்.

நன்மைகளும் தீமைகளும்:
மனித நேயம் மட்டும் மனிதனிடம் எடுபட்டுப் போயிருந்தால் என்றைக்கோ இந்த உலகம் அழிந்திருக்கும். இக்குணத்தை இறைவன் சிலரிடத்தில் இயற்கையாகவே அமைத்திருப்பதால் மனிதநேயம் அற்றவர்கள் செய்யும் கொடுமைகளின் போது, மனிதநேயம் உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்து அவர்கள் இந்த உலகில் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கிறார்கள். உலகத்தில் அனைவரிடத்திலும் மனிதநேயம் இல்லாமல் போனால் என்ன ஏற்படும் என்பதை சிறிது சிந்தித்துப் பாருங்கள்.

எல்லோரும் கொள்ளையர்களாகவும் கொலை செய்பவராகவும் இருந்தால் நாம் நிம்மதியாக இந்த உலகத்தில் உலாவர முடியுமா? மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இருக்கக்கூடிய காட்டுமிராண்டிகள் செய்யும் அக்கிரமங்களையே மக்களால் தாங்க முடியவில்லை. எல்லோரும் இவர்களைப் போன்று இருந்தால் என்ன ஏற்படும் என்பதைச் சொல்லவா வேண்டும்?
இஸ்லாமும் மனிதநேயமும்:
மனிதர்களுக்கு நாம் உதவி செய்வதை இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றும், மனிதனுக்கு நாம் இரக்கம் காட்டாவிட்டால் இறைவனை வெறுத்துத் தள்ளியதைப் போன்றும் இறைவன் எடுத்துக் கொள்கிறான். இதை உணராத மக்கள் செல்வங்களை உண்டிலில் போடுகிறார்கள். பிச்சைக்காரனாக இருந்தாலும் அவனிடத்திலும் மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது. ஏழைக்கு உதவுவது இறைவனுக்கு உதவுவதைப் போன்றது என்று இஸ்லாம் நமக்கு பின்வரும் செய்தியின் மூலம் உணர்த்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்-4661)

من سره أن ينجيه الله من كرب يوم القيامة فلينظر معسرا وليضع عنه » )رواه مسلم (

மறுமை நாளின் சிரமங்களிலிருந்து தன்னை அல்லாஹ் காப்பாற்ற வேண்டுமென விரும்புவர் இம்மையில் சிரமப்படுவோரின் சிரமத்தை நீக்கி உதவட்டும் (முஸ்லிம்)

பாதையில் துன்பம் தரக் கூடிய பெரிய கல்லோ அல்லது முள்ளோ அல்லது கண்ணாடிச் சில்லோ கிடந்தால் அதை நாம் அகற்ற வேண்டும். ஆனால் இவற்றை நம் கண்ணால் பார்த்தும் கூட அதைக் கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறோம்.

சிலர் அவற்றால் காயப்படுவார்கள். அதன் பின்பாவது அவர்களுக்குப் புத்தி வருமா என்றால் வராது. கல்லில் இடித்து விட்டு காலைத் தடவி விட்டுச் செல்வார்களே தவிர அதை அகற்ற முன்வர மாட்டார்கள்.

சிலர் புகை பிடித்து விட்டு நெருப்புக்கங்கை அணைக்காமல் அப்படியே தெருவில் போட்டு விடுகிறார்கள். செருப்பு போடாத சிறுவர்கள் அதை மிதித்து, துடிதுடித்துப் போகிறார்கள். எனவே இஸ்லாம் மனிதநேயத்தைக் கருதி, பாதையில் கிடக்கும் இடையூறு அளிக்கும் பொருட்களை அகற்றுவது ஈமானில் ஒரு பகுதி என்று கூறுகிறது. அல்லாஹ்வை நம்பியவர்களிடத்தில் அவசியம் இச்செயல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளாகும். அவற்றில் உயர்ந்தது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் கடைசி நிலை, பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும். அறிவிப்பவர்: (அபூஹுரைரா (ர லி) நூல்: முஸ்லிம்-51)

அழகிய முன்மாதிரி:
நம்முடைய உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித நேயத்தின் தந்தையாகத் திகழ்ந்து, நாம் அனைவரும் மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்கு அழகான முன்மாதிரியாக வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். அவர்களது வாழ்நாளில் நடந்த பின்வரும் சம்பவம் நம் மனதை நெகிழச் செய்கிறது.

(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத (அரை) நிர்வாணிகளாய் வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்க விட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

அவர்களுடைய ஏழ்மையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு வித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது விட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ''மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்'' எனும் (அல்குர்ஆன் 4:1) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும் அல்ஹஷ்ர் என்ற அத்தியாயத்திலுள்ள ''நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று தாம் எதை முற்படுத்தியுள்ளோம் என்பதை பார்த்துக் கொள்ளட்டும். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள்'' எனும் (அல்குர்ஆன் 59:18)வது வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.
அப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்) உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉ பேரீத்தம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் பை (நிறையப் பொருட்களைக்) கொண்டு வந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது. ஏன்? தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்து கொண்டு இருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் கண்டேன். (அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: முஸ்லிம்-1691)

இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களிடத்திலும் அவர்களுடைய தோழர்களிடத்திலும் இருந்த மனித நேயத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. வறுமையால் பீடிக்கப்பட்ட அந்த மக்களைப் பார்த்த உடன் பெருமானாரின் முகம் மாறி அவர்கள் தவித்ததும் பொருட்கள் குவிந்த பின்பே அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டதும் அவர்களிடத்தில் அளவில்லா மனிதநேயம் இருப்பதைக் காட்டுகிறது.

இன்றைக்கு எத்தனையோ நாடுகளில் வாழும் மக்கள் உணவுக்கு வழியில்லாமல் வாடிக் கொண்டு இருக்கிறார்கள். பசிக் கொடுமையினால் சாகவிருக்கும் ஒரு சிறுவனைத் திண்பதற்குக் கழுகு காத்திருந்த சம்பவம் கொடிய நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளத்தைக் கூட கரையச்செய்து விடும். செல்வாக்கில் உயர்ந்து நிற்கின்ற மேலை நாடுகள் தங்களுடைய தேவைக்குப்போக டன் கணக்கில் பாலையும் மாவையும் வீணாகக் கடலில் சென்று கொட்டுகிறார்கள். லாரி லாரியாக தக்காளிகளையும் திராட்சைகளையும் கொண்டு வந்து மகிழ்ச்சி என்ற பெயரில் எறிந்து விளையாடுகிறார்கள்.

உலகத்தில் கிடைக்கின்ற எல்லாப் பழங்களையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்து, அதில் குரங்குகளை விட்டு அவை அவற்றை நாசப்படுத்துவதைப் பார்த்து பூரிப்படைகிறார்கள். ஒரு பக்கம் உணவு இல்லாமல் மனித உயிரினம் வாட, ஆடம்பரப் பிசாசுகள் இப்படி வீண் விரயம் செய்கிறார்கள்.
உண்மையில் மனிதநேயம் இருந்தால் இது போன்று இவர்கள் செய்வார்களா? அரும்பாடு பட்டாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் இருப்பார்களா? நபி (ஸல்) அவர்கள் காட்டிய இந்த மனிதநேயத்தைப் போல் இவர்களிடமும் இருந்தால் இவர்கள் இப்படி உணவுப் பொருட்களை வீணாக்குவார்களா? உலகம் இதைத் தீவிரமாகக் கண்காணிக்கக் கடமைப் பட்டிருக்கிறது.

எதிரிகளிடத்தில் மனிதநேயம்:
பொதுவாக மனிதநேயம் என்பது இஸ்லாத்தை ஏற்றவர்களிடத்திலும் ஏற்காதவர்களிடத்திலும் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் நம்மை எதிர்க்காத, நமக்குத் துன்பம் தராத ஒருவரிடத்தில் தான் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். ஆனால் இஸ்லாம் பரம எதிரியிடத்தில் கூட மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகிறது. இது தான் இஸ்லாம் கூறும் மனிதநேயத்திற்கும் மற்றவர்கள் கூறும் மனித நேயத்திற்கும் உள்ள வித்தியாசம்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழும் பள்ளிவாசலில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த அவர்களது தோழர்கள், ''நிறுத்து, நிறுத்து'' என்று கூறி, தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து, ''அவர் சிறுநீர் கழிக்க இடையூறாக இருக்காதீர்கள். அவரை விட்டு விடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும்'' என்று கூறி விட்டு, ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்தக் கிராமவாசி சிறுநீர் கழித்த பின்பு நபியவர்கள் அவரை அழைத்து ''பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக் கூடாது. இங்கு இறைவனை நினைக்க வேண்டும். தொழ வேண்டும். குர்ஆன் ஓத வேண்டும்'' என்று கூறி உபதேசம் செய்தார்கள். (அறிவிப்பவளர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: முஸ்லிம்-429)

இன்றைக்கு யாராவது ஒரு கோவிலிலோ அல்லது சர்ச்சிலோ அல்லது பள்ளிவாசலிலோ சென்று அந்த கிராமவாசி செய்தது போல செய்தால் அவர் உயிருடன் வெளியே வருவதில் சந்தேகம்தான். நாம் புனிதமாக மதிக்கும் ஆலயத்தை ஒருவர் அசுத்தம் செய்யும் போது யாரும் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம். சஹாபாக்களும் கோபப்பட்டு அவரை அடிப்பதற்குச் சென்றார்கள். ஆனால் மனித நேயத்தின் மறுஉருவாய் திகழ்கின்ற நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைத் தடுத்தார்கள்.

நமது வீட்டை ஒருவர் அசுத்தம் செய்தால் அவரை நாம் அடிக்காமல் விடமாட்டோம். வீட்டை விடப் புனிதமான பள்ளிவாசலில் ஒருவர் சிறுநீர் கழித்த போதும் கூட அவர் துன்புற்று விடக்கூடாது என்று நபிகள் நாயகம் நினைத்திருக்கிறார்கள் என்றால் இந்த மனித நேயத்தை வர்ணிக்க உலகில் வார்த்தைகள் உண்டா?

நபி (ஸல்) அவர்கள் உண்மை மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்ன போது அவர்களுக்கு அதிகமதிகம் எதிரிகள் இருந்தார்கள். பெருமானாரைத் துன்புறுத்தியதில் யூதர்களுக்கும் பங்கு உண்டு. ''அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)'' என்று சொல்வதற்குப் பதிலாக, ''அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்)'' என்று நேருக்கு நேராக சபித்தவர்கள் அந்த யூதர்கள். நபி (ஸல்) அவர்கள் நம்பிக்கையானவர் என்று தெரிந்து கொண்டே அவர் நம் பொருளைப் பறித்து விடுவார் என்று கூறி மக்களிடத்தில் கேவலமாகப் பேசியவர்கள் அந்த யூதர்கள். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடத்தில் அன்போடு நடந்து கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்த யூத சிறுவன் ஒருவன் நோயுற்றான். எனவே அவனைப் பற்றி நலம் விசாரிப்பதற்காக அவனிடத்தில் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி-1356)

நபி (ஸல்) அவர்களை ஒரு பிரேதம் கடந்து சென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடத்தில், ''இது ஒரு யூதனின் பிரேதம் (இதற்காகவா நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள்?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அதுவும் ஒரு உயிர் தானே'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஹுனைஃப் மற்றும் கைஸ் பின் சஃத் (ரலி) நூல்: புகாரி-1313)

நபி (ஸல்) அவர்கள் யூதன், கிறித்தவன் என்று பாராமல் மனிதன் என்று பார்த்துள்ளார்கள். உயிரை உயிராக மதிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக இங்கு தெளிவு படுத்தியுள்ளார்கள். ஒரு துக்க கரமான காரியம் ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது நாம் அமர மாட்டோம். நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தாலும் மனிதநேயத்தைக் கடைப் பிடிப்பதில் படித்தவர்களுக்குக் கற்றுத் தரும் ஆசானாகத் திகழ்ந்துள்ளார்கள்.

போர்களத்தில் மனிதநேயம்:
போர் என்று வந்து விட்டால் நாட்டில் அனைவரும் நிம்மதியின்றி தவிப்பதைப் பார்க்கின்றோம். இலங்கையில் நடந்த போரால் அங்கிருந்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அகதிகளாக நம் நாட்டிற்கு வந்தார்கள். இதற்குக் காரணம் போர் நடக்கும் போது அங்கு பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று பாராமல் சரமாரியாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாகும். போரின் போது யாரும் யார் மீதும் இரக்கப்பட மாட்டார்கள். இப்படித் தான் இன்று கூட நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இஸ்லாம், போரில் சிறுவர்களையும் பெண்களையும் கொல்லக் கூடாது என்று கட்டளையிடுகிறது. இன்றைக்கு நாட்டுக்குள் தாக்குதல் தொடுக்கப்படுவதைப் போல் அன்றைக்கு தாக்குதல்கள் தொடுக்கப்படவில்லை. போரிடும் இரு சாராரும் வெட்ட வெளிக்கு வந்து போரிட்டார்கள். இங்கு சிறுவர்களும் பெண்களும் ஏன் வர வேண்டும்? என்ற கேள்வி நியாயமாக இருந்தாலும் அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக்கிடந்தாள். எனவே நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி-3015)

தீங்கு செய்தோருக்கும் மனிதநேயம்:
நிறைய இன்னல்களைக் கொடுத்த யூதர்களிடத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய மனிதநேயத்திற்கு அளவே இல்லை. தீமை செய்தோருக்கும் நன்மை செய் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியதை முழுமையாகக் கடைப் பிடித்தார்கள்.

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (அல்குர்ஆன் 41:34)

ஒரு யூதப் பெண்மனி நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தாள். நபி (ஸல்) அவர்களும் அதை உண்டு விட்டார்கள். இதையறிந்த சஹாபாக்கள் அப்பெண்மனியை நபியவர்களிடம் அழைத்து வந்து ''இவளை நாங்கள் கொன்று விடட்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறி விட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல்: புகாரி-2617)

அப்பெண்மனி வைத்த விஷத்தின் தாக்கம் நீண்ட நாட்கள் பெருமானாருக்குச் சிரமத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மாத்திரம் ஒரு கட்டளை போட்டிருந்தால் அப்பெண்ணை சஹாபாக்கள் கொன்றிருப்பார்கள். அவளைக் கொலை செய்தால் அதை யாரும் குற்றம் என்று கூறவும் மாட்டார்கள். என்றாலும் மனிதநேயம் அவர்களிடத்தில் மிகைத்திருந்ததால் தன்னைக் கொல்ல நினைத்தவளைக் கொலை செய்ய நபி (ஸல்) அவர்களின் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. இதே போன்று இன்னொரு சம்பவமும் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு போரை முடித்து விட்டுத் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். இளைப்பாறுவதற்காக ஒவ்வொருவரும் ஒரு மரத்தடியில் தங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் தனியாக சென்று ஒரு மரத்திற்கு அடியில் இளைப்பாறினார்கள்.
திடீரென்று ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காகத் தன் கையில் வாளை எடுத்துக் கொண்டு, ''முஹம்மதே! இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ் காப்பாற்றுவான்'' என்று கூறினார்கள்.
பின்பு அவர் கையில் இருந்த வாள் கீழே விழுந்தவுடன் நபியவர்கள் அந்த வாளை எடுத்துக் கொண்டு, ''இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்? வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், ''இல்லை! இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு எதிராக நான் போரிட மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் தண்டிக்காமல் விட்டு விட்டார்கள். அவர் தன்னுடைய தோழர்களிடத்தில் சென்று, ''மக்களிலேயே மிகவும் சிறந்த ஒருவரிடமிருந்து நான் வந்திருக்கிறேன்'' என்று கூறினார். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: அஹமத்-14401)

கொலை செய்ய வந்தவரைத் தண்டிக்காமல் நபி (ஸல்) அவர்கள் மன்னித்து விட்டது அவர்களின் பரந்த மனப்பான்மையையும் அவர்கள் எதிரிகளிடத்தில் காட்டிய மனித நேயத்தையும் காட்டுகிறது.

அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சப்தமிட்டு அனைத்துத் தோழர்களையும் வரவழைத்து, அவரை ஒருகை பார்த்திருக்கலாம். ஆனால் நபியவர்கள் அப்படிச் செய்யவில்லை. இஸ்லாத்தை அவர் ஏற்க மறுத்த போதிலும் அவரைத் தண்டிக்கவில்லை. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று கூறுபவர்களுக்கு இது சாட்டையடியாக அமைந்துள்ளது.

தன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்துத் தான் இஸ்லாம் போரிட்டதே தவிர, போரில் ஈடுபடாத அப்பாவிகளைத் தாக்குவதை இஸ்லாம் விரும்பவில்லை.

உலகத்தையே ஆட்டிப் படைக்கின்ற அமெரிக்கா, ஈராக் நாட்டின் எதிரிகளை நடத்திய விதத்தைப் பார்த்து உலகம் முழுவதிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. கொஞ்சம் கூட மனித உணர்வுகள் இல்லாமல் நாய்களை விட்டு வெறுமேனியில் அவர்களைக் கடிக்க விட்டது. இன்னும் மோசமான கொடுமைகளைச் செய்தது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அவர்களுடைய எதிரிகள் அனைவரும் அவர்கள் முன்னிலையில் நின்றார்கள். கருணை வடிவான நபி (ஸல்) அவர்கள் அவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கிவிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை வஹ்ஷீ என்ற கருப்புற நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ரலி) அவர்கள் கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மக்காவை அவர்கள் கைப்பற்றிய போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து ''நீ தான் வஹ்ஷீயா? ஹம்ஸாவைக் கொன்றவர் நீ தானா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார்.
வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஞாபகம் வந்ததால் அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள், ''தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில் காட்டாமல் இருக்க முடியுமா?'' என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார்கள். இதன் பின்பு வஹ்ஷீ இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். (அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அதீ நூல்: புகாரி-4072)

நியாயத் தீர்ப்பும் மனிதநேயமும்:
இன்றைக்கு நீதி என்பது அநீதியாக மாறிக் கொண்டிருக்கிறது. நீதி வழங்குவதாகக் கூறிக்கொண்டு தனக்குப் பிடித்தவருக்குச் சாதகமாகவும் பிடிக்காதவருக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்படுகின்றது. வெறுப்பும் பகைமையும் நீதம் செலுத்த விடாமல் தடுத்து விடுகிறது. ஆனால் இஸ்லாம் பகைவர்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் மனிதநேயத்தை கருத்தில் கொண்டு நீதம் செலுத்த வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

நபி (ஸல்) அவர்களை வெறுத்தவர்கள் கூட நபியவர்களிடத்தில் வந்து தீர்ப்புக் கேட்டார்கள். அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையே இதற்குக் காரணம். நபி (ஸல்) அவர்களும் யூதன், கிறிஸ்தவன், முஸ்லிம் என்று பார்க்காமல் மனித நேயத்துடன் நடந்து கொண்டார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சிறந்த சான்றாக உள்ளது.

யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டிய போது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர் ''மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக! (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ''நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக என்றா கூறுகிறாய்?'' என்று கேட்டார்.
அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ''அபுல்காசிம் அவர்களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்துள்ளீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?'' என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, ''நீ ஏன் இவருடைய முகத்தில் அறைந்தாய்?'' என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு ''அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி-3414)

யூதர் எடுத்து வைத்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு அந்த அன்சாரித் தோழரிடம், ஏன் அடித்தாய் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் பின்பு அவரைக் கண்டித்ததும் மாற்றார் களிடத்தில் பெருமானார் காட்டிய மனிதநேயத்தை எடுத்துரைக்கிறது.

அடிமைகளிடத்தில் மனிதநேயம்:
இன்றைக்கு அடிமை நிலை இல்லாவிட்டாலும் சிலர் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் வேலையாட்களை அடிமைகளைப் போன்று தான் நடத்துகிறார்கள். வேலையாட்களை அடித்தும் கெட்ட வார்த்தைகளால் அவர்களைத் திட்டியும் துன்பம் கொடுக்கிறார்கள். தற்போது இதைத் தட்டிக் கேட்பதற்குப் பிறருக்கு உரிமையுள்ளது.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அடிமைகள் ஆடு, மாடுகளைப் போன்று நடத்தப் பட்டார்கள். மார்க்கெட்டில் காய்கறிகள் விற்கப்படுவதைப் போன்று அடிமைகள் விற்கப்பட்டார்கள். நம்முடைய ஆட்டை நாம் அறுத்தால், அடித்தால் யாரேனும் கேள்வி கேட்பார்களா? இல்லை. அதுபோல் ஒருவரது அடிமையை அவர் அடித்தால் அவரை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. இப்படிப்பட்ட கொடூரமான காலத்தில் நபியாகத் தோன்றிய முஹம்மத் (ஸல்) அவர்கள், அடிமைகளும் மனிதர்கள் தான் என்பதை உலகிற்கு உணர்த்தினார்கள்.

அவர்களிடத்திலும் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுத் தந்தார்கள். அடிமைகளுக்குக் கொடுமைகள் இழைக்கப்படும் போதெல்லாம் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். இதைப் பின்வரும் செய்திகள் உறுதிபடுத்தும்.

நான் ஒருவரை (அவருடைய தாயைக் குறிப்பிட்டு) ஏசி விட்டேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ''இவரது தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?'' என்று கேட்டார்கள்.
பிறகு, ''உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். ஆகவே எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர் தன் சகோதரருக்குத் தான் உண்பதிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப்பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படியே அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப்பளுவை அவர்கள் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி-2545)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளனைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரு வாய்கள் கொடுக்கட்டும். ஏனெனில் அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டிருப்பார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி) நூல்: புகாரி-2557)

நாகரீகம் வளர்ந்து சமத்துவம் பேசப்படுகின்ற இந்தக் காலத்தில் கூட நபி (ஸல்) அவர்கள் சொல்லித் தந்த மனிதநேயம் கடைபிடிக்கப்படுவதில்லை. ஆனால் எஜமான் எதை உண்கிறாரோ, எதை உடுத்துகிறாரோ அதையே தன் அடிமைக்கு உண்ணக் கொடுக்கட்டும் உடுத்தக் கொடுக்கட்டும் என்று அன்றைக்கே நபி (ஸல்) அவர்கள் சொல் யிருக்கிறார்கள் என்றால் இதை விட பெரிய மனிதநேயம் யாரிடத்தில் இருக்க முடியும்?

ஆன்மீகத்தில் மனிதநேயம்:
இஸ்லாம் எல்லா நிலைகளிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடிக்கிறது. ஆன்மீகத்தில் கூட மனிதநேயத்துடன் நடந்து கொள்கிறது. இன்றைக்கு ஆண்மீகம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமான இறை வழிபாடுகள் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மொட்டைத் தலையில் தேங்காயை உடைப்பதை இறைவன் விரும்புகிறான் என்று நினைக்கின்றனர். மண்டை உடைந்து இரத்தம் பீறிட்டு வருவதைப் பார்த்தும் அர்ச்சகருக்கு இரக்கம் வரவில்லை.

கடவுளுக்காக வெறுமேனியில் சாட்டையைக் கொண்டு அடித்துக் கொள்கிறார்கள். நெருப்பில் குதித்து காலைப் புண்ணாக்கிக் கொள்கிறார்கள். கடவுளை நெருங்க வேண்டும் என்பதற்காகத் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் விரும்பவே விரும்பாது. ஆன்மீகத்தையும் மனிதநேயப் பார்வையுடன் பார்க்கிறது. எனவே தான் இதுபோன்ற வழிபாடுகளுக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை.

நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். எனவே அவரைப் பற்றி (மக்களிடத்தில்) விசாரித்தார்கள். மக்கள், ''அவர் அபூஇஸ்ராயீல் ஆவார். உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும் பேசாமல் இருப்பதாகவும் நோன்பு வைப்பதாகவும் அவர் நேர்ச்சை செய்துள்ளார்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அவரை பேசச் சொல்லுங்கள். அவர் நிழலில் வந்து அமரட்டும். நோன்பை (மட்டும்) பூர்த்தி செய்யட்டும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி-6704)

இந்தச் செய்தி ஆன்மீகம் என்ற பெயரில் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளக்கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாபெரும் மகானாக ஆக வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற ஆசைகள் அவனிடத்தில் இருக்கக் கூடாது என்று எண்ணுகிறார்கள்.

ஆனால் இஸ்லாம் மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட மார்க்கம் அல்ல என்பதால் அவசியம் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பின்வரும் சம்பவம் ஆன்மீகத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய மனித நேயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவராகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ''நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்: புகாரி-628)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதினால் தொழுகையை சுருக்கமாக முடித்து விடுகிறேன். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: புகாரி-707)

மக்களிடத்தில் மனிதநேயம்:
இத்தகைய அரும்பெரும் மார்க்கத்தைப் பெற்றும் கூட சில இஸ்லாமியப் பெயர் தாங்கிகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்களினால் இஸ்லாத்திற்குக் களங்கம் ஏற்பட்டு விடுகின்றது. இஸ்லாமியப் பெயர் தாங்கிகளான இவர்கள் மருத்துவ மனைகளிலும் மக்கள் கூடும் மார்க்கெட்டுகளிலும் ஈவு இரக்கமின்றி குண்டுகளை வைத்து விடுகின்றார்கள். இதைப் பார்ப்பவர்கள்,  இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்ற மார்க்கம் என்று தவறாக எண்ணி விடுகிறார்கள்.

ஒரு அயோக்கியன் செய்யும் குற்றத்திற்கு அவன்தான் பொறுப்பாளியே தவிர அவன் சார்ந்துள்ள மதமோ, இனமோ அல்ல. என்னருமை மாற்று மத அன்பர்களே! உங்களிடத்தில் நாங்கள் ஒன்றை கூறிக் கொள்கிறோம். இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைப் பார்த்து இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாதீர்கள். இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சிந்தியுங்கள். தீவிரவாதத்தை இஸ்லாம் கண்டிப்பதைப் போல் எந்த மதமும் கண்டிக்கவில்லை.

மனிதநேயம் இல்லாமல் ஒருவன் செயல்பட்டால் அவன் முஸ்லிமாக இருந்தாலும் இஸ்லாம் அவனை ஒருபோதும் அங்கீகரிக்காது. அவன் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் அப்பாவி மக்களைக் கொன்றதற்கு நிச்சயம் அவன் இறைவனிடத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

ஒரு உயிரை அநியாயமாகப் பறிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை. அப்படி அவன் பறித்தால் அவனுக்கு இறைவன் விடும் எச்சரிக்கையைப் பாருங்கள்.

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன் 5:32)
இஸ்லாம் ஒரு படி மேலே சென்று மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகத்திடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது. அவைகளிடத்தில் நன்முறையில் நடந்து கொண்டால் இறைவன் அதற்காகவும் சுவனம் என்ற நற்கூலியை நமக்குப் பரிசாகத் தருகின்றான்.

''ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதி ருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி ) நூல்: புகாரி 2363

அல்லாஹ்வை ஆச்சரியப்படுத்திய மனித நேயம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي مَجْهُودٌ فَأَرْسَلَ إِلَى بَعْضِ نِسَائِهِ فَقَالَتْ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا عِنْدِي إِلَّا مَاءٌ ثُمَّ أَرْسَلَ إِلَى أُخْرَى فَقَالَتْ مِثْلَ ذَلِكَ حَتَّى قُلْنَ كُلُّهُنَّ مِثْلَ ذَلِكَ لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا عِنْدِي إِلَّا مَاءٌ فَقَالَ مَنْ يُضِيفُ هَذَا اللَّيْلَةَ رَحِمَهُ اللَّهُ فَقَامَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ أَنَا يَا رَسُولَ اللَّهِ فَانْطَلَقَ بِهِ إِلَى رَحْلِهِ فَقَالَ لِامْرَأَتِهِ هَلْ عِنْدَكِ شَيْءٌ قَالَتْ لَا إِلَّا قُوتُ صِبْيَانِي قَالَ فَعَلِّلِيهِمْ بِشَيْءٍ فَإِذَا دَخَلَ ضَيْفُنَا فَأَطْفِئْ السِّرَاجَ وَأَرِيهِ أَنَّا نَأْكُلُ فَإِذَا أَهْوَى لِيَأْكُلَ فَقُومِي إِلَى السِّرَاجِ حَتَّى تُطْفِئِيهِ قَالَ فَقَعَدُوا وَأَكَلَ الضَّيْفُ فَلَمَّا أَصْبَحَ غَدَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ عَجِبَ اللَّهُ مِنْ صَنِيعِكُمَا بِضَيْفِكُمَا اللَّيْلَةَ - 3829

(قوله صلى الله عليه وسلم: ( عجب الله من صنيعكما بضيفكما الليلة ) قال القاضي : المراد بالعجب من الله رضاه ذلك)

மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ளாதவர்களை மார்க்கம் தீன்அற்றவர்கள் பொய்யான சமயவாதிகள் என குர் ஆன் கண்டிக்கிறது.

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ(1)فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ(2)وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ(3)فَوَيْلٌ لِلْمُصَلِّينَ(4)الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ(5)الَّذِينَ هُمْ يُرَاءُونَ(6)وَيَمْنَعُونَ الْمَاعُونَ(7)
இந்த அத்தியாயம் மிக அற்புதமாக சமய நம்பிக்கையின் இலக்கணங்களை கூறுகிறது.

ஸஹாபாக்களிடம் மனிதநேயம்
عن أبي هُرَيرة قال: أتى رجل رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، أصابني الجهدُ، فأرسل إلى نسائه فلم يجد عندهن شيئًا، فقال النبي صلى الله عليه وسلم: "ألا رجل يُضَيّفُ هذا الليلة، رحمه الله؟". فقام رجل من الأنصار فقال: أنا يا رسول الله. فذهب إلى أهله فقال لامرأته: ضَيفُ رسول الله صلى الله عليه وسلم لا تَدّخريه شيئًا. فقالت: والله ما عندي إلا قوتُ الصبية. قال: فإذا أراد الصبيةُ العَشَاء فنوّميهم وتعالى فأطفئي السراج ونَطوي بطوننا الليلة. ففعلَت، ثم غدا الرجل على رسول الله صلى الله عليه وسلم، فقال: "لقد عجب الله، عز وجل -أو: ضحك-من فلان وفلانة". وأنزل الله عز وجل: { وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ }


ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், “எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லைஎன்று பதிலளித்தனர்.


ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?”அல்லது இவருக்கு விருந்தளிப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான் (விருந்தளிக்கின்றேன்)என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.
அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்துஎன்று (தம் மனைவியிடம்) கூறினார். அதற்கு அவருடைய மனைவி, “நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லைஎன்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், “உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடுஎன்று கூறினார்.

அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து,விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார். பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர்.
காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான்அல்லதுவியப்படைந்தான்என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், “தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்எனும் (அல்குர்ஆன் 59:9) வசனத்தை அருளினான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி-3798)


அல்லாஹ்வை ஆச்சரியப்படவைத்த சிரிக்க வைத்த அந்ததம்பதிகள் அபூதல்ஹா (ரலி. உம்மு சுலைம்(ரலி) அவர்கள்தான் என்று தப்ஸீர் துர்ருல் மன்ஸூரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மரண நேரத்திலும் மனித நேயம்:
யர்முக் போரில் படுகாயமுற்று மரணத் தறுவாயில் தண்ணீர் தண்ணீர் என்று குரல் கொடுத்த தோழருக்கு தண்ணீருடன் நெருங்கியபோது மற்றொரு தோழருடைய குரல்கேட்டு அவருக்கு கொடுங்கள் என்று கூறி மரணத் தறுவாயில் கூட மற்றவரின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்த நபித்தோழர்கள்களின்சம்பவத்தைவும் பார்க்க முடிகிறது. இப்படி சகோதரத்துவத்தோடுவாழ்ந்த அவர்களிடமும் கருத்துவேற்றுமை இருக்கத்தான் செய்தது. ஆனால் அது மிகப்பெரும் பிரச்சனையாக ஆகவில்லை.

அதற்கு இரண்டு காரணத்தை சொல்லலாம்.
முதலாவதுகாரணம்: குர் ஆன்ஹதீஸ் அவர்களுக்கு நினைவுபடுத்தினால் கருத்துவேற்றுமையை மறந்து விடுவார்கள்.
இரண்டாவது காரணம்: அவர்களிடம் கருத்து வேற்றுமை உதட்டளவில்தான் இருந்தது, உள்ளத்தில் வேற்றுமையைவைக்கவில்லை.

மனித நேயத்தின் எதார்த்தம் இதோ!
இந்த பூமியின் இயற்கை முழுவதும் ஏதோ ஒரு அழகிய வகையில் இணைந்தே கிடக்கிறது. கால் நனைக்கும் கடலின் முதல் துளியையும் உலகின் மறுகோடியில் கிடக்கும் கடைசித் துளியையும் ஏதோ ஒரு ஈர இழை தான் இணைத்துக் கட்டுகிறது. உலகின் ஒரு துருவத்தையும், மறு துருவத்தையும் காற்றின் ஏதோ ஓர் கயிறு தான் இறுக்கிக் கட்டுகிறது. நம் தலைக்கு மேல் விரியும் வானமும் தேசங்களுக்கு மேல் கரம்கோத்தே கிடக்கிறது. பிரிந்தே இருந்தாலும், இணைந்தே இருக்கும் வித்தை கற்றிருக்கிறது இயற்கை. ஆனால் மனிதர்களோ இணைந்தே இருந்தாலும் மனதால் பிரிந்தே இருக்கிறார்கள்!

மனிதர்களும் பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும் வல்லமை பெற்றிருந்தால் வாழ்க்கை அர்த்தப்படும். அந்தப் பிணைப்பை நல்கும் ஒரே ஒரு ஆயுதம் அன்புதான்! ஒரு இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு, மற்ற இதயங்களுக்குள் சாரலடித்துச் சிரிக்கும் போது மனித வாழ்க்கை அழகாகிறது. ஆனால் அந்த ஊற்றை உள்ளுக்குள்ளேயே புதைத்து வைக்கும் போது சுயநலச் சுருக்குப் பைகளாய் மனித வாழ்க்கை சுருங்கிவிடுகிறது!

தன்னலச் சுவர்களை உடைத்துக் கடக்கும் மனித விரல்கள் மனித நேயத்தை அணிந்து கொள்கின்றன. அந்த மனித நேயம் தேவையான வாசல்களைத் தேடிச்சென்று உறவைப் பகிரும் உன்னத வேலையைச் செய்கிறது. நோயாளிகளின் படுக்கைகளின் அருகே ஆறுதல் கரங்களாய் மாறுகிறது. வறுமையின் வயிறுகளில் சோற்றுப் பருக்கைகளாய் உருமாறுகிறது.
பாரம் சுமக்கும் தொழிலாளியின் தோள்களாய் மாறுகிறது. தேவையென நீளும் கரங்களின் உள்ளங்கைகளில் பொருளாதார பரிசுகளாக மாறிப் போகிறது. தன்னலத் தடையுடைக்கும் நதிகள் அன்பின் அருவிகளாக அவதாரம் எடுக்கின்றன. மதங்கள் மனிதநேயத்தை தங்கள் அடித்தளமாய் அமைத்திருக்கின்றன. ஆனால் அவற்றின் மேல் மதங்களின் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பாசி போலப் படிந்து படிந்து உண்மையான அடிப்படையை உலகமே மறந்து கொண்டிருக்கிறது. சடங்குகளின் துகிலுரித்து உண்மையின் நிர்வாணத்தைக் கண்டுகொள்ளும் ஞானம் பலருக்கும் இருப்பதில்லை. அவர்கள் சாரலில் நனைந்து அதையே பெருமழையென புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாண்டுவதும் இல்லை, உண்மையைத் தீன்டுவதும் இல்லை. மதக் கலவரங்களின் வேர்கள் இத்தகைய போலித்தனங்களின் மேல் பற்றி படர்ந்திருக்கின்றன.

இதயத்தில் மனித நேயம் இருக்க வேண்டியது மானுடத்தின் கட்டாயத் தேவை. அதற்கு வேர்களை விசாரிக்கும் வலிமை வேண்டும். மரங்களின் இயல்புகளைப் பொறுத்தே அதன் கனிகளும் அமையும். மாமரத்தின் கிளைகளில் ஆப்பிள் பழங்கள் விளைவதில்லை. ஆனால் போலித்தனமான மனிதர்களோ பட்டுப் போன கிளைகளில் கூட பழங்களை ஒட்டவைத்து நடக்கிறார்கள். வெளிப்படையான சில செயல்களால் தங்களை புனிதர்களாய்க் காட்டும் சுய விளம்பரதாரர்கள் அவர்கள். அவர்கள் மனிதநேயம் உள்ளவர்கள் போல நடிக்கும் வித்தைக்காரர்கள். உண்மையான மனிதம் வேர்களில் நிலவும். அதன் கனிகள் அதற்கேற்ப விளையும். ஒட்டவைக்கும் பழங்கள் அங்கே இருப்பதில்லை. மொட்டவிழ்ந்த பழங்களே விளையும். கனிகளால் மரங்கள் அடையாளப்படும். கனிகளால் தோட்டங்கள் அர்த்தப்படும். போலித்தனமில்லா ஒரு பழத்தோட்டம் விழிகளில் விரியும். உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் அன்பு இத்தகையதே!
அது இயல்பிலேயே கனிகொடுக்கும் மரமாக செழித்து வளர்க்கிறது! மனிதநேயம், கர்வத்தைக் கழற்றி வைக்கும். நான் பெரியவன் எனும் சிந்தனைகளின் படிகளில் மனித நேயம் நடை பழகுவதில்லை. எனவே தான் ஏற்றத்தாழ்வுகளைச் சிந்திக்கும் மனங்கள் மனித நேயத்தை விட்டு வெகுதூரத்தில் கூடாரம் கட்டிக் குடியிருக்கின்றன. கர்வமற்ற மனது தான் மனிதனை மனிதனாய்ப் பார்க்கும். தூணிலும் துரும்பிலும் கடவுளைப் பார்ப்பதை விட, காணும் மனிதர்களில் இறைவனைப் பார்க்கும் ! அப்போது சக மனிதனை நேசிக்கவும், மதிக்கவும், அன்புடன் அரவணைக்கவும் அதற்கு சிக்கல் எழுவதேயில்லை. மனித நேயம் உலகெங்கும் இருக்க வேண்டிய மனித இயல்பு. அது மட்டும் வாய்த்துவிடின் மதங்களின் சண்டைகளோ, இனப் பாகுபாடுகளோ உலகில் உருவாவதில்லை. சண்டைகளின் வரவு, இறைவனை அறியாததன் விளைவு. மனித நேயம் இல்லாததன் செயல் வடிவமே வன்முறை!

உங்களிடம் மனித நேயம் இருக்கிறதாஒரு அவசர பரிசோதனை செய்து பாருங்கள். உங்கள் மேலதிகாரிக்கும் கொடுக்கும் மரியாதையையும் அன்பையும் உங்கள் உடன் பணியாளருக்குக் கொடுக்கிறீர்களா? உங்கள் நண்பருக்குக் கொடுக்கும் அன்பை உங்கள் சமையல் காரருக்குக் கொடுக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளைப் போலவே தெருவோர ஏழையின் அழுக்குக் குழந்தையை அரவணைக்கிறீர்களா ? மனித நேயத்தின் சிதைந்து போன சிதிலங்கள் உங்கள் விழிகளுக்கு முன்னால் புதிய விடைகளை எழுதும். இன்னும் கேள்விகள் எழலாம்.
சகமனிதனின் வெற்றி உங்களை மகிழவைக்கிறதா? ஆனந்தமாய் ஆடிப் பாட வைக்கிறதா? அவனுக்குக் கிடைக்கும் வசதிகளும், பெருமையும் உங்களை ஆனந்தமடையச் செய்கிறதா? இல்லை எரிச்சலின் உச்சியில் எறிகிறதா? அடுத்தவனின் தோல்வியில் நீங்கள் உடைந்து போய் அழுகிறீர்களா? இல்லை அவை வெறும் வேடிக்கைக் கதையாகி வெறுமனே செல்கிறதா? சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கேள்விகளின் விடைகளில் இருக்கிறது உங்கள் மனிதநேயத்தின் எல்லைகளும், ஆழங்களும்! உங்கள் விடைகளின் அடிப்படையில் உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கை மிகவும் அழகானது. இணைந்தே வாழ்வதற்காய் நமக்குக் கிடைத்திருப்பது தான் இந்த வாழ்க்கை. எனவே அன்பினால் உலகைத் தீண்டுவோம். நேசத்தால் உயிர்களைத் தொடுவோம். கோபத்தில் எல்லைகளையும், பொறாமையின் தடைகளையும் உடைத்தே எறிவோம். அன்பின்றி அமையாது உலகு! அதுவே அணையாத ஆன்மீக விளக்கு !

எனவே, இஸ்லாம் கூறுகின்ற இத்தகைய மனிதநேயத்தை உலக மக்கள் தெரிந்து உண்மையை உள்ளபடி அறிந்து, நேர்வழி பெற்று மனித நேயத்தோடு வாழ வல்ல இறைவன் அருள் புரிவானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!
குறிப்புகள் வழங்கியோர்: நஸீர் மிஸ்பாஹி, புதுகை முனீரி, சேக் ஆதம் தாவூதி, மற்றும் தொகுத்து வழங்கியவர் னீப் ஜமாலி.


0 comments:

Post a Comment