18 February 2016

கனவு ஓர் ஆய்வு


கனவு ஓர் ஆய்வு
கனவு பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الرُّؤْيَا الحَسَنَةُ، مِنَ الرَّجُلِ الصَّالِحِ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
6983. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.         ஸஹீஹ் புகாரி
கனவிற்கும் அர்த்தமுண்டு
எல்லோருக்குமே சகஜமாக கனவு வரத்தானே செய்கிறது என்று கனவை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கனவிற்கும் பலவிதமான அர்த்தங்கள் உண்டு. இஸ்லாத்தின் மிக முக்கிய அடையாளமான பாங்கு சொல்லும் முறை ஸஹாபாக்களுக்கு கனவின் மூலம்தான் அறிவிக்கப்பட்டது. பல முக்கிய நபர்கள் இஸ்லாத்தில் நுழைவதற்கும் கனவு காரணமாக அமைந்துள்ளது.
أَنَّهُ رَأَى فِي النَّوْمَ أَنَّهُ وَقَفَ بِهِ عَلَى شَفِيرِ النَّارِ كَأَنَّ أَبَاهُ يَدْفَعُهُ مِنْهَا، وَيَرَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آخِذٌ بِحِقْوَتِهِ لَا يَقَعُ، فَفَزِعَ مِنْ نَوْمِهِ، فَقَالَ: أَحْلِفُ بِاللَّهِ أَنَّ هَذِهِ لَرُؤْيَا حَقٌّ،
காலித் இப்னு ஸஈத் (ரலி)
ஹள்ரத் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹள்ரத் காலித் இப்னு ஸஈத் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் நுழைவதற்கு அவர்கள் கண்ட ஒரு கனவே காரணமாக அமைந்தது. அவர்கள் கண்ட கனவு இதுதான்... அவர் நரகத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார். அவரது தந்தை அவரை நரகில் தள்ள முயற்சிக்கிறார். அதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் நரகில் விழாதவாறு அவரின் இடுப்பை பிடித்துக் கொள்கிறார்கள்.
இதற்குப் பிறகு திடுக்கிட்டு விழித்த ஹள்ரத் காலித் இப்னு ஸஈத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த கனவு உண்மையானதுதான்என்று கூறிக் கொண்டு ஹள்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களை சந்தித்து நடந்ததைக் கூறினார்கள். அதற்கு உனக்கு நல்லதே நடக்கட்டுமாக! இதோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்துள்ளார்கள். அவர்களை நீ பின்பற்றி அவர்களுடன் புனித இஸ்லாத்தில் இணைந்து விடு! நீ நரகில் விழாமல் அவர்கள் உன்னை பாதுகாப்பார்கள். ஆனால் உனது தந்தையோ நரகில் விழுந்து விட்டார்என்று பதில் கூறினார்கள். அதன் பிறகு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.                         ( நூல் : முஸ்தத்ரக் ஹாகிம்)

இது போன்று சான்றுள்ள எத்தனையோ பல சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே கனவிற்கு முக்கியத்துவம் கொடுத்து கனவு கண்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கனவு என்பது என்ன...?
இன்றைய விஞ்ஞானம் கனவைப் பற்றி அது நம் நினைவுகள் மற்றும் சிந்தனைகளின் பிம்பங்கள் என்றும் நாம் தூங்கும் சமயம் நமது மூளை மிகக் குறைந்த அளவில் வேலை செய்யும் போது அதில் தோன்றும் சில படக்காட்சிகள் என்றும் பல விதமான கருத்துக்கள் கூறுகின்றது.
அல்குர்ஆன் தலைமை விரிவுரையாளர் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு தோழர் ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குர்ஆனின் 39:42 ஆவது வசனத்திற்கு கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்கள்.
قَالَ ابْنُ عَبَّاسٍ:" فِي ابْنِ آدَمَ نَفْسٌ وَرُوحٌ بَيْنَهُمَا مِثْلُ شُعَاعِ الشَّمْسِ، فَالنَّفْسُ الَّتِي بِهَا الْعَقْلُ وَالتَّمْيِيزُ، وَالرُّوحُ الَّتِي بِهَا النَّفَسُ وَالتَّحْرِيكُ، فَإِذَا نَامَ الْعَبْدُ قَبَضَ اللَّهُ نَفْسَهُ وَلَمْ يَقْبِضْ رُوحَهُ.
 ஒவ்வொரு மனிதனுக்கும் நஃப்ஸ் (ஆத்மா) -வும் ரூஹ் (உயிர்) - ம் உள்ளன. நஃப்ஸில் உணரும் தன்மையும் அறிவும் உள்ளன. ரூஹில் அசையும் தன்மையும் மூச்சு வாங்கும் தன்மையும் உள்ளன. மனிதன் தூங்கும் போது அல்லாஹ் நஃப்ஸை மட்டுமே கைப்பற்றுகிறான். ரூஹை கைப்பற்றுவதில்லை. ரூஹ் தனது அசையும் தன்மையால் அந்நேரத்தில் சுற்றித் திரிகிறது. அப்பொழுது அந்த ரூஹிற்கு மற்ற ரூஹ்களுடன் நடைபெறும் சம்பாஷனைகள் மற்றும் நிகழ்ச்சிகளே கனவுகளாகும்.        (நூல் : குர்துபி)
இவ்வாறு கனவு ஏன் வருகிறது என்பதற்கு பலவிதமான விளக்கங்கள் கூறப்படுகின்றன.
கனவின் வகைகள் மூன்று
1. நல்ல கனவு. நமக்கு நல்லது நடப்பதைப் போன்ற நிகழ்வுகள் மற்றும் நாம் விரும்பும் நிகழ்வுகளை கனவுகளாக காணுவது.
2. கெட்ட கனவு. நமக்கு கெட்டது நடப்பதைப் போன்ற நிகழ்வுகள் மற்றும் நாம் வெறுக்கும் நிகழ்வுகளை கனவுகளாக காணுவது.
3. குழப்பமான தெளிவில்லாத கனவுகள்.
கனவைப் பற்றிய ஹதீஸ்கள்
நல்ல கனவு கண்டால்
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ: أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا، فَإِنَّمَا هِيَ مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا وَلْيُحَدِّثْ بِهَا،
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூ ஸஈதினில் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உங்களில் எவரேனும் தனக்கு பிடித்தமானதை கனவில் கண்டால் நிச்சயமாக அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும். எனவே அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். மேலும் அதை அவர் யாரிடமேனும் கூறட்டும்என்றும் வேறு அறிவிப்பில் அவர் அந்த கனவை தன்னை விரும்பக் கூடிய, (தனக்கு நல்லதையே நாடக்கூடிய) அறிஞரான (இறையச்சமுடையவர்களில்) ஒருவரிடம் கூறட்டும்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.                            (நூல் : புகாரி)
கெட்ட கனவு கண்டால்

عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الرُّؤْيَا الصَّالِحَةُ مِنَ اللَّهِ، وَالحُلْمُ مِنَ الشَّيْطَانِ، فَمَنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلْيَنْفِثْ عَنْ شِمَالِهِ ثَلاَثًا وَلْيَتَعَوَّذْ مِنَ الشَّيْطَانِ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ وَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَرَاءَى بِي»

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூ கதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தான் புறத்திலிருந்து வருவதாகும். எனவே உங்களில் ஒருவர் தனக்கு பிடிக்காத கெட்ட கனவு கண்டால் அவர் தனது இடது புறமாக (எச்சில் வராதவாறு) மூன்று முறை துப்பிக் கொள்ளட்டும். மேலும் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும். (அப்படி செய்தால்) அந்த கனவால் அவருக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாது.மேலும் ஷைத்தான் என் உருவத்தில் காட்சி தரமாட்டான்.       ( நூல் : புகாரி)
படுக்கும் முறையை மாற்றுதல்
عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا رَأَى أَحَدُكُمُ الرُّؤْيَا يَكْرَهُهَا، فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ ثَلَاثًا وَلْيَسْتَعِذْ بِاللهِ مِنَ الشَّيْطَانِ ثَلَاثًا، وَلْيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كَانَ عَلَيْهِ»
3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். கெட்ட கனவு கண்டவர் தான் படுத்திருக்கும் முறையை மாற்றிக் கொள்ளட்டும்’      நூல் : முஸ்லிம்                         
யாரிடமும் சொல்ல வேண்டாம்
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ: أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا، فَإِنَّمَا هِيَ مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا وَلْيُحَدِّثْ بِهَا، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرْهَا لِأَحَدٍ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ»
4. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். கெட்ட கனவு கண்டவர் அதை யாரிடமும் கூற வேண்டாம். அவர் எழுந்து தொழுது கொள்ளட்டும்.’                    (நூல் : திர்மிதி)

மேற்கூறப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் செய்ய வேண்டியதை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1. நல்ல கனவு கண்டால்......
நல்ல கனவு கண்டால் மூன்று விஷயங்கள் செய்ய வேண்டும்.
1. இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.
2.. அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.
3. நமக்கு நன்மையை விரும்பும் நல்ல அமல்கள் செய்யும் சிறந்த அறிஞர் ஒருவரிடம் அதைக் கூற வேண்டும்.
2. கெட்ட கனவு கண்டால்......
கெட்ட கனவு கண்டால் எட்டு விஷயங்கள் செய்ய வேண்டும்.
1. இந்த கனவின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும்.
2. ஷைத்தனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும்.
3. நமது இடது புறமாக எச்சில் வராதவாறு மூன்று முறை துப்ப வேண்டும்.
4. தான் படுத்திருக்கும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
5. ஷைத்தானின் தீண்டுதல் ஏற்படாமல் இருக்க ஆயத்துல் குர்ஸீ ஓதிக்கொள்ள வேண்டும்.
6. இந்த கனவால் நமக்கு எந்த தீங்கும் வராது என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.
7. (வேறொரு அறிவிப்பின் படி) எழுந்து 2ரக்அத் தொழ வேண்டும்.
8. முக்கியமாக இந்த கனவைப் பற்றி யாரிடமும் பிரஸ்தாபிக்கக் கூடாது.
கெட்ட கனவு கண்டு இடையில் எழுந்தால் இந்த அனைத்து விஷயங் களையும் செய்ய வேண்டும். பலருக்கு காலையில் எழுந்து சில மணி நேரங்கள் கழித்த பிறகே கனவுகள் ஞாபகத்திற்கு வரும். அப்பொழுதும் அவர்கள் மேற்கூறப் பட்டதில் 4ஆவது செயலைத் தவிர மற்ற விஷயங்களை செய்து கொள்ள வேண்டும்.
யாரிடமும் கூறக்கூடாது
நம்மில் பலர் தாம் காணும் கெட்ட கனவுகளை மற்றவர்களிடம் கூறும் வழமை கொண்டுள்ளனர். நமக்கு எவ்வளவு நெருக்கமான இரத்த பந்த உறவினராக இருந்தாலும் கெட்ட கனவை யாரிடமும் கூற வேண்டாம் என்று இஸ்லாம் எச்சரிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஹள்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூ ரஜீன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
عَنْ أَبِي رَزِينٍ العُقَيْلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ أَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يَتَحَدَّثْ بِهَا، فَإِذَا تَحَدَّثَ بِهَا سَقَطَتْ»
 கனவு என்பது அதற்கு விளக்கம் கூறப்படாத வரை ஒரு பறவையின் காலில் கட்டப்பட்டதைப் போன்றிருக்கிறது. (அதாவது உறுதியாக தறிபடாததாக உள்ளது). யாரேனும் விளக்கம் கூறினால் அது நிகழ்ந்துவிடும்.                                                                   (நூல் : திர்மிதி)
எனவே அவர்கள் தங்களின் அறிவிற்குட்பட்டு ஏதேனும் தவறான விளக்கம் கூறினால் அது அப்படியே நடந்து விட வாய்ப்புள்ளதால் கெட்ட கனவை நாம் யாரிடமும் கூறக் கூடாது. மேலும் மேற்கூறப்பட்டபடி நாம் நடந்து கொண்டால் அந்த கனவையே நினைத்து பயப்படவும் தேவையில்லை.
3. குழப்பமான தெளிவில்லாத கனவு
நாம் என்ன கனவு கண்டோம் என்பதே தெரியாத குழப்பமான கனவுகள். இதை நாம் பொருட்படுத்தாமல் அப்படியே விட்டு விட வேண்டும்.
கனவிற்கு விளக்கம்
ஹள்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களிடம் நீங்கள் யாரேனும் கனவு கண்டீர்களா?என்று கேட்டு அதற்கு விளக்கம் கூறுபவர்களாக இருந்தார்கள். ஹள்ரத் யூஸுஃப் (அலை) அவர்கள் கனவிற்கு விளக்கம் கூறிய நிகழ்ச்சிகள் குர்ஆனிலும் இடம்பெற்றுள்ளன. இதனடிப்படையில் கனவிற்கு விளக்கங்கள் உண்டு. ஆனால் விளக்கம் கூறுவதற்கு அதைப் பற்றிய ஆழ்ந்த கல்வி ஞானமும் மாசற்ற இறையச்சமும் அதிகம் தேவை. எனவேதான் இன்று கனவிற்கு சரியான விளக்கம் கூறக்கூடியவர்கள் யாருமில்லை என்றே கூறலாம். கனவின் விளக்கங்கள் என்று கூறப்பட்டிருப்பதெல்லாம் வெறும் அனுமானம்தானே தவிர அதுதான் உண்மையான விளக்கம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.
நம்மிடம் ஒருவர் கனவைக் கூறினால்....
ஹள்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக  ஹள்ரத் அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். யாரிடம் கனவைக் கூறப்படுகிறதோ அதற்கு அவர் நீ நல்லதையே பார்த்தாய். நல்லதே நடக்கட்டும் என்று கூறட்டும்.       (நூல் : அமலுல் யவ்மி வல்லைலா)
எனவே நாம் சுயமாக அதற்கு எந்த விளக்கமும் கூறாமல் நீர் நல்லதையே பார்த்தீர். நல்லதே நடக்கட்டும். அல்லாஹ் அதை உனக்கு நன்மையாக ஆக்கட்டும் என்று அழகான வார்த்தைகளை கூறிக் கொள்ள வேண்டும்.
கனவு கண்டதாக பொய் கூறுவது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். யார் கனவை பொய்யாக கூறுவாரோ கியாமத் நாளில் அல்லாஹு தஆலா இரண்டு கோதுமைகளை அவரிடம் கொடுத்து (இரண்டு கயிறுகளுக்கு மத்தியில் முடிச்சு போடுவதைப் போன்று) ஒரு கோதுமையை மற்றொன்றில் முடிச்சு போடச் சொல்லி நிர்ப்பந்திப்பான்.       (நூல் : இப்னு ஹிப்பான்)
இல்லாத ஒரு விஷயத்தை பொய்யாக கூறியதால் செய்ய முடியாத விஷயத்தை செய்யச் சொல்லி தொடர்ந்து தண்டிக்கப்படுவான். எனவே நான் இன்ன கனவு கண்டேன் என்று ஒரு கனவை பொய்யாகக் கூறுவதோ அல்லது கண்ட கனவை கூறும்போது நடுவில் இல்லாததை சேர்த்துக் கூறுவதோ மிகவும் கண்டிக் கத்தக்கதாகும்.
பகல் கனவு
பகல் கனவு பலிக்காது ; இரவு கனவுதான் பலிக்கும் என்று சிலர் கூறுவது சரியல்ல. நாம் எந்நேரத்தில் தூங்கினாலும் தூக்கத்தில் நாம் காணுவது கனவாகும்.  அதை பகல் கனவு - இரவு கனவு என்று நாம் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. அனைத்து கனவுகளுக்கும் மேற்கூறிய சட்டங்கள்படி தான் செயல்பட வேண்டும்.

ஆனாலும் ஹள்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக  ஹள்ரத் அபூ ஸஈதினில் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் கீழ்காணும் ஹதீஸ் குறிப்பிடத்தக்கது
عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَصْدَقُ الرُّؤْيَا بِالأَسْحَارِ
. கனவுகளில் மிக உண்மையானது ஸஹர் நேரங்களில் காணப்படும் கனவுகளாகும்.’       (நூல் : திர்மிதி)
மேலும் மிக அதிக தகவல்களுக்கு கீழ் காணும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

குறிப்பு வழங்கிய உலமாக்கள்:
மௌலானா: நஸீர் மிஸ்பாஹி
            முஹம்மது தாஜுதீன்
            ஷாகுல் ஹமீது
            முஹம்மது அப்துல்லாஹ்

கோர்வையாளர் : பீர் முஹம்மது பைஜி 

0 comments:

Post a Comment