11 November 2014

மரணித்த பின்பும் நபிமார்கள் உயிருடன் இருக்கிறார்கள்


1. ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம், "வெள்ளிக்கிழமை மிகச் சிறந்த நாளாகும். ஆகவே அந்த நாளில் என் மீது அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் மலக்குகள் மூலம் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றன." என்றார்கள். அப்போது, "நாங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் தாங்களுடைய ஜீவியத்தில் எடுத்துக்காட்டப்படுவது போன்றே தாங்கள் மறைவுக்குப் பிறகும் (கப்ரிலும்) காட்டப்படுமா?" என்று சில ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஒருவர் என் மீது ஸலவாத் ஓதினால் அவர் ஓதி முடிக்கின்றவரை அவருடைய ஸலவாத்துக்கள் ஒன்றுவிடாமல் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன" என்று கூறியதுடன், "நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது" என்றும் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, தாரமி, பைஹகீ, மிஷ்காத் பாகம் 120 பாபுல் ஜும்ஆ)
2. "ரஸூல்மார்களும் நபிமார்களும் தாங்களின் கப்ரறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 3089)
3. "நான் நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அந்நேரம் இப்ராஹீம் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்." என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 96 கிதாபுல் ஈமான்)
4. "நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மர் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் கப்ருக்கருகே சென்றேன். அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 2 பக்கம் 268)
இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகையில், "ஷுஹதாக்களே ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என்று குர்ஆன் ஷரீப் கூறும் போது அவர்களைவிட பன் மடங்கு ஏற்புடையவர்களான நபிமார்கள் தாங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்றும் தொழுகை ஹஜ் போன்ற கிரியைகளை நடத்தி வருகிறார்கள் என்றும் கூறுவது தூரமான ஒன்றல்ல." என்று கூறுகிறார்கள். (ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 94 அத்தஅம்முல் 251)


0 comments:

Post a Comment