ஜீவகாருண்யம் என்றால்..?
உயிரினங்களிடம் அன்பு காட்டுவதே ஜீவகாருண்யம் ஆகும்.
உயிரினங்களிடம் அன்பு காட்டுவதே ஜீவகாருண்யம் ஆகும்.
மனிதன் மனிதனுக்கு கருணை
காட்டுவது போலவே ஏனைய ஜீவராசிகளுக்கும் அவன் கருணை காட்ட வேண்டும்.
பகுத்தறிவற்ற வாய்பேச முடியாத மிருகங்கள், பறவைகள் அனைத்தும் கண்டிப்பாக பரிவு காட்டப்பட வேண்டியவை.
பகுத்தறிவற்ற வாய்பேச முடியாத மிருகங்கள், பறவைகள் அனைத்தும் கண்டிப்பாக பரிவு காட்டப்பட வேண்டியவை.
இஸ்லாத்தில் வுழூச்
செய்வதற்கு சிறிதளவு நீர் கிடைத்து ஒரு
பிராணிக்கு நீர் கிடைக்காத போது அந்நீரை பிராணிக்குப் புகட்டிவிட்டு நாம் தயம்மும்
செய்ய வேண்டும் என்று கூறுகிற மார்க்கம் இஸ்லாம்.
கருணை காட்டு.... காட்டப்படுவாய்!
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள்
உலகம் போற்றும் ஒரு மாமேதை அவர்கள் எழுதிய நூற்கள் அனந்தம்..அனந்தம்.
அவர்களது வஃபாத்திற்குப்
பிறகு அவர்களை ஒரு நண்பர் கனவில் கண்டு கேட்டார்:
"இமாம்
அவர்களே தங்களின் நிலை எவ்வாறு உள்ளது? தங்களை ரப்பு எவ்வாறு நடத்தினான்.?
"அல்லாஹ்
என்னை மன்னித்தான். சுவனத்தில் உயர்ந்த இடத்தில் வைத்து சிறப்பித்தான். யா அல்லாஹ்
இந்த சிறப்பு எனக்கு எப்படிக் கிடைத்தது? என்று கேட்டேன். அவன் கூறினான்: நீங்கள்
ஒருநாள் இரவில் கண்விழித்து கிதாபு எழுதிக் கொண்டிருந்தீர்கள். ஒரு ஈ பசியுடன்
பறந்து வந்து உங்கள் எழுதுகோலின் நுனியில் அமர்ந்தது மைக்குடித்து பசியைத்
தீர்த்துக் கொள்வதற்காக. இதைக் கண்ட நீங்கள் அது அமைதியாகக் குடிக்கும் வரை சிறிது
நேரம் அந்த எழுதுகோலை அசைக்கவில்லை. இந்த ஒரு சிறிய கருணை என்னைக் கவர்ந்தது.
அதனால் உங்களுக்கு நான் என் கருணையைக் காட்டினேன் என்றான்.
தாகம் தணித்தால் பாவம் போகும்!
ஒரு விபச்சாரி, நாவறட்சியுடன்
நாக்கை தொங்கப்போட்டு நின்று கொண்டிருந்த நாய்க்கு தன் மோசாவைக் கழற்றி அதைத் தன்
முந்தானையில் முடிந்து வாளியாகப் பயன்படுத்தி தண்ணீர் அள்ளிக் கொடுத்து அந்த
நாயின் தாகம் தனித்ததற்காக அவளது பாவக் கறைகளை எல்லாம் பரிசுத்தமாக்கி பாக்கியாமான
சுவன வாழ்வைப் பரிசாகத் தந்தானே படைத்தவன்.. புகாரியில் பதியப்பட்டுள்ள இந்த
நிகழ்ச்சி பிரபல்யமானது தானே?
என்ன புரிகிறோம்?
பிற உயிர்களுக்கு காருண்யம்
காட்டினால் கருணையாளன் நமக்கு அதைவிட சிறந்த காருண்யத்தைக் காட்டுகிறான்
என்பதுதானே..!
பூமியில் உள்ளோருக்கு
நீங்கள் இரக்கம் காட்டுங்கள்! வானில் உள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான். (நூல்
: ஸுனன் அல்-திர்மிதி)
பரிவு காட்டினால் பரிசு
கிடைக்கும்!
ஒரு மனிதன் இன்னொரு
மனிதனிடம் காட்டும் அன்புக்கு நன்மைகள் கிடைப்பது போன்று, விலங்கினத்தின்
மீது இரக்கம் காட்டினால் அதற்கும் நன்மை உண்டு என்று இஸ்லாம் கூறுகின்றது.
فعن أبي هريرة - رضي الله عنه - أن النبي - صلى الله عليه وسلم -
قال : ( بينا رجل بطريق اشتد عليه العطش، فوجد بئرا، فنزل فيها فشرب ثم خرج، فإذا كلب
يلهث يأكل الثرى(التراب) من العطش، فقال الرجل : لقد بلغ هذا الكلب من العطش مثل الذي
كان بلغ مني، فنزل البئر فملأ خفه ماء فسقى الكلب، فشكر الله له فغفر له .. قالوا
: يا رسول الله، وإن لنا في البهائم لأجرا ؟، فقال : في كل ذات كبد رطبة أجر )( البخاري
).
புகாரியில் இன்னொரு நபிமொழி
இப்படி வருகிறது:
''ஒரு
மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம்
ஏற்பட்டது. உடனே, அவர்
(அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார்.
பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத்
தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு
ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும்'' என்று
எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்)
தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே
ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை
(அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற
நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும்
எங்களுக்குப் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்!
உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில்
மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி 2363)
பூனையின் தந்தை:
அபூஹுரைரா ரலி அவர்களுக்கு
அந்த அழகான செல்லப் பெயர் எப்படி வந்தது ?
அவர்களுக்கு ஜீவராசிகள் என்றால்
அவ்வளவு பிரியம். அதிலும் பூனை என்றால் கொள்ளைப்பிரியம் ஒருநாள் அவர்கள்
தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு பூனை வந்து குளிருக்கு இதமாக அபூஹுரைரா ரலி
அவர்களின் மேனியை ஒட்டிக் கொண்டு படுத்தது. தூங்கி எழுந்து பார்க்கிறார்கள் பூனை
அவர்களது ஜுப்பாவின் ஓரத்தில் படுத்திருந்தது. அந்தத் துணியை உருவினால் அயர்ந்து
தூங்கிக்கொண்டிருக்கிற அந்த பிராணியின் தூக்கம் தடைபடுமே என்று அதை அப்படியே கத்தரித்து
விட்டுவிட்டு எழுந்தார்கள்.
பூனையின் மீது அவர்கள்
காட்டிய அந்தப் பரிவின் அடையாளமாய் அபூஹுரைரா (பூனையின் தந்தை) என்ற அழகான செல்லப்
பெயரால் அண்ணல் நபிகளார் (ஸல்) அழைத்தார்கள். இன்றளவும் அந்தப் பெயர்தானே நின்று
நிலைக்கிறது?
பூனை அல்லாஹ்வின் தூதர்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தாண்டிச் செல்லும். அவர்கள் அதற்கு பாத்திரத்தைக்
கெளிப்பார்கள். அது குடிக்கும். பின்னர் அதன் மீதியைக் கொண்டு அவர்கள் வுழூ
செய்வார்கள். (நூல் : ஸுனன் அல்-தாரகுத்னி)
இப்படித்தான் அருமை நாயகம்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிருகங்கள், பறவைகளுடன் மிகுந்த வாஞ்சையுடன்
நடந்துகொண்டார்கள். தம் தோழர்களை இப்படியே நடந்துகொள்ளுமாறு பணித்தார்கள்.
வாயில்லா ஜீவன்களுக்கு பரிவு காட்டுவதன் மூலம் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகளையும்
அவற்றை துன்புறுத்துவதன் மூலம் கிடைக்கும் பெரும் தண்டனைகளையும் அவர்களுக்கு
எடுத்துச் சொன்னார்கள். சஹாபிகள் தப்பித்தவறியேனும் இதில் அசிரத்தையாக இருந்தால்
அவர்களை திருத்தி, வழிகாட்டினார்கள்.
தாயைப் பிரிந்து தவிக்கவிடாதீர்!
நபித்தோழர்களுள் ஒருவர், ஒரு
குருவிக்கூட்டி-ருந்து ஒரு குருவிக்குஞ்சைப் பிடித்துக்கொண்டு, நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்துகொண்டிருந்தபோது, அக்குஞ்சின்
தாய்ப்பறவை அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதைச் சிறிதும் பொருட்படுத்தாத அவர்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று அமர்ந்துவிட்டார். இதைக் கண்ட நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உங்கள் கையிலுள்ள குஞ்சைப் பெற்றிடத்
தாய்ப்பறவையின் ஏக்கத்தைப் பாருங்கள். நீங்கள் விளையாட அந்தக் குருவிக்குஞ்சுதான்
கிடைத்ததா? அதை
விட்டுவிடுங்கள். எவ்வுயிர்க்கும் நோவினை கொடுக்காதீர்கள்" என்று
கூறினார்கள்.
ஒரு குருவியின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டு
அதன்மீது இரக்கம் காட்டிய அண்ணல் நபியின் ஜீவகாருண்யத்தை இங்கு நாம் நினைவுகூர
வேண்டும்.
“ஒரு
முறை இரு கழுதைக் குட்டியை அதன் தாயிடமிருந்து பிரித்த ஒருவரை நபி(ஸல்) அவர்கள் கண்டித்து
அவற்றை தாயுடன் சேர்த்தார்கள்.”
நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில்
தங்கியபோது ஒரு பறவை அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை
எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி
(ஸல்) அவர்கள் "உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?'' என்று
கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்'' என்றார்.
நபி (ஸல்) அவர்கள் "அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு'' என்றார்கள்.
(முஃஜமுத் தப்ரானி)
பட்டினி போடாதீர்!
அப்துல்லாஹ் இப்னு ஜஃபர்
(ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாகனத்தில் என்னை அவர்களுக்குப் பின்னால்
ஏற்றிக்கொண்டார்கள். அன்சாரிகளில் ஒரு மனிதரின் தோட்டத்தில் அவர்கள்
நுழைந்தார்கள். அப்போது ஓர் ஒட்டகை. அது நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக்
கண்டபோது அனுங்கியது, அதன்
இரு கண்களும் கண்ணீர் வடித்தன. நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அதனிடம் வந்து அதன்
தலையைத் தடவியபோது அது அமைதியடைந்தது. 'இந்த ஒட்டகையின் சொந்தக்காரர் யார்? இவ்வொட்டகம்
யாருக்குரியது?' என
அவர்கள் கேட்க அன்சாரிகளைச் சேர்ந்த ஓர் இளைஞர் வந்து அல்லாஹ்வின் தூதரே!
எனக்குரியது என்றார். 'அல்லாஹ் உமக்கு உரிமையாக்கியுள்ள
இம்மிருகத்தின் விஷயத்தில் நீர் அல்லாஹ்வைப் பயப்படுவதில்லையா? ஏனெனில்
நீர் அதை பசியில் போட்டு களைப்படையச்செய்வதாக அது என்னிடம் முறையிட்டது' என்றார்கள்.
(நூல் : ஸுனன் அபீ தாவூத்)
அல்லாஹ்வின் தூதர்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் ஒட்டகையைக் கடந்து சென்றார்கள். அதன்
முதுகு அதன் வயிறுடன் ஒட்டி இருந்தது. 'இவ்வாய்பேச முடியாத மிருகங்கள் விடயத்தில்
அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! அவை நல்ல நிலையில் இருக்கும்போது அவை மீது
சவாரிசெய்யுங்கள்! மேலும் அவை நல்ல நிலையில் இருக்கும்போது அவற்றை உண்ணுங்கள்!' எனக்
கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு அல்-ஹன்லலிய்யஹ் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல்
: ஸுனன் அபீ தாவூத்)
أن النبي - صلى الله عليه وسلم - مر عليه حمار قد وُسِمَ(كوي) في وجهه، فقال : لعن الله الذي وسمه ( مسلم ) .
மிருகத்தை, பறவையை
அடித்தல், தாக்குதல், உறுப்புக்களுக்கு
சேதம் விளைவித்தல், அவற்றின்
தேக நிலையைக் கவனியாது வேலை வாங்குதல், சக்திக்கு அப்பாற்பட்டு வேலையில் ஈடுபடுத்தல், அவற்றுக்கு
நீர், தீனி கொடுப்பதில் அலட்சியமாக இருத்தல்... இவ்வளவு ஏன்.. அதைத் திட்டுவது கூட பாவம்தான்.
திட்டித் தீர்க்காதீர்!
“சேவலை
திட்டாதீர்கள் அது எம்மை தொழுகைக்காக எழுப்புகின்றது” (நஸாஈ)
மிருகத்தை சபிப்பதைக்கூட
தெய்வீக மார்க்கம் இஸ்லாம் தடுத்தது.
நபி (சல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். ஒரு சாபமிடல் அவர்களுக்கு கேட்டது.
இது என்ன என்றார்கள். இது ஒருத்தி தன் வாகன ஒட்டகத்தை சபித்தாள் என்றனர் அவர்கள்
(கூட இருந்தவர்கள்). நீங்கள் அதனை விட்டும் (சுமையை) இறக்கிவிடுங்கள்! ஏனெனில் அது
சாபமிடப்பட்டுள்ளது என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஆகவே
அவர்கள் அதனை விட்டும் (சுமையை) இறக்கிவிட்டனர். கறுப்பு கலந்த ஒரு வெள்ளை பெண்
ஒட்டகையாக நான் அதனைப் பார்க்கிறேன். (நூல் : ஸுனன் அபீ தாவூத்)
பாடாய்ப் படுத்தாதீர்!
“நீங்கள்
மிருகங்களுக்கு முகத்திலே அடிப்பதையும் முகத்திலே அடையாளம் இடுவதையும் தவிர்த்துக்
கொள்ளுங்கள்” (புகாரி), பிராணிகளுக்கு அணியாயம் செய்பவர்களை சபித்ததோடு, அவற்றின்
மீது அதிக எடை ஏத்துவதையும் நபியவர்கள் தடை செய்ததுடன், மிருகங்களுக்கு
மேல் மூன்று பேருக்கு மேல் ஏறிச் செல்வதையும் தடுத்துள்ளார்கள்.
இரண்டு பிராணிகளை தூண்டி
விட்டு அவை மோதுவதை வேடிக்கை பார்ப்பதை தடுத்தார்கள். “எந்தப்
பிராணியை ஒருவன் வீணாக கொன்றானோ அந்தப் பிராணி நாளை மறுமை நாளில் அவனுக்கு எதிராக
அது வாதாடும்” (நஸாஈ)
பசியால் சாகும் வரை ஒரு
பூனையை அடைத்து வைத்திருந்த பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டு
நரகத்தினுள் நுழைந்தாள், அவள் அந்த பூனையை அடைத்து வைத்திருந்த போது தண்ணீர்
புகட்டவுமில்லை, உணவு
கொடுக்கவுமில்லை, இன்னும்
அதை விட்டுவிடவுமில்லை, (அப்படி அதை அவிழ்த்து) விட்டடிருந்தால் அது
பூமியிலுள்ள புழுப்பூச்சிக்களை உண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)
எவர் கருணை காட்டுவதில்லையோ
அவருக்கு கருணை காட்டப்படுவதில்லை. (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல்
: சஹீஹ் அல்-புகாரி)
வாயில்லா ஜீவன்களுக்கிடையில்
சண்டையைத் தூண்டிவிடுவது பற்றி கடுமையான தடை இஸ்லாத்தில் காணப்படுகிறது. இவ்வாறு
செய்வதால் அவை காயமுறுகின்றன, மரணமெய்துகின்றன.
மிருகங்களுக்கிடையில்
சண்டையைத் தூண்டுவதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் தடுத்தார்கள். ( நூல்: ஸுனன் அபீதாவூத்)
பறவையை, மிருகத்தை
எறிவதற்கு இலக்காக எடுத்துக்கொள்வது கூடாது. இதனை புனித இஸ்லாம் வன்மையாகக்
கண்டிக்கிறது.
ஒரு பறவையை வைத்து அதனைக்
குறி பார்த்து எறிந்துகொண்டிருந்த குரைஷி இளைஞர்கள் சிலரைத் தாண்டிச் சென்றார்கள்
இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள். அவர்களின் அம்பில் குறி தவறக்கூடிய
ஒவ்வொன்றையும் பறவைச் சொந்தக்காரருக்கென அவர்கள் ஆக்கிவைத்திருந்தனர். இப்னு
உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா)வைக் கண்டதும் அவர்கள் பிரிந்து சென்றுவிட்டனர். யார்
இதனைச் செய்தவர்? இதைச்
செய்தவரை அல்லாஹ் சபிப்பானாக! உயிருள்ள ஒன்றை இலக்காக எடுத்துக் கொண்டவரை திண்ணமாக
அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சாபமிட்டார்கள் என்றார்கள்۔(நூல்: சஹீஹ் முஸ்லிம்)
சவாரிசெய்ய
உதவுகின்றதென்பதற்காக அமர்ந்திருந்துகொள்ளும் நாற்காலிகளாக மிருகங்களைப்
பயன்படுத்தலாகாது.
களைப்புறாதவையாக இருக்கும்
நிலையில் இம்மிருகங்களில் சவாரிசெய்யுங்கள்! மேலும் களைப்புறாதவையாக இருக்கும்
நிலையில் அவற்றை விட்டுவிடுங்கள்! மேலும் அவற்றை கதிரைகளாக எடுத்துக்கொள்ள
வேண்டாம்! (நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
பறவைகள், மிருகங்களை
அவற்றின் பயன்பாடறிந்து பயன்படுத்த வேண்டும். ஒன்றிருக்க வேறொன்றுக்காக
உபயோகிப்பது தவறாகும். பின்வரும் ஹதீஸில் இவ்வுண்மை தெளிவாகின்றது:
அல்லாஹ்வின் தூதர்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுப்ஹ் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர்
மக்களை நோக்கி 'ஒரு
மனிதர் பசுவொன்றை ஓட்டிக் கொண்டிருக்கையில் அதன் மீதேறி அதனை அடித்தார். நிச்சயமாக
நாம் இதற்காகப் படைக்கப்படவில்லை. உழுவதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளோம் என அது
கூறிற்று' என்றார்கள்.
(நூல் : சஹீஹ் அல்-புகாரி)
ஒரு கேள்வி: இந்தளவு ஜீவகாருண்யம் வலியுறுத்துகிற
மார்க்கம் குர்பானி கொடுக்க ஏன் கூறுகிறது? அது உயிர்வதை இல்லையா? இது குறித்து
விரிவான கட்டுரை தனியாக இடம்பெறுகிறது. இங்கே சுருக்கமான விளங்கிக் கொள்வோம்:
குர்பானியில் நிச்சயமாக உயிர்
வதை இல்லை.
படைப்பாளன் அல்லாஹ்
மாத்திரமே தனது படைப்புக்களின் தன்மைகளை, அமைப்புக்களை, நோக்கங்களை, இரகசியங்களை, பயன்களை நன்கு நுணுகி அறிந்தவன். அவன்தான் சில
வகை மிருகங்களை, பறவைகளை
மனிதன் அறுத்தும் வேட்டையாடியும் சாப்பிட அனுமதித்துள்ளான்.
அதே போல சில சந்தர்ப்பங்களில் சில வகை மிருகங்களை
அறுத்து அதன் மாமிசங்களை வறுமைப்பட்டோர், உற்றார், உறவினர் போன்றோருக்கு கொடுத்துதவும்படி அல்லாஹ்
கட்டளையிட்டுள்ளான்.
ஆனால் மிருகங்கள் எந்த
வகையில் அறுக்கப்பட்டாலும் அதற்குரிய சிறப்பான சட்டவிதிகளை புனித இஸ்லாம்
அறிமுகம்செய்து, அறுத்தலின்போதும் அதற்கு முன்னரும் பின்னரும்
அவை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. சட்டதிட்டங்களை
முறையாகப் பின்பற்றி உரிய முறையில் அறுக்கப்படும்போது அது ஒருபோதும் மிருக வதையாக
ஆகாது.
- · அறுக்கும்போது நன்கு கூர்மையான கத்தி கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறி விரைவாக அறுத்தல் வேண்டும்.
- · கத்தியை மிருகம் காணும்படி வைத்துக்கொள்ளல், தீட்டுதல் ஆகாது.
- · மிருகங்களை அறுப்பதற்காக கொண்டு வரும்போதும் அறுக்கத் தயாராகும் வேளையிலும் அம்மிருகங்களுக்கு இம்சைசெய்யக் கூடாது.
- · வேறு மிருகங்கள் பார்த்திருக்கும் நிலையில் அறுத்தலாகாது.
ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) சொன்னார்கள்: நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றிலும் நன்முறையில்
நடந்து கொள்வதை கடமையாக்கியுள்ளான். மேலும் நீங்கள் அறுத்தால் அறுத்தலை நன்முறையில்
செய்யுங்கள்! உங்களில் ஒருவர் தன் கத்தியை தீட்டிக்கொள்ளவும்! தனது அறுவைப்
பிராணிக்கு இலகுவைக் கொடுக்கவும்! (நூல் : ஸுனன் அல்-திர்மிதி)
وعن معاوية بن قرة عن أبيه - رضي الله عنه - أن رجلا قال : يا رسول الله إني لأذبح الشاة وأنا أرحمها، فقال : والشاة إن رحمتها رحمك الله
அல்லாஹ்வின் தூதரே! நான்
ஆட்டை அறுத்தால் அதற்கு நான் கருணை காட்டுகிறேன் என்றார் ஒரு மனிதர். நீர் அதற்கு
கருணை காட்டினால் அல்லாஹ் உமக்கு கருணை காட்டுவான் என்றார்கள் அல்லாஹ்வின் தூதர்
(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
ஒரு மனிதர் ஆடொன்றை
அறுக்கும் பொருட்டு தனது கத்தியை தீட்டிக்கொண்டே அதனை ஒருக்களித்துப்
படுக்கச்செய்தார். 'அதனைப்
பல தடவைகள் மரணிக்கச்செய்யப் பார்க்கின்றீரா? அதனை ஒருக்களித்துப் படுக்கச்செய்வதற்கு முன்
உமது கத்தியை நீர் தீட்டி இருக்கலாமே!' என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல்
: முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
ஒரு சிட்டுக்குருவியை, அதற்கு
மேலுள்ளதை அதன் உரிமையின்றி எவர் கொல்வாரோ அதனைக் கொன்றது பற்றி அல்லாஹ்
அவரிடத்தில் விசாரிப்பான். அல்லாஹ்வின் தூதரே! அதன் உரிமை என்னவென கேட்கப்பட்டது.
அதனை நீர் அறுத்து சாப்பிடுதல், அதன் தலையை நீர் வெட்டி, அதனை
வீசாதிருத்தல் என்றார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு
அன்ஹுமா), நூல்
: ஸுனன் அல்-பைஹகி)
'மிருகங்களைத்
தடுத்துவைத்து அவற்றை எறிந்து கொல்வதை விட்டும் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் தடுத்தார்கள்' நூல்
: சஹீஹ் அல்-புகாரி)
இஸ்லாம் கூறுகிற முறைப்படி
அறுத்தால் உண்மையில் பிராணிக்கு எந்த வித சித்திரவதையும் ஏற்படாது என்பது இன்றைய ஆராய்ச்சி
கூறும் உண்மை.
“பக்தாதில் இருந்த எறும்புப் புற்றொன்றுக்கு தீயிட்டு எரித்ததைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கண்டித்ததுடன் நெருப்பைக் கொண்டு வேதனை செய்ய அல்லாஹ்வே போதுமானவன் எனக் கூறினார்கள்.” (அல்ஹதீஸ்)
மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கொடிய ஜந்துக்களைக் கூட சித்திரவதை செய்து கொல்லக்கூடாது என்று மார்க்கம் பனிக்கிறது. உதாரணமாக எங்கு கண்டாலும் கொல்லலாம் என்று அனுமதிக்கப்பட்ட ஐந்து வகை பிராணிகள் அவற்றைக் கூட நெருப்பில் போட்டுப் போசுக்குவதோ, கடும் வெயிலில் போட்டு சித்திரவதை செய்வதோ கொதிநீரை ஊற்றிக் கொள்வதோ கூடாது.
உயிர்
வதையை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மாறாக, எல்லா உயிர்களிடத்தும் கருணை வேண்டுமென்றே
அண்ணல் நபியவர்கள் போதித்துள்ளார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும்
உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில்
கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது.
குறிப்பு வழங்கியவர்கள்: சுல்தான் சலாஹி ஹழ்ரத், ,முஹம்மது இல்யாஸ் ஹழ்ரத், ஷாஹுல் ஹமீது ஃபைஜி ஹழ்ரத்.
புர்ஹானுதீன் ஹழ்ரத். மேலதிகத் தகவல்களோடு தொகுத்து வழங்கியவர் “நபிப் பித்தன்”
5 comments:
காலத்துக்கு தேவையான அவசிய தலைப்பு. குழுவுக்கு அல்லாஹ் நன்மைகளை வாரிவழங்குவானாக ! குர்பானியை தவிர்த்துவிட்டு புலாலின் அவசியத்தையும், பலன்களையும் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். ஜஸாக்கல்லாஹ்
மாஷாஅல்லாஹ் ஐந்து அறிவு ஜிவன்கள் விசயத்தில் நபி(ஸல்)காட்டிய கருனை
Enter your comment... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உங்கள் இந்த பதிவை நான் என் முகநூல் பக்கத்தில் பதிவிடுகிறேன் உங்களுக்கு எந்த அப்ஜக்ஷன் இல்லையே
Enter your comment... இன்னும் உங்களுடைய மிகச் சிறந்த பதிவுகளை நான் அதைவிட இருக்கின்றேன் தடை இருந்தால் தெரிவித்து விடுங்கள் நிறுத்தி விடுகிறேன்
Enter your comment...இமாம் கஸ்ஸாலி ( ரஹ் ) அவர்கள் உலகம் போற்றும் ஒரு மாமேதை அவர்கள் எழுதிய நூற்கள் அனந்தம் . . அனந்தம் .
அவர்களது வஃபாத்திற்குப் பிறகு அவர்களை ஒரு நண்பர் கனவில் கண்டு கேட்டார் :
"இமாம் அவர்களே தங்களின் நிலை எவ்வாறு உள்ளது ? தங்களை ரப்பு எவ்வாறு நடத்தினான் . ? இந்தக் கட்டுரையில் இந்த சம்பவம் மட்டும் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை இதைத் தவிர்த்து இருந்தால் நல்லா இருந்திருக்கும்
Post a Comment