17 March 2016

"மறுமையின் பத்து அடையாளங்கள்" -1

"மறுமையின்  பத்து அடையாளங்கள்" -1

உலகில் மறுமை பற்றிய பய உணர்வு இல்லாமல் வாழும் உயிரினம் என்றால் அது மனித மற்றும் ஜின் இனமாகத் தான் இருக்கும்.
إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا (6) وَنَرَاهُ قَرِيبًا         
அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.                                       (திருக்குர்ஆன் 70:6,7)


يَسْأَلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ  قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ اللَّهِ  وَمَا يُدْرِيكَ لَعَلَّ السَّاعَةَ تَكُونُ قَرِيبًا

(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்: அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறதுஎன்று நீர் கூறுவீராக; அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்து விடலாம்.
(அல்குர்ஆன் : 33:63)

அந்த நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டாலும் சீக்கிரமே அந்த நாள் வந்து விடும் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது.

சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏக இறைவனை) மறுப்பவன் கூறுவான்.
يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا

மேலும் கியாமத் குறித்து விரிவாக காண : 54:1, 42:17,  21:97, 21: 1,  17:51,   7:155,  79:42-46,  12:107,
மறைத்து வைத்த மர்மம் என்ன?

அந்த நாள் நிச்சயம் வரத் தான் போகிறது எனும் போது அந்த நாளை இறைவன் தெளிவாக அறிவித்து விடலாமே! ஏன் அறிவிக்க மறுக்கிறான்? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.
அந்த நாளை இரகசியமாக வைத்திருப்பதில் உலகுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரையும் சரியான முறையில் பரீட்சிக்க இது அவசியமானதாக இருக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக மரணத்தைத் தழுவப் போகிறான். ஆயினும் எந்த நாளில், எந்த மாதத்தில், எந்த நேரத்தில் மரணிக்கப் போகிறோம் என்பதை எவருமே அறிய முடியாது.
மரணம் எப்போது வரும் என்பது தெரியாததால் தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதனாக வாழ்ந்து வருகிறான். தனக்கு மரணம் வரும் நேரத்தை ஒருவன் முன்கூட்டியே அறிந்து விட்டால் எல்லாவிதமான அக்கிரமங்களையும் துணிந்து செய்வான். மரணத்திற்குச் சற்று முன்பாக பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்வோம் என்று எண்ணி விடுவான்.

நல்லவனையும், கெட்டவனையும் சரியான முறையில் பிரித்தறிய இயலாமல் போய்விடும். எல்லா மனிதனும் மரணத்திற்கு முதல் நாள் வரை மகாக் கெட்டவனாக வாழ்ந்து விட்டு ஒரு நாள் மட்டும் எல்லோருக்கும் நல்லவனாக வாழ்ந்து விடுவான். நல்லவனையும்,கெட்டவனையும் பிரித்தறிய இந்த ஏற்பாடு அவசியம் என்பது போலவே மறுமை நாளைப் பற்றி மறைத்து வைப்பதும் அவசியமே.

நாம் வாழுகின்ற போதே அந்த நாள் வந்து விடுமோ என்ற அச்சம் தான் சிலரையாவது நல்லவர்களாக வாழச் செய்கின்றது. செய்கின்ற அக்கிரமத்தை எல்லாம் செய்து விட்டுக் கடைசி நேரத்தில் மட்டும் நல்லவனாக ஆகிவிடக் கூடாது என்பதற்கே அந்நாள் எது என்பதை இறைவன் இரகசியமாக வைத்திருக் கின்றான். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் 
அறியமுடியும்.

அந்த நேரம் வரக்கூடியதே. ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். அதை நம்பாது, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!
(திருக்குர்ஆன் 20:15,16)

ஒவ்வொருவரும் அவரவர் செயலுக்கேற்ப கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே அதை இரகசியமாக வைத்திருக்கிறான்.
இதன் காரணமாகவே அந்த நாள் எதுவென்று அவன் அறிவிக்கவில்லை.

மறுமை நாளுக்கு பல அடையாளங்கள்        அவற்றில் சில:
قَالَ: «مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تَلِدَ الأَمَةُ رَبَّهَا»
  ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பது. அதாவது தாய் மகளின் தயவில் வாழும் அவல நிலை ஏற்படுவது.

பெற்ற தாயைக் கவனிக்கக் கடமைப்பட்ட புதல்வர்கள் தாயைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து, மகளின் தயவில் வாழும் நிலை ஏற்படும் இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று. (புகாரி)

பின் தங்கியவர்கள் உயந்த நிலையை அடைதல்
وَأَنْ تَرَى الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ رِعَاءَ الشَّاءِ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ
ஆடுகள் மேய்க்கும் ஏழைகள், நிர்வாணமாகத் திரிவோர், செருப்பணியாதவர்கள் மிக உயர்ந்த மாளிகைகளை எழுப்புவதும், மறுமை நாளின் அடையாளங்களாகும' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள். (குடிசைகள் கோபுரங்களாகும்)                                 (முஸ்லிம்)

விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
ஒளிவு மறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த விபச்சாரம் இன்று வெளிப்படையாக பகிரங்கமாக நடக்கின்றது.
அரசாங்கமே சிவப்பு விளக்குப் பகுதியை ஏற்படுத்துவதும், அன்னியப் பெண்களுடன் உறவு கொள்ளும் போது ஆணுறை பயன்படுத்துங்கள்' என்று பண்பாடு மிக்க இந்தியா போன்ற நாடுகளே செய்யும் விளம்பரமும் விபச்சாரம் எந்த அளவுக்கு பெருகிப்போயுள்ளது என்பதை உணர்த்துகிறது.
இந்தத் தீமைக்கு எதிராகப் போராடக் கடமைப்பட்ட பல அரபு நாடுகளில் கூட இந்தத் தீமை தலை விரித்தாடும் போது அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது.
மக்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்ட அரசுகளே மதுபான விற்பனை செய்யத் துவங்கி விட்டன. நாகரீகமான பெயர்களில் அறிமுகப்படுத்தப்படும் உயர் ரக அன்னிய மதுவுக்கு மக்கள் அடிமைப்பட்டு வருவதும் மறுக்க முடியாத உண்மை.
مِنْ أَشْرَاطِ السَّاعَةِ، أَنْ يَقِلَّ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَيَظْهَرَ الزِّنَا،
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் (புகாரி)

கொலைகள் பெருகுதல்
மனிதனை மனிதன் கொன்று குவிப்பது தொன்று தொட்டு நடந்து வருவது தான். ஆயினும் இன்றைய நவீன யுகத்தில் மிகப் பெரும் அளவுக்கு கொலைகள் பெருகிவிட்டதைக் காண்கிறோம்.
அற்பமான காரணங்களுக்காகவும், கூலிக்காகவும் கொலைகள் நடக்கின்றன. நவீன ஆயுதங்கள் காரணமாக கொலைகள் எளிதாகி விட்டன. சொந்த பந்தங்களுக்கிடையிலும்,கணவன் மனைவிக்கிடையிலும் கூட கொலைகள் அதிகரித்துள்ளன.
சட்டத்தின் காவலர்களும் கூட கொலை செய்கின்றனர். போர்கள் மூலமும் கொல்லப்படுவோர் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْكَذِبُ، وَتَتَقَارَبَ الْأَسْوَاقُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَيَكْثُرَ الْهَرْجُ قِيلَ: وَمَا الْهَرْجُ؟ قَالَ: «الْقَتْلُ»
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம்   (அஹ்மது)

தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவதும், அப்பொறுப்புகளில்  அவர்கள் நாணயமின்றி நடந்து கொள்வதும் அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டது என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாகும்.
قَالَ: فَإِذَا ضُيِّعَتِ الأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ قَالَ: كَيْفَ إِضَاعَتُهَا؟ قَالَ: إِذَا وُسِّدَ الأَمْرُ
إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ
அமானிதம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று விடையளித்தார்கள்..
நூல் : புகாரி

பாலை வனம் சோலை வனமாகும்

இன்றைய அரபுகள் அடைந்துள்ள பொருளாதார உயர் நிலை 200 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்கக் கூட இயலாததாகும். அவர்கள் வழங்கும் ஸகாத்தைப் பெறக் கூட அங்கே மக்களில்லை. ஸகாத்தை வழங்குவதற்காக ஏழை நாடுகளை அவர்கள் தேடிச் செல்லும் நிலையையும் நாம் காண்கிறோம்.

எதற்கும் உதவாத பாலை நிலம்' என்று உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தில் சோலைகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மாறுதலும் கூட அந்த நாள் நெருங்கி விட்டது என்பதற்கான அடையாளமே.
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ، حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ، فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لَا أَرَبَ لِي

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம்

காலம் சுருங்குதல்


 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ فَتَكُونُ السَّنَةُ كَالشَّهْرِ، وَالشَّهْرُ كَالْجُمُعَةِ، وَتَكُونُ الْجُمُعَةُ كَالْيَوْمِ، وَيَكُونُ الْيَوْمُ كَالسَّاعَةِ، وَتَكُونُ السَّاعَةُ كَالضَّرَمَةِ بِالنَّارِ

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒருவிநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
நூல் : திர்மிதீ

நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்

சமீப காலமாக உலகில் பூகம்பங்கள் மிகவும் அதிகமாகியுள் ளன. இதனால் இலட்சக் கணக்கான மக்கள் மாண்டு போகின்றனர்.

இத்தகைய பூகம்பங்கள் ஆண்டுக்கு இரண்டு தடவைக்கு குறையாமல் நடப்பதை நாம் காண்கின்றோம்.


 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ۔۔۔  ( புகாரி )

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.


பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது

தூய எண்ணத்துடன் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் இன்று பெருமையை வெளிப்படுத்தும் அடையாளமாக மாறி வருவதைக் காண்கிறோம்.

அந்த ஊர் பள்ளிவாசலை விட நம் ஊர் பள்ளிவாசல் மட்டமா என்ற எண்ணத்தில் போட்டிக்காக பணத்தை வாரியிறைத்து ஆடம்பரமாக பள்ளிகள் கட்டப்படுகின்றன.

                            
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

 (,இப்னுமாஜா)

நெருக்கமான கடை வீதிகள்

அன்றைய காலத்தில் கடை வீதிகள் பெரிய அளவில் கிடையாது. குறிப்பிட்ட நாட்களில் கூடும் சந்தைகளில் தான் மக்கள் பொருட்களை வாங்கியாக வேண்டும்.

ஆனால் இன்று கண்ட இடத்திலெல்லாம் கடைகளைக் காண்கிறோம்.

 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْكَذِبُ، وَيَتَقَارَبَ الْأَسْوَاقُ

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
நூல்: அஹ்மத்

பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

ஆண்களும், பெண்களும் ஏறக்குறைய சம அளவில் தான் இருந்து வந்தனர். அவர்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் இருக்கவில்லை.

ஆனால் இன்று பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

பெண் சிசுக் கொலை மூலம் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை யைக் குறைக்க கொடியவர் சிலர் முயற்சி செய்தும் கூட ஆண்களை விட பெண்கள் தாம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர்.

وَتَكْثُرَ النِّسَاءُ، وَيَقِلَّ الرِّجَالُ، حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً القَيِّمُ الوَاحِدُ "

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும்
நூல்: புகாரி

ஆடை அணிந்தும் நிர்வாணம்

பெண்களின் ஆடைகளில் இன்று பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆண்களை விட கவர்ச்சி அதிகம் உள்ள பெண்கள் ஆண்கள் அணிவதை விட குறைந்த அளவு மறைக்கும் ஆடைகளை விரும்பி அணிகின்றனர்.

அவர்கள் பெயரளவுக்குத் தான் ஆடை அணிந்துள்ளனர். உண்மையில் நிர்வாணமாகத் தான் உள்ளனர்.

முட்டுக்கால்களுக்குக் கீழே உள்ள பகுதியை வெளிப்படுத்தும் ஆடையை ஆண்கள் கூட அணிவதில்லை. ஆனால் பெண்கள் கூச்சமின்றி இத்தகைய ஆடைகளை அணிகின்றனர்.

இடுப்புப் பகுதியும், முதுகுப் பகுதியும் தெரியும் வகையில் ஆண்கள் கூட ஆடை அணிவதில்லை. ஆனால் பெண்கள் கொஞ் சமும் உறுத்தலின்றி இது போன்ற ஆடைகளை அணிகின்றனர்.

وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளித்து ,தானும் சாய்ந்து பிறரையும் சாய்க்கக்கூடிய பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள். (முஸ்லிம்)

நாம் வாழும் இந்தக் காலத்தில் அந்தக் கொடுமைகளை பார்த்து தான் வருகிறோம். ஆடை அணிந்திருக்கிறார்கள். ஆனால் ஆடையா என்ற ஐயப்பாடு நம்மில் நிறைய நபர்களுக்கு இருக்கிறது. அடுத்து நாயகம் (ஸல்) அவர்கள் கியாமத்தின்  இன்ன பிற அடையாளங்களை கூறுகிறார்கள்.

உயிரற்ற பொருட்கள் பேசுவது

பறவைகள் மற்றும் விலங்கினங்களை ஆய்வு செய்து அவை தமக்கிடையே பேசிக் கொள்வதை மனிதனும் விளங்கிக் கொள்ளக் கூடிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

செருப்புகளுக்கு வாராகப் பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று பேசுவதை நாம் காண்கிறோம். ஒளி நாடாக்களிலும் குறுந்தகடுகளிலும் இது போன்ற பொருட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ، وَيُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ، وَشِرَاكُ نَعْلِهِ، وَيُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ بَعْدَهُ


விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது
நூல்: அஹ்மத்

சாவதற்கு ஆசைப்படுதல்

அன்றைய சமுதாயத்தினர் எத்தகைய பிரச்சினைகளையும் துணிச்சலுடன் கையாண்டார்கள். ஆனால் ஆடல், பாடல், சினிமா, நாடகம் போன்றவற்றின் தாக்கத்தினால் மனிதர்களின் மனோ வலிமை குன்றி விட்டது. எந்தப் பிரச்சினையையும் அவர்களால் எதிர் கொள்ள முடிவதில்லை.

செத்து விடுவது தான் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று எண்ணுகின்றனர். இதன் காரணமாகவே அதிகமான தற்கொலைகள் நடக்கின்றன.

 لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ: يَا لَيْتَنِي مَكَانَهُ "
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது (புகாரி)

இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி நபி, கடைசி ரஸுல் என்பதை நாம் அறிவோம். இதற்கு ஏராளமான வசனங்களும், நபிமொழிகளும் சான்றுகளாகவுள்ளன.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் பல்வேறு காலகட்டங்களில் தம்மையும் இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்ட பொய்யர் சிலர் தோன்றினார்கள்.

وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ، قَرِيبًا مِنْ ثَلاَثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது ( புகாரி )

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் யமாமா'வில் முஸைலமா என்பவன், யமன் நாட்டில் அல் அஸ்வத் என்பவன்.

ஆபூபக்ர் (ரலி) ஆட்சியில் தலீஹா என்பவன் ஸஜாஹ் என்ற பெண், பின்னர் முக்தார் என்பவன், அதன் பின்னர் அல்ஹாரிஸ் என்பவன், நமது காலத்தில் மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் என்று தோன்றியுள்ளனர். இவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று பொய்யாக அறிவித்துக் கொண்டனர்.

யூதர்களுடன் மாபெரும் யுத்தம்

 لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا اليَهُودَ، حَتَّى يَقُولَ الحَجَرُ وَرَاءَهُ اليَهُودِيُّ: يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும் .( புகாரி )

கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يُخَرِّبُ الكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الحَبَشَةِ»
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்' ( புகாரி)

 இது போன்று பல  அடையாளங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாம் சிறிய அடையாளங்கள். மறுமையின் மாபெரும் பத்து அடையாளங்கள் என அறிவித்த, எச்சரித்த  அடையாளங்கள் மிக முக்கியமானவை.

பத்து அடையாளங்கள்
عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ، قَالَ: اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ، فَقَالَ: «مَا تَذَاكَرُونَ؟» قَالُوا: نَذْكُرُ السَّاعَةَ، قَالَ: " إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ - فَذَكَرَ - الدُّخَانَ، وَالدَّجَّالَ، وَالدَّابَّةَ، وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيَأَجُوجَ وَمَأْجُوجَ، وَثَلَاثَةَ خُسُوفٍ: خَسْفٌ بِالْمَشْرِقِ، وَخَسْفٌ بِالْمَغْرِبِ، وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ، وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنَ الْيَمَنِ، تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ "

அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நாங்கள் (நபி (ஸல்) அவர்களது அறைக்குக் கீழே) பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, ”எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், ”யுகமுடிவு நாளைப் பற்றி (பேசிக் கொண்டிருக்கிறோம்)என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ”நீங்கள் (பெரிய) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுகமுடிவு நாள் ஏற்படவே செய்யாதுஎன்று கூறிவிட்டு, அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள்: 1. புகை, 2. தஜ்ஜால், 3. (பேசும்) பிராணி, 4. மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது, 5. மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் இறங்குதல், 6. யஃஜூஜ், மஃஜூஜ், 7.8.9. மூன்று நில நடுக்கங்கள். ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்திலும், 10. இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக்கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்றுகூட்டும். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்)
1) புகை மூட்டம்:  
யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் வானத்திலிருந்து புகைப்படலம் இறங்கும். அது சாதாரண புகையாக இருக்காது. மாறாகக் கடுமையான வேதனையளிப்பதாக அந்தப் புகை அமைந்திருக்கும் என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் அறிவிக்கின்றன.
 فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍo يَغْشَى النَّاسَ هَذَا عَذَابٌ أَلِيمٌ    
 'வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக்கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும். இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்' (அல்குர்ஆன் 44:10,11)
    உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். மூமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாக புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்) பிராணி மூன்றாவது தஜ்ஜால் என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: அபூமாலிக் (ரலி), நூல்: தப்ரானி)

இன்ஷா அல்லாஹ் தொடர்ச்சி அடுத்த வாரம்.

குறிப்புகளை அதிகம் அள்ளி வழங்கியவர்கள்:
மௌலவி: நஸீர் மிஸ்பாஹி
மௌலவி: முஹம்மது அப்துல்லாஹ்
மௌலவி: ஷாகுல் ஹமீது
மௌலவி: ஹுஸைன்

மற்றும் பல இணைய தளங்களிலிருந்து தகவல் சேகரித்து கோர்வை செய்தவர்
மௌலவி: பீர் ஃபைஜீ







2 comments:

بارك الله في جهودكم

بارك الله في جهدكم

Post a Comment