03 April 2015

பாவமும் பரிகாரமும்!

இவ்வுலகில் மிக தீர்க்கமான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கம் சத்திய தீனுல் இஸ்லாம் தான்.
நாம் வாழும் காலத்தில் எப்படியெல்லாம் நம் வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற போதனைகளை சொல்லி கொடுத்து அதுபோன்று வாழ்ந்தால் உன்னதமான சுவர்க்கமும் அதற்கு மாற்றமாக வாழ்ந்தால் கொடிய நரகமும் உண்டு என்ற  எச்சரிக்கைகளோடு இவ்வுலகில் அனுப்பப்பட்டவர்கள் முஸ்லிம்கள்

எனவே முஸ்லிம்களின் செயல்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு மாற்றமாக அமையும் போது இவ்வுலகின் இயற்கையையே ரப்புல் ஆலமீன் மாற்றி விடுவான் என்ற  நமது நாயகத்தின் போதனையை இன்று நாம் நிதர்சனமாக பார்க்கிறோம்..

வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே உஷ்ணமும் அனலும் ஆரம்பமாகிவிட்டதே இதற்கு சான்று.

அதனால் நம் செயல்களை எப்போதுமே நல்லதாக்கி கொள்ளவேண்டும்.

நம்மில் சிலர்கள்  நன்மை என்று பாவத்தை செய்கிறார்கள். இன்னும் சிலர்கள் சிரிய பாவம் தானே என்ற அலச்சிய போக்கில்  பெரும் பெரும் பாவங்களை சர்வ சாதாரணமாக செய்து விடுகிறார்கள்

பாவம் என்பது துப்பாக்கியில் உள்ள தோட்டாக்களை போன்றது நம் அமல்களை அழித்து நாசமாக்கிவிடும்.

முதலில் நாம் பாவங்களின் அளவுகோள்களை தெறிந்து கொள்ள வேண்டும்.

(கதஃ  மிக சிறிய பாவம்)  (துனூப் அதை விட சற்று பெரியது) (செய்யிஅத் அதை விட கொஞ்சம் பெரியது) (மஆஸி பெரும் பாவம்)

இணைவைப்பது, கொலை செய்வது, மது அருந்துவது இது போன்றவைகளை மட்டுமே நாம் பெரும் பாவங்கள் என்று நினைத்து கொண்டு வாழ்கிறோம் ஆனால் நமக்கு தெரியாமல் எத்தனையோ பெரும் பாவங்களை அனுதினமும் செய்து கொண்டிருக்கிறோம்.

70 பெரும் பாவங்கள் இருக்கிறதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

அதில் முதலாவது  தொழுகையை விடுவது!

யார் ஒரே ஒரு தொழுகையை வேண்டுமென்றே விடுவாரோ அவரை நாளை மறுமையில் அல்லாஹ் கடுகடுத்த முகத்தோடு பார்பான் என்று நாயகம் சொன்னார்கள். (புஹாரி)

ஒரு தொழுகையை விட்டவரின் நிலை இப்படி என்றால் அறவே தொலாதவர்களின் நிலை என்ன? அல்லது நேரம் கிடைத்தால் தொழுது கொள்பவர்களின் நிலை என்ன?

செய்யதினா உமர் (ரலி) அவர்களுக்கு கைபர் போரில் ஒரு பெரும்  தோட்டம் கிடைத்தது. அதை ஒரு நாள் செய்யதினா உமர் (ரலி) அவர்கள் சுற்றி பார்த்து கொண்டிருக்க அசர் தொழுகையின் ஜமாஅத் தவறி விட்டது. அதற்காக பலமுறை அழுது தொழுது பிராத்தித்து பிறகு இந்த தோட்டம் தான் நம்முடைய ஜமாஅத் தொழுகை தவற காரணமாக இருந்தது என்றெண்ணி அந்த தோட்டத்தை அல்லாஹ்விற்காக பைதுல்மாலில் சேர்த்து விட்ட வரலாறுகளை நாம் அறிந்துவைத்திருக்கிறோம். (அபு தாவுத்)

தன்னிடத்தில் உள்ள எல்லா சொத்து சுகங்களை விட தொழுகையின் மகத்துவத்தை சரியாக விளங்கியவர்களின் செயல்கள் இது.

இன்று வியாபாரிகள் பெரும் பாலும் ஹோல்சல் தொழுகையாளிகளாக மாறிவருகிறார்கள்.

ரப்புல் ஆலமீன் குர்ஆனில் பல இடங்களில் தொழுகையை பற்றி பேசுகிறான்
அதில் ஒரு இடத்தில்


فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ ۖ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.(19:59) 

இந்த வசனத்தின் விரிஉரையாளர்கள் (கய்)என்ற அந்த நரகத்திடத்திலிருந்து மற்ற நரகங்கள் நாள் ஒன்றுக்கு 400 முறை பாவமன்னிப்பு தேடுகிறது என்று சொல்வார்கள்.

ரபீஃ இப்னு கைசம் (ரலி) அவர்களுக்கு வாத நோய் ஏற்பட்ட போது கூட தொளுகையிக்கு மிகுந்த சிரமத்தோடு வருகிறார்கள் அதை பார்த்த சிலர்கள் இப்படி சிரமப்பட்டு தொளுகையிக்கு வரவேண்டுமா என்று கேட்க ரபீஃ இப்னு கைசம் (ரலி) அவர்கள் இரண்டு காரணங்களை சொல்வார்கள். ஒன்று யார் பாங்குடைய சப்தத்தை கேட்ட பிறகும் ஜமாஅத் தொலுகையிக்கு வரவில்லையோ அவர்களின் மீது நாளை மறுமையில் ஈயங்களை காய்ச்சி ஊற்றப்படும் என்று என் நாயகம் சொல்லியிருக்கிரார்கள் அதை தாங்குவதற்கு எனக்கு சக்தி இல்லை அதனால் தான் சிரமப்பட்டும் வருகிறேன் இரண்டாவது நாயகத்தின் இறுதி நேரத்தில் தன்னுடைய கால்களின் பெருவிரல்கள் தரையில் இழுத்த வண்ணம் இரு தோழர்களின் கையை போட்ட நிலையில் தொழுகையிக்கு வந்ததை நான் பார்த்திருக்கிறேன் ஈருலக சக்கரவர்த்தியாகிய நம் நாயகமே அப்படி சிரமப்பட்டு தொலுகையிக்கு வந்த போது நான் ஒன்றும் அவர்களை விட பெரியவனாகி விடவில்லை என்று பதில் சொன்னார்கள்.(முஸ்லிம்)


பிள்ளைகள் மரணித்து விட்டால் துக்கம் விசாரிக்க வருகிறார்கள், சொத்து சுகங்களை இழந்து விட்டால் துக்கம் விசாரிக்க வருகிறார்கள்,உடல் நலம் குன்றிவிட்டால் துக்கம் விசாரிக்க வருகிறார்கள், ஆனால் ஏன் ஒரு வேலை தொழுகையை தவற விட்டு விட்டால் யாருமே வருவதில்லை 
என்று காதமுள் அசம் (ரஹ்) கேட்பார்கள்.

அதேபோல ஒருவன் ஜமாஅத் தொழுகையை விடுகிறான் என்றால் ஏதோ பாவம் செய்கிறான் என்று பொருள் பாவம் செய்பவர்களுக்கு அல்லாஹ் ஜமாஅத்துடன் தொழும் பாக்கியத்தை தரமாட்டான்  என்பதாக காதமுள் அசம் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். (பெரும் பாவங்கள் என்ற தமிழ் புத்தகம்) 

பருவ வயதை அடைந்தது முதல் மரணிக்கும் வரை தொழுகையை விட யாருக்குமே அனுமதி இல்லை தொழுகையை விடுவது பெரும் பாவம்.


அடுத்து பொய் பேசுவது!


இன்று இதுவும் மிக சாதாரணமாக நம்மிதத்தில் அரங்கேறுகிறது. நாயகம் நயவஞ்சகர்களின் அடையாளங்களில் முதலாவதாக பொய் பேசுவதை சொன்னார்கள். 

நரகத்தின் அடித்தட்டில் பொய் பேசுபவர்கள் இருப்பார்கள் என்றும் நாயகம் சொல்லியிருக்கிறார்கள். (பூலூகுள் மராம்)

இன்று நாம்  பொய்யோடு தான் விளிக்கிறோம் பொய்யோடு தான் உறங்குகிறோம் அந்தளவிற்கு பொய் நம்மோடு கலந்து விட்டது.

பொய் பேசுவதும் பெரும் பாவம்.


மோசடி செய்வது, கொள் சொல்வது, புறம் பேசுவது,சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்யாமலிருப்பது,முஸ்லிம்களை திட்டுவது, இறை நேசர்களை திட்டுவது, சஹாபாக்களை திட்டுவது.

இவை அனைத்துமே பெரும் பாவங்கள் ஆனால் இவற்றை நாம் மிக சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறோம். 

இவற்றை விட்டு நீங்குவதற்கும் நாயகம் வழிகளை சொல்லிகொடுத்தார்கள்.

و اتبع السيئة الحسنة تمحها
நீங்கள் ஒரு பாவத்தை செய்து விட்டால் அதனை அழித்து விடக்கூடிய நன்மையை உடனடியாக செய்யயுங்கள்.
நூல் முஸ்லிம்

عن انس رضي الله عنه قال: قال رسول الله صلي الله وسلم اذا تاب العبد من ذنوبه انسي الله عز و جل الحفظة ذنوبه و انسي ذلك جوارحه و معالمه من الرض( اي اثاره) حتي يلقي الله و ليس عليه شاهد من الله  بذنب
ஓர் அடியான் தான் செய்த பாவத்திற்காக மன்னிப்பு வேண்டினால் அப்பாவங்களைப் பதிவு செய்யும் மலக்குகளை விட்டும் அதை மறக்கடிக்கச் செய்து விடுகிறான்.அவ்வாறே அவனது உடல் உறுப்புகள், அவன் எந்த இடத்தில் பாவத்தைச் செய்தானோ அந்த இடங்கள் ஆகிவற்றிற்கும் அதனை மறக்கடிக்கச் செய்து விடுகிறான்.இறுதியில் அவனது பாவத்திற்கு எந்தச் சாட்சியும் இல்லாத நிலையில் அவன் அல்லாஹ்வைச் சந்திப்பான்.
நூல்: இப்னு அஸாகிர்,
தர்கீப் பாகம் 04
பக்கம் 94

ஒரு முஸ்லிம் பாவம் செய்துவிட்டால் (அதை உணர்ந்து) உழுசெய்து சுத்தமாகி இரு ரக்அத்துகள் தொழுது மன்னிப்புக் கோரினால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான் (அபூதாவுத்)

சிறிய முன்பாவங்கள் மன்னிக்கப்பட!உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தித் சீந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு ‘நான் உளூச் செய்வதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்” என்று கூறினார்கள் என்றார்கள்” என ஹும்ரான் அறிவித்தார். (புகாரி)

ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்கும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான். (புகாரி)

பிந்திய இரவில் பாவமன்னிப்பு வழங்கப்படும்!

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான். (புகாரி)

யார் இவ்வுலகில் பிறருடைய குற்றங்குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குற்றங்குறைகளை அல்லாஹ் மறுமையில் மறைப்பான். (முஸ்லிம்)

“உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)

நாட்கள் செய்த பாவங்களைப் போக்கும் ஜூம்ஆத் தொழுகை!
யார் முறையாக உழு செய்து ஜூம்ஆவுக்(காக பள்ளிக்)கு வந்து மௌனமாக இருந்து குத்பா – உரையைக் கேட்கின்றாரோ அவருடைய ஒரு ஜூம்ஆவுக்கும் மறு ஜூம்ஆவுக்கும் இடையேயான பாவங்களும் மேலும் அதிகப்படியான மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும்(முஸ்லிம்)

கடன் பட்டோருக்காக உதவுவதல்!
யார் ஏழையின் (கடன்போன்ற) சிரமங்களை எளிதாக்கி உதவுகின்றாரோ அவருடைய இம்மை- மறுமை சிரமங்களை அல்லாஹ் எளிதாக்கிவிடுகின்றான். (முஸ்லிம்)

பொறுமையுடன் இருந்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்!
ஒரு முஸ்லிமுக்கு நோய், வேதனை, துக்கம், கவலை, தொல்லை, துயரம் முதலான முள் குத்துவது உட்பட ஏதேனும் சோதனை நிகழ்ச்தால் அதனைப் பொறுத்துக் கொள்வதற்காக அவனுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். (புகாரி)

அல்லாஹ்விற்காக நோன்பு நோற்பது!
யார் அல்லாஹ்வின் வழியில் ஒரு நாள் நோன்பிருக்கிறாரோ அந்த ஒருநாள் நோன்பிற்காக அல்லாஹ் அவருடைய முகத்தை எழுபது ஆண்டுகள் நரகத்திலிருந்து தூரமாக்கி விடுகிறான். (புகாரி)

பாவங்களை அழிக்கும் தர்மம்!
தர்மம் பாவங்களை அழித்துவிடும். நீர் நெருப்பை அணைப்பதைப் போல. (திரிமிதீ)

ஹஜ் மற்றும் உம்ரா – பாவங்களுக்கான சிறந்த பரிகாரங்கள்!
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறுகூலியில்லை. (முஸ்லிம்)

கடல் நுரை போல உள்ள அதிகமான பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டுமானால்!
‘சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக)இருந்தாலும் சரியே! (புகாரி).

உங்கள் பாவங்களை அழிக்கக் கூடிய வெகு எளிதான  நற்செயல்கள்

1.      உணவுண்டபின் துவா

நபி வழியைப் பின்பற்றுவது ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தருகிறது.  பல எளிய பழக்கங்கள் மிகப்பெரும் வெகுமதிகளை – அவைகளை நீங்கள் சுமக்கக் கூட முடியாத அளவு, தாங்கியுள்ளன. அவற்றில் ஒன்று இந்த எளிய துவாவினால் கிடைக்கக் கூடியது.  நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் உணவை உண்டு முடித்தவுடன்: அல்ஹம்துலில்லாஹில்லதீ அத்’அமனி ஹாதா வ ரஸக்னீஹி மின் கைரி ஹௌலி மின்னீ வ லா குவ்வத – நான் உண்ணுவதற்கு எனக்கு உணவளித்து அதை என்னுடைய எந்த முயற்சியும், சக்தியும் இல்லாமல் அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். என்று கூறுபவருடைய முன் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.. [புகாரி, முஸ்லிம்]

ஒரு எளிய துவாவிற்கு, இம்மாதிரியான பெரும் வெகுமதி!  நீங்கள் செய்ததெல்லாம், உணவுண்டு, உங்களுடைய எந்த முயற்சியும் இல்லாமல், உங்களுக்கு உணவளித்த அல்லாஹ்வுடைய முழுமையான சக்தியை  ஒப்புக் கொண்டது தான். அதற்கு வெகுமதி, உங்களுடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுதல்!

2.       பத்து முறை சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: எளிமையான இரு தன்மைகளைப் பெற்ற எந்த முஸ்லிமும் சுவனம் புகாமல் இருப்பதில்லை. அவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும், அல்லாஹ்வை பத்து முறை (சுபஹானல்லாஹ் கூறி) மகத்துவப் படுத்த வேண்டும். பிறகு பத்து முறை (அல்ஹம்துலில்லாஹ் கூறி) புகழ வேண்டும், பிறகு பத்து முறை (அல்லாஹு அக்பர் கூறி) மேன்மைப் படுத்த வேண்டும்.  நபி (ஸல்) அவர்கள் இதை தன் கைவிரல்களில் எண்ணுவதைப் பார்த்தேன். அவர்கள் கூறினார்கள், ‘இது நாவில் 150 முறையும், மீஸானின் தராஸில் ஆயிரத்து ஐநூறு (நன்மைகளாகவும்) என கணக்கிடப்படும். நீங்கள் உறங்கப் போகுமுன், நூறு முறை அவனை மகத்துவப்படுத்துங்கள், புகழுங்கள், மேன்மைப்படுத்துங்கள் – அது நாவில் 100 முறையும், மீஸானின் தராசில் ஆயிரத்து ஐநூறாக (நன்மைகளாகவும்) இருக்கும். உங்களில் எவர் ஒரு நாளில் 2500 சய்யி’ஆத் (பாவங்கள்) செய்கிறீர்கள்?  மக்கள் கூறினார்கள்:  நாங்கள் எப்படி (எங்கள் பாவங்களை) எண்ணாமல் இருக்க முடியும்? உங்களில் ஒருவர் தொழும்போது ஷைத்தான் வந்து, அவர் தொழுது முடிக்கும் வரை ஒவ்வொரு விஷயமாக நினைவூட்டி, அவரை திக்ர் செய்ய விட மாட்டான்.  அல்லது, அவர் படுத்துக் கொண்டிருக்கும்போது அருகில் வந்து, அவருக்கு தூக்கம் வரவழைத்து, அவரை (திக்ர் செய்ய விடாமல்) தடுத்து உறக்கத்தில் ஆழ்த்துவான்.  [திர்மிதி]

சுபஹானல்லாஹ்,அல்ஹம்துலில்லாஹ்,அல்லாஹு அக்பர் என்று 10 முறை (நம்மில் பலருக்கு 33 முறை கூறுவது தான் தெரியும்) கூறும் சுன்னத்திற்கு புத்துயிர் அளிப்போம்.  நபி (ஸல்) அவர்கள் செய்தது போல் உங்களுடைய வலது கையை எண்ணுவதற்கு பயன்படுத்துங்கள்.

உறங்குவதற்கு முன் 33 முறை சுபஹானல்லாஹ்,33 முறை அல்ஹம்துலில்லாஹ்,34 முறை அல்லாஹு அக்பர் கண்டிப்பாக ஓதுங்கள்.  நீங்கள் தொழும் இடம், உறங்கும் இடத்திலெல்லாம், நினைவூட்டக் கூடிய சிறு தாள்களை ஒட்டி வையுங்கள்.  நபி (ஸல்) அவர்கள் கூறியது போல், திக்ருகள் செய்வது மிக எளிதானது ஆனால், ஷைத்தான் நம்மை மறக்க வைப்பதால், நாம் அதைத் தொடர்ந்து செய்வதில்லை!

3. தர்மம் பாங்களைத் தடுக்கக் கூடியது, அழிக்கக் கூடியது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீர், நெருப்பை அணைப்பது போல், தர்மம் பாவங்களை அழிக்கிறது.. [திர்மிதி]

நீங்கள் ஒரு பாவம் புரிந்தவுடன் ஒரு ஸதகா (தர்மம்), சிறிய தொகையையாவது, கொடுங்கள்.  இன்னொரு குறிப்பு, நீங்கள் குறிப்பிட்ட ஒரு பாவத்தை மீண்டும், மீண்டும் செய்யக்கூடியவராக இருந்தால், அப்பாவத்தை அடுத்த முறை செய்தால், ஒரு குறிப்பிட்ட தொகையை தர்மம் செய்ய வேண்டுமென நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.  இரண்டாவது முறை செய்தால், இன்னும் பெரிய தொகையையும், மூன்றாவது முறை செய்யும்போது அதைவிட பெரும் தொகையையும் கொடுக்க வேண்டுமென நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.  இப்படியாக உங்கள் பாவங்களை விலை உயர்ந்தவைகளாக ஆக்குங்கள்.  அதனால், இவ்வுலகத்தில் உள்ள பொருட்களின் மீதுள்ள உங்கள் ஆசையை பயன்படுத்தி, அல்லாஹ்வின் மீது தூய அன்பிற்காக, நீங்களாகவே வெட்கப்பட்டு பாவம் செய்வதை நிறுத்தும் வரை பாவங்களுடன் போராடுங்கள்.

4.      ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் செய்ய வேண்டிய துவா 
நபி (ஸல்) அவர்கள் ஒரு அமர்வில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாக பின்வரும் துவாவை ஓதும்படி கூறினார்கள்:  யா அல்லாஹ், மகத்துவமும், புகழும் உனக்குரியது.  வணக்கத்துக்குரியவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை என நான் சாட்சியளிக்கிறேன்.  நான் உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன், உன்னிடமே திரும்புகிறேன்.  இப்படி ஒருவர் ஓதும்போது அச்சபையில் தெரிந்தோ, தெரியாமலோ பாவங்கள் செய்திருந்தால் அப்பாவங்கள் மன்னிக்கப்படும்[திர்மிதி]


இது போன்ற நற்செயல்களை அதிகம் செய்வோம். மேலே குறிப்பிட்ட பாவங்களில் இருந்து நம்மை முழுமையாக விளக்கி கொள்வம்.




إِن تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلًا كَرِيمًا  ﴿4:31﴾

4:31. உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதனை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம்

 إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.25:70

எனவே முழுக்க முழுக்க பாவங்களில் மூழ்கி இருக்கும் நமக்கு இது போன்ற வசனங்கள் தான் புத்துணர்ச்சியை தருகிறது. அல்லாஹ் நம்மை எப்போதுமே மன்னிக்க தயாராக இருக்கிறான் ஆனால் நாம் அவனிடம் சரணடைய தயாராக  வேண்டும்.

நாம் எப்படி இவ்வுலகிற்கு வரும் போது பரிசுத்தமாக வந்தோமோ அதுபோல் நம் ரப்பை சந்திக்கும் போது மிக பரிசுத்தமாக சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பாவங்களை பார்ப்பது,பாவங்களை கேட்பது, பாவங்களை பேசுவது, பாவங்களை நினைப்பது,பாவங்களை சிந்திப்பது,பாவங்களை செய்வது இவை அனைத்தை விட்டும் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.

வல்லோன் அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம் அனைத்து பாவங்களை மண்ணிப்பதோடு இனி மேல் பாவங்களின் பக்கம் நெருங்காதவர்களாக நம்மை ஆக்குவானாக ஆமீன்  


குறிப்பு வழங்கியவர்கள்: ஷேய்க் ஆதம் ஹழ்ரத், சுல்தான் சலாஹி ஹழ்ரத், இல்யாஸ் ஹழ்ழ்ரத், நசீர் மிச்பாஹி ஹழ்ரத், பதுர் அல்தாஃபி ஹழ்ரத், மேலாதிக்க தகவல்களோடு தொகுத்து வழங்கியவர் அப்பாஸ் ரியாஜி 































0 comments:

Post a Comment